விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது தவெக வினரின் ஆசையாக இருக்கலாம். இதை சிரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில்,”சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் லாவணி கச்சேரி மன்றம் போல் செயல்படுகின்றன. இதிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர சபாநாயகர் தீவிர முயற்சி மேற்கொண்டாலும், இரு தரப்பினரும் அதை ஏற்க மறுத்து வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மானியக் கோரிக்கைகளுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களைப் பேசுவதால் சட்டமன்றத்தின் மதிப்பு குறைகிறது.
சட்டமன்றத்தை ஆக்கபூர்வமாக நடத்துவதில் மற்ற எல்லோரையும் விட ஆளுங்கட்சிக்குத் தான் கூடுதல் பொறுப்பு உள்ளது. அமைச்சர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதும், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் தவறானது. ஒவ்வொரு முறையும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருந்து தகவல்கள் நீக்கப்படுவது அதிகரித்துள்ளது. சபை குறிப்பில் இருந்து கருத்துக்களை நீக்குவது என்பது எப்போதாவது நடக்கும் ஒன்று, ஆனால் தற்போது சபை குறிப்பில் இருந்து நீக்குவது சபாநாயகரின் அன்றாட வேலையாகிவிட்டது. இது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கோ ஆளும் கட்சிக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் அல்ல. இதை உணர்ந்து அமைச்சர்கள் கவனத்தோடு பேச வேண்டும். சபாநாயகரும் மானியக் கோரிக்கையை மீறி யார் பேசினாலும், குறுக்கிட்டு கடுமையாகத் தடுத்து சபையைக் கட்டுக்கோப்பாக நடத்த வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யை தவெக கட்சியினர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தவெக கட்சியினர் தங்கள் விருப்பத்தையும் ஆசையையும் தெரிவித்துள்ளனர்; இதை சிரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என்றார்.
மேலும், அமைச்சர் ராஜேஷ்குமார் விஜய், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிய வேண்டும் என கூறியது குறித்த கேள்விக்கு, “இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும், அது அவர்களின் கட்சி பிரச்சனை. இந்தியா போன்ற பரந்த நாட்டில், ஒரு மாநிலத்தில் மட்டும் இருக்கும் கட்சி உடனடியாக மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது. அப்படி நினைப்பது அந்த கட்சியினரின் தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம்” என்றார்.
