TN Assembly Debate: தமிழகச் சட்டசபையில் சக அமைச்சரிடம் அமைச்சர் விக்னேஷ் கேள்வி எழுப்பியதால் சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. “கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் மற்றொரு அமைச்சரிடம் கேள்வி கேட்க விதியில்லை” என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், மகாமகத் திருவிழாவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பதிலளிக்க அனுமதித்தார்.
சக அமைச்சரிடம் கேள்வி கேட்ட அமைச்சர் விக்னேஷ்
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 31) நடந்த விவாதம்:
அமைச்சர் விக்னேஷ்: குடந்தை மாநகரில் (கும்பகோணம்) 2028-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் திருவிழாவுக்கான பணிகளை விரைவில் தொடங்குமாறு, கும்பகோணம் தொகுதி மக்கள் சார்பாகத் தங்கள் வாயிலாக அறநிலையத் துறையைக் கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சர்கள் கேள்வி கேட்க விதியில்லை
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: அமைச்சர்கள் கேள்வி கேட்க முடியாது. அமைச்சர்கள் பொதுவாக மற்றொரு அமைச்சரிடம் கேள்வி கேட்க முடியாது. இருந்தாலும், நீங்கள் மகாமகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் இதை அனுமதிக்கிறேன். மாண்புமிகு அமைச்சரிடம் பதில் இருந்தால் உடனே சொல்லுங்கள்.
அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன்: அமைச்சர்கள் கேள்வி நேரத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினையை முன்வைத்து மற்றொரு அமைச்சரிடம் கேள்வி கேட்பது மரபாக இல்லை.
திமுக முன்னாள் அமைச்சர் கோவி செழியன்: தமிழக சட்டமன்ற மரபிலோ வழக்கத்திலோ ஓர் அமைச்சர் கேள்வி கேட்டு, அதற்கு மற்றொரு அமைச்சர் பதில் சொன்னதாக முன்னுதாரணம் இல்லை.
நீங்கள் குறுக்கிட்டு, “இதை ஒரு செய்தியாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினீர்கள். அவை முன்னவரும் ஒரு கருத்தைத் தெரிவித்தார். எனவே, கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் கேள்வி கேட்கலாமா அல்லது இதையே கடைசிக் கேள்வியாக நிறுத்திவிடுவீர்களா என்பதைத் தங்களது இறுதி முடிவாக அறிய விரும்புகிறேன்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: கேள்வி நேரத்தில் மரபுப்படியும் விதிப்படியும் மாண்புமிகு அமைச்சர்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதுதான் விதி. ஆனால், இப்போது அவர் எழுப்பியதை ஒரு கேள்வியாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அதற்கு நேரடியான பதிலும் சொல்ல வேண்டாம்.
பொதுவாக மகாமகம் நெருங்கி வருகிறது. அது தொடர்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற ஆர்வத்தில், அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் கேட்டிருக்கிறார்.
பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் மகாமக ஏற்பாடுகள் குறித்து மாண்புமிகு அமைச்சரிடம் ஏதேனும் விளக்கம் இருந்தால் தெரிவிக்கலாம். நானே கேட்கிறேன்; நீங்கள் பதில் சொல்லுங்கள்.
மகாமகம் 2028 பணிகள் எப்போது தொடங்கும்?
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்: உலகப் புகழ்பெற்ற மகாமகத் திருவிழா 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே முதலமைச்சருடன் ஆலோசனை செய்திருக்கிறேன்.
மாவட்ட ஆட்சியர் மூலமாக மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மகாமகத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்திருக்கிறோம்.
மகாமகத்தை முன்னிட்டு, எந்தெந்தக் கோயில்களில் இன்னும் குடமுழுக்கு நடத்த வேண்டியிருக்கிறதோ அவை அனைத்தையும் ஆய்வு செய்வதற்காக மரபுசார் நிபுணர் குழுவை ஏற்கெனவே கும்பகோணத்திற்கு அனுப்பியிருக்கிறோம். அந்தக் குழுவினர் கோயில்களை ஆய்வு செய்து, எந்தெந்தப் பழமையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அவற்றை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள்.
மகாமகத்திற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் விரைவாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த முறை மகாமகத் திருவிழா மிகப் பெரிய அளவில், உலகப் புகழ்பெறும் வகையிலும் இந்தியாவே பாராட்டக்கூடிய வகையிலும் தமிழ்நாட்டில் நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.
