விஜய்க்கு புது சிக்கல்… அரசு புறம்போக்கு நிலத்தை சொந்த சொத்தாக காட்டிய விவகாரம்… உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்!

Published On:

| By Mathi

Vijay-High Court- Land

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், கொடைக்கானல் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தைத் தனது சொந்த சொத்தாக வேட்புமனுவில் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விவாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது.

பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தமது வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி பெரம்பூர் வாக்காளர் எஸ்.தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் தொடர்பாக பல முரண்பாடுகள் இருப்பதாக தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு எதிராக இந்த தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும், தேர்தல் வழக்கைத் தொடர்ந்த தினேஷ் தரப்பில் வழக்கறிஞர் அசோக்கும் ஆஜராகி வாதிட்டனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 7) விசாரணைக்கு வந்தபோது, விஜய் தமது வேட்புமனுவில் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அறிவித்துள்ள நிலையில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் விடுபட்டிருந்தால் அது தேர்தல் முறைகேடாகுமா? என்று நீதிபதி வி. லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், விஜய்க்கு வாக்களிக்க முடிவு செய்த ஒரு வாக்காளர், அவருக்கு ரூ.600 கோடி சொத்து இருக்கிறதா அல்லது அதைவிட அதிகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் வாக்களிப்பாரா என்றும் நீதிபதி கேட்டிருந்தார்.

ADVERTISEMENT

வேட்பாளரின் சொத்து விவரங்களைத் தயாரித்த ஆடிட்டர் சில சொத்துகளைத் தவறுதலாக விடுபடச் செய்திருந்தால், அதற்காகத் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா என்பதும் நீதிபதி வி. லட்சுமிநாராயணின் கேள்வி.

சொத்து விவரத்தை மறைப்பது தேர்தல் முறைகேடுதான்

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது தினேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக், ”சொத்து விவரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ மறைப்பது வாக்காளர்கள் மீது முறையற்ற செல்வாக்கைச் செலுத்துவதற்கு சமம்” என்று வாதிட்டார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின்படி, ”சொத்து விவரங்களை மறைப்பது தேர்தல் முறைகேடாகும்” என்றும் தெரிவித்தார்.

“வேட்பாளர் தமது சொத்து விவரங்களைத் தெரிவிக்காமல் விட்டாலே அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின்கீழ் குற்றமாகும். நேரடியாகவோ மறைமுகமாகவோ சொத்து விவரங்களை மறைப்பது தவறுதான். சில உண்மைகளை மறைப்பதன் மூலம் வாக்காளர்களின் முடிவில் மறைமுகமாகத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று அசோக் வாதிட்டார்.

திட்டமிட்டே மறைப்பதா? தெரியாமல் மறைத்துவிடுவதா?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ”சொத்து விவரங்களை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டுமா அல்லது எந்த வகையில் மறைக்கப்பட்டிருந்தாலும் அது முறையற்ற செல்வாக்காகக் கருதப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அசோக், ”சட்டத்தில் சொத்து விவரங்களை மறைப்பது பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது; எந்த வகையில் மறைக்கப்பட்டிருந்தாலும் அது முறையற்ற செல்வாக்காகவே கருதப்படும்” என்றும் வாதிட்டார்.

அப்போது நீதிபதி, “The very fact that it says undue influence, wouldn’t it mean that it should be wilful suppression?” அதாவது, “சட்டத்தில் ‘முறையற்ற செல்வாக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, சொத்து விவரங்களை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமாகிறதல்லவா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அசோக், ”சொத்து விவரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டனவா? இல்லையா? என்பதை முழுமையான விசாரணையின்போதுதான் தீர்மானிக்க முடியும்” என்றார்.

அத்துடன், “தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரிய மனுவை விசாரிக்கும்போது இந்தக் கேள்விக்கு முடிவு காண முடியாது. வேட்பாளர் தமக்கு எதிரான குற்ற வழக்குகளை மறைப்பதையும், சொத்து விவரங்களை மறைப்பதையும் வெவ்வேறாகப் பார்க்க முடியாது” என்று வழக்கறிஞர் அசோக் வாதிட்டார்.

கணிசமான மதிப்புள்ள சொத்துகள் வேட்புமனுவில் விடுபட்டிருந்தாலும் அது வாக்காளர்கள் மீது முறையற்ற செல்வாக்கைச் செலுத்துவதாகவே கருதப்படும் என்றும் வழக்கறிஞர் அசோக் சுட்டிக் காட்டினார்.

அரசு புறம்போக்கு நிலத்தை ‘சொந்த’ சொத்தாக காட்டிய விஜய்?

இதையடுத்து விஜய்யின் சொத்து விவரங்கள் தொடர்பாக மற்றொரு குற்றச்சாட்டையும் தினேஷ் தரப்பு முன்வைத்தது.

கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை 1997-ம் ஆண்டு வாங்கியதாக விஜய் தமது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த நிலம் வருவாய்த்துறையின் ‘அ’ பதிவேட்டின்படி அரசு புறம்போக்கு நிலமாக இருப்பதாக தினேஷ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ”அரசு புறம்போக்கு நிலத்தைச் சொத்தாகக் குறிப்பிட்டிருந்தால் அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் குற்றமாகுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அந்த நிலம் தொடர்பான விற்பனைப் பத்திரத்தை விஜய் சமர்ப்பித்திருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அசோக், ”அரசு புறம்போக்கு நிலத்தைச் சொத்தாகக் காட்டியிருப்பது முறையற்ற சொத்து விவர அறிவிப்பு; விஜய் சமர்ப்பித்த விற்பனைப் பத்திரம் உண்மையானதா? என்பதை முழுமையான விசாரணையின்போதுதான் கண்டறிய முடியும். தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பதை வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் தீர்மானிக்க முடியாது” என்றும் வாதிட்டார்.

அப்போது, ”ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு இருக்கிறது என்பதைத் தேர்தல் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அசோக், ”வேட்பாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து உரிமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் உண்மையானவையா என்பதைத் தேர்தல் நீதிமன்றம் விசாரிக்க முடியும்” என்றார்.

வேட்பு மனு பரிசீலனையின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?

இன்றைய விசாரணையின் போது விஜய் தரப்பில் மற்றொரு வாதமும் முன்வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார். அவருடன் வழக்கறிஞர்கள் தீக்ஷிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால் ஆகியோர் ஆஜராகினர்

”வேட்பாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படுகிறது. அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் வேட்புமனு பரிசீலனையின்போதே தேர்தல் அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தினேஷ் தரப்பு வழக்கறிஞர் அசோக், ”வேட்புமனு பரிசீலனையின்போது தேர்தல் அதிகாரி நடத்துவது ஆரம்பகட்ட விசாரணை மட்டுமே. 24 மணி நேரத்துக்குள் சொத்து விவரங்கள் தொடர்பாக விரிவான விசாரணையை தேர்தல் அதிகாரியால் நடத்த முடியாது. எனவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக, பின்னர் தேர்தல் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது” என்று வாதிட்டார்.

மனுதாரர் பெரம்பூர் வாக்காளரா?

மேலும், இந்த வழக்கின் மனுதாரரான தினேஷ் பெரம்பூர் தொகுதி வாக்காளர் என்றும், அவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு மனு சட்டப்படி தேவையான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும், எனவே மனுவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கூடாது என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

வாக்காளர் முடிவில் தாக்கம் ஏற்படுத்துகிறதா?

இதையடுத்து விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டார்.

”வேட்பாளர் தமக்கு எதிரான குற்ற வழக்குகளை மறைப்பதையும், சில சொத்து விவரங்களைத் தெரிவிக்காமல் விடுவதையும் ஒன்றாகக் கருத முடியாது. ஒரு வேட்பாளரின் குற்றப் பின்னணியை அறிந்துகொள்வது வாக்காளர்களுக்கு அவசியமானது. ஆனால் விஜய் பெரும் பணக்காரர் என்பது ஏற்கெனவே வாக்காளர்களுக்குத் தெரியும். விஜய்க்கு மேலும் சில கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரியவந்தால், அது வாக்காளர்களின் முடிவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ”விஜய்க்கு ரூ.650 கோடிக்கு மேல் சொத்துகள் இருந்தால் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று நினைக்கும் வாக்காளர்கள் சிலர் இருக்கலாம்;
அப்படிப்பட்ட வாக்காளர்கள் யார்? சொத்து விவரங்கள் வெளியிடப்படாததால் அவர்களது முடிவு எப்படி பாதிக்கப்பட்டது? என்பதைத் தேர்தல் வழக்கைத் தொடர்ந்தவர் விளக்க வேண்டும்” என்றும் வாதிட்டார்.

”சில சொத்து விவரங்கள் விடுபட்டதாகக் கூறப்படுவது தேர்தல் முடிவைப் பாதிக்கும் அளவுக்கு முக்கியமானது அல்ல; எனவே தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்” என்றும் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வலியுறுத்தினார்.

மேலும், “இந்த வழக்கில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்த எஸ்.தினேஷ், பெரம்பூர் தொகுதியின் வாக்காளர் என்பதை நிரூபிக்கும் வகையில் மனுவில் போதுமான விவரங்கள் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 81-வது பிரிவின்படி, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர்தான் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். எனவே தினேஷ் இந்தச் சட்டப்பிரிவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளாரா?” என்ற கேள்வியையும் விஜய் தரப்பு எழுப்பியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனுவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும், விஜய் தரப்பும் தினேஷ் தரப்பும் அக்டோபர் 14-ம் தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share