எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைத்தான் எடுக்க வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்துக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பரந்தூரில் விவசாயிகளின் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி, புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். பரந்தூரில் அரசால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்குத் திரும்பி வழங்கப்படுமா என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு, கைப்பற்றப்பட்ட நிலம் மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். மேலும், பரந்தூருக்குப் பதிலாக ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா ரெட்டி, “ஓசூரில் விவசாய நிலங்களை எடுத்து விமான நிலையம் கட்டக்கூடாது. பரந்தூரைப் போல ஓசூரிலும் விவசாயிகளின் குரலை அரசு கேட்க வேண்டும்; விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் விவசாயிகளின் நிலத்தை அளித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ” என்று பேசினார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலங்களைத்தான் எடுத்தாக வேண்டும்; வேறு வழியே கிடையாது. அதே நேரத்தில், பொருளாதாரம் வளர்வதற்கு ஓசூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் வளர்ச்சி உருவாகும், திட்டங்கள் உருவாகும்; அதனால்தான் அங்கு எடுக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக ஐ.டி. விங் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக ஐ.டி. விங் எக்ஸ் பதிவில்,
“எந்தத் திட்டமாக இருந்தாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதுதான் வழக்கம் எனக் கூறும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே!
பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம்?
ஓசூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயமா?
என்னங்க சார் உங்க சட்டம்!
என்னங்க சார் உங்க திட்டம்! — விஜய்”
எனப் பதிவிடப்பட்டுள்ளது.
