டிஜிட்டல் திண்ணை: அடுத்த பிரதமர் யார்? பாஜகவின் ‘அதகள’ ஸ்கெட்ச்.. மத்திய அமைச்சரவையில் திமுக? விஜய் மீது ’செம்ம கடுப்பில்’ காங்கிரஸ்!

Published On:

| By Minnambalam Desk

Next PM – மத்திய அமைச்சரவையில் திமுக, விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி குறித்த அரசியல் கொலாஜ்

வைஃபை ஆன் செய்ததும், “களங்கள் புதிது.. முகங்கள் புதிது.. கோட்டை கொத்தளம் காத்திருக்கு நண்பா!”ன்னு வசனத்தை ஒப்புவித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. வசனம் எல்லாம் வாசிக்கிறீங்க?

2029 எலக்‌ஷனுக்கு இப்பவே ஒத்திகை பார்க்க வேண்டியதுதான்.. நாம இப்ப பேசப் போறதும் 2029 எலக்‌ஷனை பத்திதான் ப்ரோ..

ADVERTISEMENT

இந்தியா டுடே- சி வோட்டர்ஸ் ”Mood of Nation”ன்னு வழக்கமா நடத்துற கருத்து கணிப்பை பொதுவாக யாரும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க. .ஏன்னா ஆண்டுக்கு 2 முறை நடத்துற அந்த கருத்து கணிப்பில மோடிக்கு எத்தனை சதவீதம்? ராகுலுக்கு எத்தனை சதவீதம்? ஆதரவுன்னு சொல்வாங்க.. இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணி எத்தனை இடம் பிடிக்கும்? மாநில கட்சிகள் எத்தனை இடங்களில் ஜெயிப்பாங்க? காங்கிரஸுக்கு எவ்வளவு கிடைக்கும்?ன்னு சொல்வாங்க.. எப்பவுமே மோடிக்கு அதிக சதவீதம்/ பாஜகவுக்கு அதிக இடங்கள்/ 2-வது இடம் மாநில கட்சிகள்/ 3-வது இடம் காங்கிரஸ்ன்னு சொல்லப்படும்.. சதவீதம் மட்டும் லேசா மாறும்.

இந்தியா டுடே சர்வே சொன்னது என்ன?

ஆனா ‘இந்தியா டுடே’-ன் ”Mood of Nation” சர்வே ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.. ஏன்னா அடுத்த பிரதமர் யார்? அப்படிங்கிற ரேஸில் இந்த முறை சிஎம் விஜய்யை சேர்த்துட்டாங்க.. மோடிக்கு 48.7%; ராகுல் காந்திக்கு 27.1% ஆதரவுன்னு சொன்னதுடன் விஜய்க்கு 9.2% பேர் ஆதரவு தெரிவிக்கிறாங்கன்னும் இந்த சர்வே ரிசல்ட்டில் சொல்லப்படிருந்தது.

ADVERTISEMENT

தொகுதிகளைப் பொறுத்தவரைக்கும் பாஜகவுக்கு 261; மாநில கட்சிகளுக்கு 176; காங்கிரஸுக்கு 106 சீட் கிடைக்கும்னு ‘இந்தியா டுடே’ சர்வே சொல்லுது..

அதாவது பாஜகவுக்கு 2029 தேர்தலிலும் ஆட்சி அமைக்க தேவையான் 272 இடங்கள் கிடைக்காது அப்படிங்கிறதையே இந்தியா டுடே சர்வே சுட்டிக்காட்டுதுங்க ப்ரோ..

ADVERTISEMENT

சிஎம் விஜய் டூ பிஎம் விஜய்?

டெல்லியிலும் சென்னையிலும் இதை பத்திதான் சீரியஸ் டாக்ஸ் ஓடுகிட்டு இருக்கு..

இதை பத்தி விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “2029 எலக்‌ஷன்ல நாங்க தவெக தனிச்சு போட்டியிடும் நிலைமை வரும்; தென் மாநிலங்களிலும் நிற்போம்.. அப்ப மொத்தமா எங்களுக்கு 60 சீட் வரும்; சிஎம் விஜய், பிஎம் ஆகுற சான்ஸ் இருக்குன்னு- எங்க ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் சொல்லிகிட்டு இருக்கிறாரு.. நாங்களும் இந்தியா டுடே சர்வே ரிசல்ட் பார்த்தோம்.. இன்னும் டைம் இருக்குங்க.. பேசுவோம்”ன்னு பூடகமாகவே சொல்றாங்க ப்ரோ..

மீண்டும் மோடி இல்லை?

டெல்லியில பாஜக மூத்த தலைவர்களிடம் பேசுறப்ப, “இந்த சர்வே ரிப்போர்ட் எங்களுக்கு எந்த அதிர்ச்சியையும் தரலை.. ஏன்னா இந்த மாதிரி 2029-ல் நடக்கும்னு எங்களுக்கு ஏற்கனவே ரிப்போர்ட் வந்துருக்கு.. நாங்களும் அதுக்கு தகுந்த மாதிரி வேலைகளை தொடங்கவும் செஞ்சுட்டோம்..

பொதுவாக பாஜகவில 75 வயதுக்கு மேல முக்கிய பதவிகள் தரப்படுறது இல்லை.. கட்சியை உருவாக்குன அத்வானிக்கும் சீனியர் லீடர் முரளி மனோகர் ஜோஷிக்கும் இது அப்ளை செஞ்சோம்.. மோடியும் 75 வயசை கிராஸ் செஞ்சுட்டாரு.. இருந்தாலும் அவருக்கு மட்டும் விதிவிலக்கா இந்த டைம் பதவியில நீடிக்கிறார்.

மோடியையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்துறதை ஆர்.எஸ்.எஸ். ஏத்துக்காது.. அப்படி மோடியை மீண்டும் பிரதமராக்கிட்டா அவரு சர்வாதிகாரியா மாறிடுவாருன்னு நினைக்குது ஆர்.எஸ்.எஸ்.

அது மட்டும் காரணம் இல்லை.. மோடி முகத்தை காட்டி மறுபடியும் ஓட்டு வாங்கிடவும் முடியாதுன்னு எங்க எல்லாருக்குமே தெரியும்.. அதே மாதிரி 2024-ல் வாங்குன 240 சீட்டுகளை மறுபடியும் வாங்க முடியுமா? அப்படிங்கிறதும் எங்களுக்கு சந்தேகமாகத்தான் இருக்கு..

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்?

சரி அப்ப அடுத்த பிரதமர் வேட்பாளர் யாருன்னுதான் கேட்பீங்க? மோடி டீம்ல இருக்கிற அமித்ஷா, இப்பவே 75 வயதாகும் ராஜ்நாத் சிங் இவங்க எல்லாமே ஆர்.எஸ்.எஸ் லிஸ்ட்ல இல்லை. நிதின் கட்காரி பேரு அடிபட்டாலும் அவருக்கு இப்பவே 69 வயசு.. அவரும் நான் பிரதமர் வேட்பாளர் ரேஸில் இல்லைங்கிறார்..

பிரகலாத் ஜோஷி

இப்போதைக்கு ஆர்.எஸ்.எஸ்.-ன் சாய்ஸா இருக்கிறது மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிதான். சின்ன வயசில் இருந்தே தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.. காங்கிரஸும் ஜனதா கட்சியும் கோலோச்சுன கர்நாடகாவுல பக்காவா ஸ்கெட்ச் போட்டு பாஜகவை வளர்த்து ஆட்சியில உட்கார வெச்சுதல பிரகலாத் ஜோஷியின் பங்களிப்பு ரொம்ப முக்கியமானது.. ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளில்ல இம்மி கூட மாறாதவர்.. அதனால அவருதான் எங்களோட அடுத்த பிரதமர் வேட்பாளராக இருப்பார்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. எங்களுக்கு வந்த கிரவுண்ட் ரிப்போர்ட்ஸ் எல்லாமே, இப்ப இந்தியா டுடே சர்வே சொல்லி இருக்குது இல்லையா? மாநில கட்சிகள் அதிகமான இடங்களை வாங்கும்னு.. அதுதான் எங்களுக்கும் வந்த ரிப்போர்ட்.

நாங்க தனிப் பெரும்பான்மையுடன் அல்லது மறுபடியும் கூட்டணி ஆட்சியை 2029-ல் அமைக்க முடியாம போனா அதுக்காக சும்மா இருந்துட முடியுமா?

மாநில கட்சிகளுக்கு ஆதரவு

அதிகமான இடங்களை மாநில கட்சிகள் வாங்குனா என்ன செய்யுறதுன்னு இப்பவே அதுக்கும் ஒர்க் பண்ணிகிட்டுதான் இருக்கிறோம். ஏன்னா, எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சி அட்வான்டேஜ் எடுத்துகிட்டு தலையை தூக்கிடவே கூடாது அப்படிங்கிறதுல உறுதியா இருக்கிறோம்.

அதனால மாநில கட்சிகள் அதிக இடம் வாங்குனா.. அவங்க ஆட்சி அமைக்க பாஜக தாராளமா ஆதரவு தரும். இன்னும் சொல்லப் போனா நாங்க விரும்புறவங்கதான் அடுத்த பிரதமராகவும் இருப்பார்”ன்னு ”பெரிய ஸ்கெட்ச்” பத்தி மறைமுகமான சொன்னாங்க ப்ரோ..

சரிங்க ப்ரோ.. அப்படி ‘பாஜக ஆதரவு பெற்ற பிரதமர்’ யாராக இருக்க சான்ஸ் அதிகம்?

2029-ல் காங்கிரஸை கழற்றிவிட்டு தவெக தனியா நிற்கப் போகுதுன்னு அவங்க கட்சி ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் சொல்றதா சொல்லிகிட்டு இருக்காங்க.. ஆனால் “ஜோசப்”விஜய்யை பாஜக எப்படி அக்செப்ட் பண்ணும் அப்படிங்கிற கேள்வி இருக்கு.

அகிலேஷ் யாதவை குறி வைக்கும் பாஜக

இதை பத்தி டெல்லியில சீனியர் எம்.பி.க்கள்கிட்ட பேசுனப்ப, “நீங்க சொல்றது சரிதான்.. பாஜக தான் ஆட்சி அமைக்க முடியாம போனால் தன்னோட ஆதரவுல ஒரு ஆட்சியை உருவாக்கத்தான் முயற்சிக்கும்.. காங்கிரஸை ஒழிச்சுகட்டனும்தான் நினைக்கும்..

எங்களுக்கு கிடைச்ச தகவல்கள் என்னான்னா, “சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் பாஜக தரப்புல பேச்சுவார்த்தை நடத்தி இருக்காங்க.. “நீங்க ஏன் பிரதமர் வேட்பாளராக” நிற்கக் கூடாது? “நீங்க அப்படி இறங்குனா நாங்க முழு ஆதரவு தர்றோம்”-ன்னு அகிலேஷிடம் பாஜக பேசியிருக்கு..

அத்துடன், “காங்கிரஸுடன் நீங்க கூட்டணி சேர வேண்டாம்.. காங்கிரஸை கழற்றிவிட்டு தனித்தே நில்லுங்க..”ன்னும் அகிலேஷ் யாதவுக்கு அட்வைஸ் செஞ்சிருக்காங்க பாஜக லீடர்ஸ்.

அகிலேஷ் யாதவும், “ இந்தியாவிலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் அப்படின்னு அறிவிச்சது திமுகதான்.. ஸ்டாலின்தான்.. திமுகவின் முழு சப்போர்ட் காங்கிரஸுக்கு இருந்ததால அந்த கட்சியால அகில இந்திய அளவில் லீடர்ஷிப் ரோலை தக்க வைக்கவும் முடிஞ்சது.. இந்தியா கூட்டணி அப்படிங்கிற ஒரு ப்ரண்ட்டை லீட் பண்ணவும் வாய்ப்பு கிடைச்சது.. ஆனா அப்படிப்பட்ட திமுகவின் முதுகில குத்திட்டாரு ராகுல் காந்தி.. காங்கிரஸ் கட்சி நிச்சயமா நம்பகமாகன கட்சியாக இருக்கவே இருக்காது அப்படிங்கிறதுக்கு திமுகதான் சாட்சி.. நீங்க சொல்ற பிரதமர் வேட்பாளர் பத்தி நாங்களும் ஸ்டடி பண்றோம்”ன்னு அப்படின்னு பதில் சொல்லியிருக்கிறார்.. இதையே சில மாநில கட்சிகளின் லீடர்ஸ்கிட்டேயும் அகிலேஷ் யாதவ் சொன்னாரு”ன்னு ஷேர் பண்ணாங்க ப்ரோ.

ஓஹோ.. அப்ப திமுகவோட ரோல் என்னங்க ப்ரோ?

இதை பத்தி நாம விசாரிச்சதுல, “சட்டசபை கூட்டம் முடிஞ்சதும் திமுகவோட 8 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதுன்னு முடிவில இருக்கிறார் சிஎம் விஜய். இதற்கான எல்லா வேலைகளும் ஜரூராக நடந்துகிட்டு இருக்கு. எல்லா ஆவணங்களையும் தெளிவாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு விஜய் உத்தரவு போட்டிருக்கிறார்..

அப்படி 8 திமுக மாஜி அமைச்சர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்கனும்னா ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் தரனும்.. ஒருவேளை ஆளுநர் ஒப்புதல் கொடுத்து FIR போட்டாச்சுன்னா அதை பேஸ் பண்ணியே அமலாக்கத்துறையும் திமுக மாஜிக்களுக்கு எதிரா களமிறங்கும்.

மத்திய அமைச்சரவையில் திமுக?

இப்படி ஒரே நேரத்தில எல்லாரும் திமுகவுக்கு எதிராக இறங்கக் கூடும் அப்படிங்கிற தகவலை வைத்து ஸ்டாலின் டிஸ்கஷன் நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனை கூட்டத்துல, “ இந்த மாதிரி நெருக்கடி வராம இருக்க சில மூவ்ஸ் செஞ்சுதான் ஆகனும்.. அதுக்காக பாஜக தலைமையிலான கூட்டணி சேரவும் முடியாது. மோடி கேபினட்டில் நாம் இடம் பெறவும் முடியாது.

அதுக்கு பதிலாக, முக்கியமான சில விஷயங்களில் ஒன்றிய அரசு முடிவெடுக்கும் போது ஆதரவு தரலாம். அது அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கும். அந்த லிமிட்டுடன் நிற்போம்.. பொலிட்டிக்கலாவும் ‘ஆதரவு வேற.. கூட்டணியில- அமைச்சரவையில சேர்றது வேற’ன்னு ஃபேஸ் செய்யவும் முடியும்”னு சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்”ன்னு பகிர்ந்துகிட்டாங்க ப்ரோ..

தவெக- காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு?

இதே ‘இந்தியா டுடே’ சர்வே தவெக- காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வெச்சுகிட்டே இருக்குறதையே அடுத்தடுத்த சம்பவங்களும் சொல்லுதுங்க ப்ரோ..

அதாவது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்னு காங்கிரஸ் களத்துல நிற்கிறப்ப காங்கிரஸின் கூட்டணி கட்சியான தவெக, விஜய்தான் பிரதமர் வேட்பாளர்னு ரேஸில் சேர்ந்ததை காங்கிரஸ் ‘தலைகள்’ யாரும் ரசிக்கலை.. அதனால்தான் கன்னியாகுமரியில் பேசுன அமைச்சர் ராஜேஷ்குமார், “பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏத்துக்கலைன்னா விஜய் அமைச்சரவையில் இருந்து 2 காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்வோம்”ன்னு பகிரங்கமாக எச்சரிக்கை விட்டாரு..

திமுக மீது காங்கிரஸின் திடீர் பாசம்

சட்டசபையில திடீர்னு, காங்கிரஸ் குழு தலைவர் தாரகை கத்பர்ட்டுக்கு ‘எதிர்க்கட்சி தலைவர்கள்’ வரிசையில் இடத்தை சபாநாயகர் ஒதுக்கினாரு.. ராஜேஷ்குமார் அப்படி எச்சரிக்கை விட்ட மறுநாளே இன்னைக்கு சட்டசபையில இப்படி காங்கிரஸ் தலைவருக்கு எதிர்க்கட்சி வரிசை ஒதுக்குனது இன்னும் பரபரப்பை ஏற்படுத்துச்சு.. ஆனா சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “தாரகை கத்பர்ட் காங்கிரஸ் குழு தலைவர்.. அதனால அவருக்கு முன் வரிசை இடம்”ன்னு சொன்னார்..

அதே நேரத்தில மானிய கோரிக்கை மீது பேசுன தாரகை கத்பர்ட், “நம்முடைய அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், நான் வெற்றிபெற வேண்டும் என்று தன்னுடைய மகனை எங்களுடைய தொகுதிக்கு அனுப்பி என்னை வெற்றிபெறச் செய்து வைத்தார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இங்கே வரக் கூடாது என ஸ்டாலின் நினைத்தார். அதற்கும் சேர்த்துதான் இன்றைக்கு தவெகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம்”ன்னு ஆரம்பிச்சு ரொம்பவே திமுக மேல பாசமழையை கொட்டிட்டாங்க..

அங்கிட்டு பாஜக பக்கம் திமுக போகுமா? போகாதா?ன்னு பட்டிமன்றம்; இங்கிட்டு தவெக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? நீடிக்காதா? திமுகவிடம் மீண்டும் காங்கிரஸ் ஆதரவு நீட்டுதோ?ன்னு இன்னொரு பட்டிமன்றம்.. இதை எல்லாம் பார்க்குறப்ப 2029 எலக்‌ஷனுக்கு முன்னாடி ஏகப்பட்ட ‘அதிரடி தடாலடி திருப்பங்கள்’ தமிழ்நாட்டுல நடக்கப் போறது மட்டும் நிச்சயம்னு தெரியுதுங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share