”அந்த ஜான் பிரிட்டோ நான் இல்லை” : லீமா ரோஸின் சகோதரர் பேட்டி!

Published On:

| By Kavi

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும்  சம்பந்தமில்லை என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ  விளக்கமளித்துள்ளார். 

ரூ. 250 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ‘ஜான் பிரிட்டோ’ மூளையாகச் செயல்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. 

ADVERTISEMENT

இந்தசூழலில் அமலாக்கத் துறை குறிப்பிட்ட அந்த ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அதிமுக எம்,எல்.ஏ லீமா ரோஸின்  உறவினர் என்று தகவல் வெளியானது. 

இந்தசூழலில் இதற்கு மறுப்புத் தெரிவித்தும், இவ்வாறு அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுகக் கோரியும்  ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் அதிமுக எம்.எல்.ஏவுமான லீமா ரோஸின் சகோதரர்  ஜான் பிரிட்டோ  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 9) புகார் அளித்தார். 

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சமூக வலைத்தளங்களிலும் யூடியூபிலும் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை.  எனக்கோ எங்களது குடும்பத்தினருக்கோ போதைப்பொருள் வழக்குடன் எந்தவித தொடர்பும் இல்லை. பேர் ஒரே மாதிரியாக இருப்பதால் என்னை தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவில் ஒரு வழக்கு உள்ளது. ஆனால் அது முற்றிலும் லாட்டரி சம்பந்தப்பட்ட ஒரு வழக்கே தவிர, போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்கு அல்ல. அதில் என் பெயர், என் மனைவி பெயர், என் மச்சான் பெயர் மட்டுமே உள்ளது. 

ADVERTISEMENT

போதைப்பொருளுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு. 

இதுதொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்திருக்கிறோம்.  ஸ்ரீ ஐயர், மாரிதாஸ் உள்ளிட்ட 51 பேர் பொய்யான தகவலை யூடியூபில் பரப்பியிருக்கிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார். 

திமுக ஐடி விங்கிலும் போட்டிருக்கிறார்களே என்ற கேள்விக்கு, ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  இப்படி எங்களை லிங்க் செய்கிறார்கள்.  நாங்கள் விளம்பரத்துக்காக சன் டிவிக்கெல்லாம் பணம் கொடுத்திருக்கிறோம். அவர்கள் எல்லாம் செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம். சிலர்  தவறுதலாக போட்டிருக்கலாம்” என்றார். 

இந்தத் தவறான செய்திகளால் தனது மனைவியும் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது கொண்டிருப்பதாகவும், அதனால் தான் உடனடியாக வந்து இப்புகாரை அளித்ததாகவும் வேதனை தெரிவித்த அவர், ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தவறான தகவல்களைப் பரப்புபவர்களை நம்பாமல், எங்களிடம் நேரடியாக விளக்கம் கேட்டு உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும்’ என பத்திரிகையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கோயம்புத்தூரிலும் தங்களது தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share