அனிதா நினைவேந்தல் அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு காரணமாக உயிர் நீத்த அனிதா நினைவு நாளான இன்று (செப்டம்பர் 1) சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ” இன்றைய நாள் தங்கை அனிதாவின் நினைவுநாள். 2017ம்ஆண்டு 12ம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த அரியலூரைச் சேர்ந்த அனிதா 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், மருத்துவப் படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 196.75 பெற்றிருந்தாலும், அன்றைக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட நீட் நுழைவு தேர்வில் 86 மதிப்பெண்களைப் பெற்று, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அரியலூரில் பிறந்து, தன்னுடைய கோரிக்கைக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று, அதில் வெற்றி பெற முடியாத பொழுது, நம்முடைய தங்கை உயிர் மாய்த்தார்.

ADVERTISEMENT

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது மாநிலத்தின் 3 முதல்வர்கள், இன்றைய அவையிலும் சரி, திமுகவுடைய தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அதிமுகவுடைய பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களும், இன்றைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களும், இதே சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினாலும், இன்றுவரையும் ஒன்றிய அரசு செவிசாய்க்காத ஒரு ஒன்றிய அரசாக இருக்கிறது.

அண்ணா கனவு கண்ட இருமொழி கொள்கைக்காகப் போராடுகிறோம். அண்ணா கனவு கண்ட இட ஒதுக்கீனுக்காகப் போராடுகிறோம். ஆனால், இன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வரக்கூடிய காலங்களில் அரசியலில் காப்பாற்றப்பட்டு, வரக்கூடிய தேர்தல் சூழ்நிலைகள் மாறும்போது, நிச்சயமாகச் சொல்கிறோம், தேர்தல் சூழ்நிலைகள் எதிர்காலத்தில் மாறும். 2029 தேர்தல் சூழ்நிலைகள் மாறும்போது நம்முடைய முதல் குரல், இந்த சட்டமன்றத்தில் ஒலித்த முதல் குரல், தங்கை அனிதாவின் நினைவு நாளான, இன்றைக்கு உறுதிமொழியெடுக்கக்கூடிய குரல், இந்த நீட்டைப் பாராளுமன்றத்தில் தூக்கி எறியப்பட்ட நாளாக, ஒழிக்கப்பட்ட நாளாக ஒரு நாள் மாறும்.

ADVERTISEMENT

அந்த ஒரு நாளுக்காக இன்றைக்கு அனிதா அவர்களுடைய தியாகம், கண்ணீர், உழைப்பு, தமிழ்நாடு சட்டமன்றமும் சரி, தமிழ் வெற்றிக் கழகமும் சரி, அனைத்துக் கட்சியும் சரி, அவர்களுடைய நினைவை நாங்கள் செலுத்துகிறோம். இனி வரும் காலங்களில் நம்முடைய மாணவர் மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள், இன்னொரு உயிர் போகக்கூடாது, தன்னம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நம்ம பக்கம்தான் வரும் ஒரு நாள்.

அந்தத் தன்னம்பிக்கையை இந்த சட்டமன்றம் ஒவ்வொரு மாணவர் மாணவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் ஒரு அரசியல் சூழல் மாறும். அனிதாவுடைய கண்ணீருக்கான பதில் என்னவென்பதை தேடி நாம் ஒரு அரசியல் மேற்கொள்வோம். அவருடைய நினைவுநாளை இன்றைக்கு இந்த சட்டமன்றத்தின் சார்பாக அவருடைய தைரியத்தையும், அதாவது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்து உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றார். இந்தியா முழுவதும் இந்த பிரச்சனையை ஒலித்த பெண். தங்கை அனிதாவின் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்றார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், “அனிதாவின் நினைவு நாளில் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக நம்முடைய அனுதாபத்தை, வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறோம். அதேபோல, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாகவும், அனிதாவின் குடும்பத்தின் சார்பாகவும், தங்களுடைய அனிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்றைக்கு நடத்த திட்டமிட்டிருந்தாங்க. எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட்டிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு, இந்த அரசு மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறார்கள். நினைவேந்தல் நடத்துவதற்கு அனுமதி கேட்டு 15 நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் கடிதம் போட்டிருக்கிறார்கள் முறைப்படி. ஆனால் காவல்துறை இது ஆர்ப்பாட்டம் அப்படி என்று சொல்லி, அனுமதி இல்லை என்று மறுத்திருக்கிறார்கள்.

அதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் என்னை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். நீட் கொடுமையால இந்தியாவில் நடந்த முதல் மரணம், தங்கை அனிதாவின் மரணம். தங்க அனிதா மரணம் அடைந்தபோது, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அன்னைக்கு அனிதா வீட்டுக்கே சென்று துக்கம் விசாரித்தார்கள். எங்களுடைய தலைரும் அன்று சென்றிருந்தார். இன்றைக்கு ஆளும் கட்சியும் நீட்டை ஒழிப்போம் என்ற அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். ஆனால், ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, இந்த அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்பதை இங்கே கேட்க விரும்புகின்றேன். நீட் எதிர்ப்பு அடையாளம், தங்கை அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி தர வேண்டும் என்று அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். பஷீர் அகமது என்பவர் நீட் தேர்வுக்கு எதிராகத் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் முதல் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தினை 01.09.2026 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்துவதற்கு அனுமதி கோரி 22.08.2026 அன்று விண்ணப்பித்துள்ளார். மேற்கூறிய மனு பரிசீலிக்கப்பட்டு, 29.08.2026 முதல் 08.09.2026 வரை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா நடப்பதால், பெருமளவில் பக்தர்கள் மற்றும் வாகனங்கள் பெசன்ட் நகருக்கு வருவார்கள் என்பதாலும், மீனவர்கள் வசிக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் எல்லையம்மன் கோயில் திருவிழா 28.08.2026 அன்று நடைபெற்று வருவதாலும், மேற்கூறிய நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தால் பெருமளவில் தன்னார்வலர்கள் கூட நேரிடும் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் வாகனப் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதுதாலும், மேற்கூறிய நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டு, இது குறித்த செயல்முறை ஆணையும் 31.08.2026 அன்று மேற்கூறிய விண்ணப்பதாரர் பஷீர் அகமதுக்குச் சார்பு செய்யப்பட்டது

வேறு ஒரு இடத்தில் நினைவேந்தல் நிகழ்வினால், அரசு அதற்கான பரிசீலனை செய்யும். இதில் எந்தவிதமான அரசியலும், அதாவது இன்றைக்கு ஒரு நாளாச்சும் தங்க அனிதாவின் நினைவினால் அரசியல் பேசாமல் எல்லோரும் ஒரே குரலில் இருக்கிறோம் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.” என்றார். அமைச்சரின் பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், “அனுமதி தரவில்லை என்று அரசு கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார். வேறு இடம் கேட்டால் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்ற பதிலை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.. அதோட முடித்து கொள்ளுங்கள் என்றார்.

இதைத்தொடர்ந்த பேசிய உதயநிதி ஸ்டாலின், “இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் மற்றும் திருத்தேர் அன்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது; இனி வரும் செப்டம்பர் 7 மற்றும் 8தேதிதான் மீண்டும் அந்த திருவிழாவும் திருத்தேர் விழாவும் நடைபெற உள்ளன. இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. நேற்று மாலை கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவேந்தல் நடக்க இருந்த அந்த இடத்திற்குச் சென்று பார்த்து வந்துள்ளனர், பெரிய அளவில் கூட்டம் இல்லை. இப்படியான சூழல் இருக்கும்போது அங்கு அனுமதி தர வேண்டும்; அப்படி இல்லை என்றால் அவர்களிடம் முறையாகத் தெரிவித்து மாற்று இடத்தைத் தர வேண்டும். ஏனென்றால் நினைவேந்தல் இன்று நடக்க வேண்டும், அதற்கான இடத்தை விரைவில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share