அமெரிக்காவில் டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மூலம் கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய விண்ணப்ப நடைமுறையை டிரம்ப் நிர்வாகம் முடக்கியுள்ளது. ஆனால் அமேசான், கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு இந்தத் தடை விதிக்கப்படவில்லை.
இந்த தடையால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? கிரீன் கார்டு பெறுவதற்கு வேறு வழிகள் உள்ளனவா?
கிரீன் கார்டு பெற மாற்று வழிகள்
அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய நடைமுறைகளில் ஒன்று PERM. இதன் மூலம் தொழிலாளர்களுக்காக அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது 8 நிறுவனங்களின் புதிய PERM விண்ணப்பங்களையும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் அமெரிக்க அரசு முடக்கியுள்ளது.
ஆனால் கிரீன் கார்டு பெறுவதற்கு PERM மட்டுமே ஒரே வழி அல்ல.
அமெரிக்காவில் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் கிரீன் கார்டு பெறலாம். அறிவியல், கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் அசாதாரணத் திறமை கொண்டவர்கள் EB-1A என்ற பிரிவில் நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல அமெரிக்காவின் தேசிய நலனுக்குப் பயனளிக்கும் தகுதிகளைக் கொண்ட சிலர் EB-2 National Interest Waiver என்ற பிரிவிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு நிறுவனத்தின் PERM சான்றிதழ் தேவையில்லை. ஆனால் தனித்தனியான தகுதிகள் உள்ளன.
H-1B விசா வைத்திருப்பவர்கள் நிலை என்ன?
தற்போதைய தடையால் ஏற்கெனவே H-1B விசா வைத்திருப்பவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கிரீன் கார்டு பெறுவதில் தாமதம் ஏற்படலாம். இதனால் அவர்கள் நீண்ட காலம் தற்காலிக விசாவிலேயே பணியாற்ற வேண்டிய நிலை உருவாகலாம்.
அமெரிக்காவுக்கே பாதிப்பு ஏற்படுமா?
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை அந்நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கோல்கேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாட் ஸ்பார்பர் கூறுகையில், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் தடுப்பதால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க முடியாது என்றார்.
வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வராவிட்டாலும், மற்ற நாடுகளில் இருந்தபடியே அமெரிக்கத் தொழிலாளர்களுடன் போட்டியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஹ்மத் குலெக் கூறுகையில், கிரீன் கார்டு பெறும் வாய்ப்பு குறைந்தால் ஏற்கெனவே அமெரிக்காவில் பணியாற்றும் திறமையான வெளிநாட்டினர் சிலர் வெளியேறலாம். புதிதாக அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வதையும் சிலர் தவிர்க்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு மட்டுமின்றி, திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் சிக்கல் ஏற்படலாம்.
