ஸ்ரீராம் திருவரங்கம்
இன்றைய இளைய ஆட்சியாளர்களிடம் புதிய சிந்தனைகளுக்கான திறந்த மனப்பான்மை இருக்கும் என நம்புகிறேன். அதனால், நீண்ட நாட்களாக எனக்குள் ஆழத் தங்கியிருக்கும் யோசனை ஒன்றை துணிந்து முன் வைக்க முனைகிறேன்!
எனதருமை ஆட்சியாளர்களே… கவனியுங்கள்!
உங்களுக்கு இன்று ஆளக் கிடைத்திருப்பது சாதாரண நிலப்பரப்பல்ல ! இது, ஏறத்தாழ ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகம்! அதில் வாழும் மக்களோ ஏறத்தாழ எட்டு கோடி!
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்
எது முறை?
எட்டு கோடி மக்களுக்கும் நியாயம் செய்ய வேண்டியதொரு அரசாங்கத்தின் தலைமையகம், வெறும் 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெரிசலான சென்னையில் மட்டுமே அமைந்திருப்பது முறையாகுமா?
இதுதான் இக்கட்டுரையின் ஆதாரக் கேள்வி!
ஆங்கிலேயர்கள் ஆண்ட அன்றைய நாளில், அவர்கள் மதராஸ் என்னும் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு நிர்வாகம் செய்ய முனைந்த நியாயத்தை புரிந்து கொள்ள முடிகிறது!
ஆனால், சுதந்திரம் பெற்று – மாநில சுயாட்சி கொண்டு மக்கள் தொகையும் – கட்டமைப்பும் – வாழ்வாதாரமும் – தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் இன்றைய நாளில் மக்களுக்கான அரசாங்கமானது அதே இடத்தில் இருந்து கொண்டுதான் ஆட்சி செய்ய வேண்டுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
காங்கிரஸ் மற்றும் எம்.ஜி.ஆர். காலம் !
1960 களில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்துக்கே சென்னை மிதமிஞ்சி பிதுங்கி வளர்ந்து வருகின்றது என்னும் அச்சம் மிகுந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். ஆண்ட 1980களில் திருச்சியைத் தலைநகரமாக அமைத்துவிட்டால் என்ன என்னும் யோசனை வலுப்பெற்றது. ஆனால், பற்பல திசைகளில் இருந்து அதற்கு எதிர்ப்பு எழுந்தது.
தலைநகரச் சென்னையின் வரலாற்று முக்கியத்துவம் போய்விடுமே, நிர்வாகக் கட்டமைப்பு, அரசு அலுவலகங்கள் மற்றும் பணியாளர்களை இடமாற்றுவதில் உள்ள அளவற்ற செலவுகள், அதன் சிரமங்கள் எல்லாம் கூடிவிடுமே எனப் பெரும் கண்டனங்கள் எழ, அந்த எண்ணம் அந்த நாளிலேயே கைவிடப்பட்டுவிட்டது. அதில் ஓரளவு நியாயமும் உள்ளது.
காலங்கள் கடந்தோடி விட்டன. காட்சிகள் மாறி விட்டன. தொழில் நுட்பமானது இன்று ஒட்டுமொத்த உலகையும் சிறியதொரு கிராமமாக மாற்றிவிட்டது.
இன்று – அரசாங்க அலுவல்கள், நிர்வாகத் தகவல்கள், கோப்புகள், தரவுகள், காணொலி மாநாடுகள், மின்னணு சேவைகள் என நிர்வாகத்தின் பெரும்பகுதியை நேரடியாகவும் உடனடியாகவும் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் யாவும் நம்மிடம் இருக்கின்றன.
அப்படியிருக்க, தமிழகத்தின் முக்கியமான அரசாங்க நிர்வாக அமைப்புகளையும், அதிகார மையங்களையும் சென்னையில் மட்டுமே குவித்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை!
அதிகாரத்தை அழகாக பரவலாக்கி விட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கவனியுங்கள்!
சென்னையின் முக்கியத்துவத்தை குறைப்பது நமது நோக்கமல்ல. மாறாக, சென்னையின் மீது குவிந்திருக்கும் நிர்வாகச் சுமையைப் பகிர்வதே ஆகும்.
ஆம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க நிர்வாகப் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதும் – அதன் மூலம் நாம் காணும் பலன்களை அடுக்கிச் சொல்வதும் எனது கடமையாகிறது.
இன்றைய தமிழக அரசாங்கத்தின் கீழ்…
சுகாதாரம் மற்றும் குடும்பம் – வேளாண்மை மற்றும் உழவர் நலம், தொழில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, ஊராட்சி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, சமூக நலன், மகளிர் உரிமை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் நலம்,
சிறுபான்மையினர் நலம், சுற்றுச்சூழல், வனத்துறை, பால்வளம், மீன்வளம், உணவு,நுகர்வோர் பாதுகாப்பு,கூட்டுறவு,வணிக வரி,பத்திரப்பதிவு, இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சி, செய்தி, சுற்றுலா, கைத்தறி, வீட்டு வசதி, சட்டம் உட்பட ஏறத்தாழ 41 துறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பெரிய பெரிய துறைகள்.
மேற்கண்ட துறைகளில் நாட்டு மக்களுக்கு எந்தக் குறைகள் இருந்தாலும் அதனைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் சென்னையை நோக்கித்தான் படையெடுத்தாக வேண்டும்.

தங்களது விண்ணப்பங்களோடு ஏறத்தாழ 300 கிலோமீட்டர் முதற்கொண்டு 600 கிலோமீட்டர் வரை பயணப்பட்டு, நெரிசலான சென்னையில் அறை எடுத்துத் தங்கி, அங்குமிங்குமாக அல்லாடி, ஒருவழியாக கோட்டைக்குள் புகுந்து, அங்கே சுற்றித் திரியும் இடைத் தரகர்களையும் கடந்து, துறை தேடி நியாயம் கேட்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.
மேற்கண்ட சில துறைகளுக்கான மாவட்ட அலுவலகங்களும் – குறைதீர்க்கும் அமைப்புகளும் ஆங்காங்கே இருந்தாலும், மாநில அளவிலான முக்கிய முடிவுகள், நிர்வாக அனுமதிகள், மேல்முறையீடுகள் மற்றும் இறுதி அதிகாரத்தை நாட வேண்டிய சூழலில், பல மாவட்ட மக்களும் சென்னையை நோக்கியே பயணிக்க வேண்டியிருப்பது முடிவெடுக்கும் அதிகாரம் பெருமளவு சென்னையிலேயே குவிந்திருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பகட்டான சென்னைக்கு வலியோரால் வந்து விட முடியும். எளியோரின் கதி?
நாடெங்கிலும் எத்தனை எத்தனை ஏழைகளின் நியாயமான கோரிக்கைகள் குமைந்து குமைந்து அழுந்தி மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும்!
அப்படியான அந்த அதிகார குவிப்புகளை இன்றைய ஆட்சியாளர்கள் மனது வைத்தால் அழகாக விரிவுபடுத்தி விட முடியும்.
அதற்கான தீர்வை தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்ட இந்த நாளில் நாம் நாடியாக வேண்டும்.
மேற்கண்ட துறைகளில் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நிர்வாகத் துறைகளை மட்டும் முதலமைச்சர் அலுவலகத்துடன் சென்னையில் வைத்துக்கொண்டு…
மற்ற துறைகளின் தலைமை அலுவலகங்களை, அந்தந்தப் பகுதிகளின் தேவைகளையும் சம்பந்தப்பட்ட துறைகளின் தன்மைகளையும் பொருத்திப் பார்த்து.
கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், வேலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், காரைக்குடி போன்ற முக்கியமான பிராந்தியக் கேந்திரங்களில் பிரித்து அமைக்கலாம்.
தலைநகரம் சென்னையாக நீடிக்க பிராந்தியத் தலைமையகங்கள் அதன் ஆதார மையங்களாக ஆகப்பெரும் தூண்களாக மிளிரவேண்டும் என்பதுதான் நோக்கம்.
உதாரணமாக ஒரு மாதிரி வடிவத்தைக் காண்போம்:

சென்னையை தலைநகரமாக வைத்துக் கொண்டு முதலமைச்சர் அலுவலகம், நிதி, உள்துறை, பொதுநிர்வாகம் போன்ற முக்கிய ஒருங்கிணைப்பு துறைகளின் தலைமையகமாக இருத்திக் கொண்டு…
கோயம்புத்தூரில் தொழில் மற்றும் MSME போன்றவைகளின் தலைமையகம்
திருச்சியில் வேளாண்மை, நீர்வளம் நிர்வாகங்களின் தலைமையகம்
மதுரையில் சுகாதாரம், சமூகநலம் சார்ந்த நிர்வாக தலைமையகம்
தூத்துக்குடியில் துறைமுகம், கடல்சார் பொருளாதார தலைமையகம்
திருப்பூரில் ஜவுளி, தொழில் சார்ந்த நிர்வாகத் தலைமையகம்
என்பன போன்று அதிகாரப் பரவலாக்கம் அமைந்து விட்டால் இதுகாறும் கிடைக்காத பற்பல பலன்கள் தமிழகத்துக்கு கிடைத்து விடும் என ஆழமாக நம்ப முடிகிறது!
பெருகும் பலன்கள்!
அரசு அலுவல்களுக்காக ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு மாவட்டத்தைத் தேடிச் செல்லச் செல்ல…
அவர்கள் பயணிக்கும் உள்ளூர் போக்குவரத்து வாகனங்கள், உணவருந்தும் இடங்கள், தங்கும் ஹோட்டல்கள், பழக்கடைகள், கோயில்கள், பெட்டிக் கடைகள் உட்பட பற்பல வியாபாரங்களும் பெருகும் வாய்ப்பமையும். பணப் புழக்கம் பரவலாகும்.
ஆங்காங்கே புதிய புதிய மனிதர்களைக் கண்டு நல்ல நல்ல தொடர்புகளைப் பெறுவார்கள். மனிதர்களுக்கு இடையேயான நட்பு பெருகும்.
புதிய புதிய தொழில்கள் உருவாக வாய்ப்பு அமையும். வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் புதிய சந்தைகளைப் பெறும். தனிநபர் வருமானம் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகும்.
கலாச்சாரங்கள் இணையும். அந்நியத்தன்மை குறையும். மனிதர்களுக்குள் உதவும் மனப்பான்மை வளரும். அன்பு பெருகும்!
நகரங்களுக்கு இடையே மக்கள் அதிகமாகப் பயணிக்கும்போது உள்ளூர் சுற்றுலா வளர்ச்சி பெறும். பிராந்திய வேறுபாடுகள் குறைந்து நாமெல்லாம் தமிழர்கள் என்னும் ஓர்மை மிகும்!
மொத்தத்தில், சமூகத்தின் உண்மையான வளர்ச்சி மிக அழகாக மிளிர்ந்து எழும்!

ஆம், விரிந்து நிற்கும் நிர்வாகம் என்பது தமிழர்களை உணர்வுபூர்வமாக நெருக்கப்படுத்தி விடும் என்பது எனது நெடுங்காலத் துணிபு.
19 – ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ஜனநாயகத்தை நேரில் ஆய்வு செய்த பிரெஞ்சு அறிஞர் அலெக்சிஸ் டி டாக்விலே (ALEXIS DE TOCQUEVILLE) என்பவர்,
“அதிகாரம் ஒரே மையத்தில் குவியாமல், மாநிலங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரவியிருப்பது மக்களின் பங்கேற்பையும் நல்லாட்சியையும் வலுப்படுத்தும்” என்றார்.
அமெரிக்காவின் கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள தனித்துவமான நிர்வாக அதிகாரமும், தனித்தனி ஆளுநர் ஆட்சியும், அன்றவர் கண்டு மொழிந்த பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் இன்றளவும் திகழ்கின்றன.
அவரது கூற்றின் நீட்சியாகவும் எனது சிந்தனையை கொள்ளலாம்!
“அடப் போப்பா, சென்னைக்குச் சென்றால்தான் விடிவு கிடைக்கும் போல…” என்னும் எளிய மனிதர்களின் ஆயாசம் அகற்றப்பட்டு,
“நமக்கு அருகிலேயே எல்லாம் கிடைக்கும்” என்னும் உற்சாக மனநிலை சாமானிய மக்களின் மனதுக்குள் எழுந்துவிடும் என்றால் அதுதான் உண்மையான மக்களாட்சிக்கான அடையாளம் ஆகும்!
கலெக்டர் அலுவலகம் ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தேவைகளை அந்த மாவட்டத்திலேயே கையாள்வதைப் போல, முக்கிய அரசுத் துறைகளின் பிராந்தியத் தலைமையகங்களும் அந்தந்தப் பகுதிகளின் நிர்வாகத் தேவைகளை அருகிலேயே கையாள அருமையான வாய்ப்பமையும்.
அனுபவம் மிக்க அறிஞர் பெருமக்களிடம் கலந்து பேசி இதனை மேலும் மெருகுபடுத்தலாம். ஒரே நாளில் இவற்றை செய்ய முடியாவிட்டாலும், முதலில் இதனை கொள்கை முடிவாகக் கொண்டு மெல்ல மெல்ல படிப்படியாக விரிவாக்கம் செய்து பலன் காணலாம்.
அப்போஸ்தலர் பணிகள் 17: 27 ஆம் வசனம், “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவர் அல்ல” என்கிறது. ஆனால், திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னைக்கு வெகு தூரம்தான்!
இறைவனே மக்களுக்குத் தொலைவில் இல்லை என்கிறது ஆன்மிகம். எனில், மக்களாட்சி மட்டும் எப்படி மக்களுக்கு தொலைவில் இருக்க முடியும்?
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! எளிய மக்களை அலையவிடாமல் அவர்களின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்ற வல்லதொரு நல்லாட்சிதான் காலம் கடந்து நின்று நிலைக்கும்!
அப்படியானதொரு முடிவை ஆட்சியாளர்கள் எடுத்தால், அரசாங்கத்தின் நிர்வாகச் சுமை குறையும். மக்களின் வாழ்வாதாரம் பெருகும். பல மாவட்டங்கள் புத்தெழுச்சி பெறும். தனி நபர் வருமானம் பெருகும்.
வீங்கிப் பெருகி வெடிக்கக் காத்திருக்கும் சென்னையின் பேரழுத்தம் ஆயாசப் பெருமூச்சோடு மெல்ல வடியும்.
வங்காளக் கடல் அலையெறிந்து வாழ்த்தும்!
