தவெக வெறும் 34 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தாலும், 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் அனைவருக்குமான முதலமைச்சராகவே செயல்பட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா நேற்று தாராபுரம் பிரச்சாரத்தில் கூட்டத்தில் அழுதது குறித்த சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவது குறித்த கேள்விக்கு, “நேற்றைய தினம் முதலமைச்சர் கலந்துகொண்ட தாராபுரம் பொதுக்கூட்டத்தில், த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர், ‘நான் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் சேர்ந்தேன்’ என்ற வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.நான் கேட்க விரும்புவது என்னவென்றால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் தொகுதிகளுக்கெல்லாம் ஆளும் கட்சி எதுவும் செய்யாது என்பதை முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டியது அவசியமாகும்.
முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் ஆவார். 34 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தாலும், 108 இடங்களில் மட்டுமே அவர் வெற்றி பெற்றிருந்தாலும், முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் அனைவருக்குமான முதலமைச்சராகவே செயல்பட வேண்டும். அனைத்துத் தொகுதிகளையும் பாரபட்சம் இல்லாமல் தான் அவர் நடத்த வேண்டுமே தவிர, பாரபட்சமாக நடந்துகொள்வது சட்டத்திற்குப் புறம்பானது; மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரானது.
ஆனால், அவருடைய கட்சியின் வேட்பாளர் முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே, ‘ஆளும் கட்சியில் சேர்ந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும்’ என்று ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார். அவரது இந்த வாக்குமூலத்தை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஒரு அணுகுமுறை இருந்தால் அது மிகவும் தவறானது. ஒட்டுமொத்தத் தமிழகத்தின் 8 கோடி மக்களுக்குமே அவர் முதலமைச்சர். அதற்குரிய முறையில் தான் அவரது அணுகுமுறை அமைய வேண்டும்.” என்றார்.
