இந்த நிலையில், சொத்து விவரங்களை மறைத்த வேட்பாளர்களின் தேர்தல் வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய 4 முக்கிய தீர்ப்புகள் என்ன சொல்கின்றன? விஜய் வழக்கில் இந்தத் தீர்ப்புகள் எந்த அளவுக்குப் பொருந்தும்?
விஜய்யின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், வேட்பாளர் சொத்து விவரங்களைத் தெரிவிக்காமல் விடுவது தொடர்பாக சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
- “He had declared 600 crore in assets. Can missing out 30 crore worth of assets amount to corrupt practice?” ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை விஜய் அறிவித்துள்ளார். அதில் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை தெரிவிக்காமல் விட்டிருந்தால் தேர்தல் முறைகேடாகுமா?
- “If I decided to vote for Vijay, it wouldn’t matter to me if he owns what property. Do you think it would make a difference to a voter in Perambur if Vijay had failed to disclose 30 crore worth of assets?” நான் விஜய்க்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டால், அவருக்கு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன என்பது எனக்கு முக்கியமாக இருக்காது. ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை விஜய் தெரிவிக்காமல் விட்டிருந்தால், அது பெரம்பூர் வாக்காளரின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
- “While becoming a judge, you’re supposed to declare your assets. Do you think I sat and prepared the list? I relied on my chartered accountant. Similarly, do you think Vijay sat and wrote down all his assets? He would’ve definitely relied on a CA. The CA might’ve missed some assets. For that, can the election be set aside?” நீதிபதியாகும்போது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். அந்தப் பட்டியலை நானே தயாரித்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் எனது ஆடிட்டரைத்தான் நம்பியிருந்தேன். அதேபோல விஜய் தனது சொத்து விவரங்களை அவரே எழுதியிருப்பாரா? அவரும் நிச்சயமாக ஆடிட்டரை நம்பியிருப்பார். ஆடிட்டர் சில சொத்து விவரங்களை விட்டிருக்கலாம். அதற்காக அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா? (ஆதாரம்: https://www.livelaw.in/amp/high-court/madras-high-court/madras-high-court-cm-joseph-vijay-question-not-disclosing-30-crore-corrupt-practice-553506)
நீதிபதி லட்சுமி நாராயணன் எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கு, வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய 4 முக்கியத் தீர்ப்புகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?
வேட்பாளர் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக 2014-ம் ஆண்டு மே 9-ம் தேதி, Kisan Shankar Kathore vs Arun Dattatraya Sawant வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுரீந்தர் சிங் நிஜ்ஜார், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கிசான் சங்கர் கதோரே, தனது மனைவியின் சொத்துகள், அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள், பங்குதாரராக இருந்த நிறுவனத்தின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவரது வேட்புமனு முறையற்ற வகையில் ஏற்கப்பட்டதாகக் கூறி தேர்தல் வெற்றியை ரத்து செய்தது. இதை எதிர்த்து கிசான் சங்கர் கதோரே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு:
When the Court gives such a finding, which would have resulted in rejection, the effect would be same, namely, such a candidate was not entitled to contest and the election is void. Otherwise, it would be an anomalous situation that even when criminal proceedings under Section 125A of the Act can be initiated and the selected candidate is criminally prosecuted and convicted, but the result of his election cannot be questioned. This cannot be countenanced.
நீதிமன்ற விசாரணையில், ஒரு வேட்பாளர் முக்கியமான தகவல்களை மறைத்திருப்பதும், அதன் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் கண்டறியப்பட்டால், அந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர். அவர் வெற்றி பெற்றிருந்தாலும் அந்தத் தேர்தல் வெற்றி செல்லாது.
முக்கியமான தகவல்களை மறைத்ததற்காக ஒரு வேட்பாளர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125A பிரிவின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கவும் முடியும். ஆனால், அதே தவறுக்காக அவரது தேர்தல் வெற்றியை மட்டும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று கூறுவது முரண்பாடானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
2014-ம் ஆண்டு தீர்ப்பு விவரம்
இதேபோல இன்னொரு தீர்ப்பும் உள்ளது.
2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?
வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து விவரங்கள் மற்றும் வருமானத்திற்கான ஆதாரங்களை வெளியிடுவது தொடர்பாக 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, Lok Prahari vs Union of India வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுடைய மனைவி அல்லது கணவர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் சொத்து விவரங்கள் மட்டுமல்லாமல், அந்தச் சொத்துகள் மற்றும் வருமானத்திற்கான ஆதாரங்களையும் வெளியிட வேண்டும் என்று லோக் பிரஹரி என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறியதாவது:
”For the very same logic as adopted by this Court in Krishnamoorthy, we are also of the opinion that the non- disclosure of assets and sources of income of the CANDIDATES and their ASSOCIATES would constitute a corrupt practice falling under heading ‘undue influence’ as defined under Section 123(2) of the RP Act of 1951.”
கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இந்த உச்சநீதிமன்றம் பின்பற்றிய அதே சட்ட அடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் தங்களுடைய சொத்துகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களை வெளியிடாமல் இருப்பது, 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(2) பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள ‘முறையற்ற செல்வாக்கு செலுத்துதல்’ என்ற வகையின் கீழ் வரும் தேர்தல் முறைகேடாகும் என்று நாங்களும் கருதுகிறோம்.
2018-ம் ஆண்டு தீர்ப்பு
இந்த 2 தீர்ப்புகள் மட்டும் இல்லாமல் வேட்பாளரின் சொத்து விவரம் தொடர்பாக 2024-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இன்னொரு வழக்கின் தீர்ப்பையும் நாம் குறிப்பிடலாம்.
2024-ம் ஆண்டு தீர்ப்பு என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தில் காரிகோ கிரி என்ற எம்எல்ஏ, தனது குடும்பத்தினரின் பெயரில் இருந்ததாகக் கூறப்பட்ட 3 வாகனங்களின் விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவரது தேர்தல் வெற்றியை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே அந்த வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன அல்லது அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன என்பதைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், அவற்றை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்தது.

அந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்,
“It is not necessary that a candidate declare every item of movable property that he or his dependent family members own, such as clothing, shoes, crockery, stationery and furniture, etc., unless the same is of such value as to constitute a sizeable asset in itself or reflect upon his candidature, in terms of his lifestyle, and require to be disclosed.”
வேட்பாளரோ அவரைச் சார்ந்த குடும்பத்தினரோ வைத்திருக்கும் உடைகள், காலணிகள், வீட்டுப் பொருட்கள் போன்ற ஒவ்வொரு சிறிய பொருளையும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவற்றில் ஏதேனும் அதிக மதிப்புள்ள சொத்தாக இருந்தாலோ, வேட்பாளரின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் முக்கியமான சொத்தாக இருந்தாலோ, அதைப் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிறது.
2024-ம் ஆண்டு தீர்ப்பு விவரம்
விஜய் வழக்கில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் தெரிவித்த கருத்துகளும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும்
1.ரூ.600 கோடி சொத்துகளை அறிவித்த விஜய், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை தெரிவிக்காதது தேர்தல் முறைகேடாகுமா?
2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: ஒரு வேட்பாளர் முக்கியமான சொத்து விவரங்களை மறைத்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த வெற்றியை ரத்து செய்ய முடியும்.
முக்கியமான சொத்து விவரங்களை மறைத்த வேட்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழி உள்ளது.
2024-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: வேட்பாளர் தனது ஒவ்வொரு சிறிய சொத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதிக மதிப்புள்ள முக்கியமான சொத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.
2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: வேட்பாளர்களும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் தங்களுடைய சொத்துகள் மற்றும் வருமான ஆதாரங்களை மறைப்பது தேர்தல் முறைகேடாகும்.
2.விஜய்க்கு வாக்களிக்க முடிவு செய்த வாக்காளருக்கு சொத்து விவரம் முக்கியமாக இருக்குமா?
2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: வேட்பாளர்களின் சொத்து மற்றும் வருமான ஆதாரங்களை அறிந்துகொள்வது வாக்காளர்களின் உரிமை.
3.ஆடிட்டர் சில சொத்து விவரங்களை தவறுதலாக சேர்க்காமல் விட்டிருந்தால் அதற்காக வேட்பாளரின் தேர்தல் வெற்றியையே ரத்து செய்ய முடியுமா?
2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: வேட்பாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முக்கியமான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், அவரது வேட்புமனு முறையற்ற வகையில் ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் முடிவு செய்ய முடியும்.
அந்த வழக்கில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதால் தேர்தல் வெற்றியை ரத்து செய்த மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
தேர்தல் அதிகாரி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுவிட்டாலும், முக்கியமான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டனவா என்பதை நீதிமன்றம் பின்னர் விசாரிக்க முடியும். அந்த விவரங்கள் மறைக்கப்பட்டதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கண்டறிந்தால், தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியும்.
2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: வேட்பாளர்கள் சொத்து மற்றும் வருமான ஆதாரங்களை மறைப்பது தேர்தல் முறைகேடாகும்.
2024-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: சொத்து விவரம் விடுபட்டது என்பதற்காக மட்டுமே தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியாது. விடுபட்ட சொத்து முக்கியமானதா, அதை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததா என்பதை ஆராய வேண்டும்.
வேட்பாளர் தனது வேட்புமனுவில் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய முக்கியமான சொத்து விவரங்களை மறைப்பது சாதாரண விஷயமல்ல. அது தேர்தல் முறைகேடாகக் கருதப்படலாம். தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கும் வழிவகுக்கலாம். அதேநேரத்தில், ஒவ்வொரு சிறிய சொத்து விவரமும் விடுபடுவது தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான காரணமாகாது என்பதையும் 2024-ம் ஆண்டு தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இந்த 2014, 2018, 2024-ம் ஆண்டு தீர்ப்புகளுக்கு மத்தியில், சொத்து விவரங்களைத் தெரிவிக்காததற்காக மட்டுமே ஒரு வேட்பாளரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய நீதிமன்றங்கள் அவசரப்படக் கூடாது என்று 2025-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய மற்றொரு தீர்ப்பு, விஜய் வழக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
2025-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு:
2023-ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் ஆசிபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற பிஆர்எஸ் எம்எல்ஏ கோவா லட்சுமியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.
கோவா லட்சுமி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், முந்தைய 5 நிதியாண்டுகளில் 4 ஆண்டுகளுக்கான வருமானத்தைப் பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தபோது மாதம் ரூ.1 லட்சம் மதிப்பூதியம் பெற்றதாகவும், முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியம் பெற்றதாகவும், இந்த வருமான விவரங்களை அவர் மறைத்ததாகவும் குற்றம்சாட்டி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜ்மேரா ஷியாம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
தெலுங்கானா உயர் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி உச்சநீதிமன்றம், கோவா லட்சுமி தனது பதவி மற்றும் வருமான ஆதாரம் பற்றிய விவரங்களை வேறு இடங்களில் தெரிவித்திருந்ததையும், ஓய்வூதியம் பெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, கோவா லட்சுமி முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியம் பெறவில்லை என்பதற்காக வழங்கப்பட்ட சான்றிதழையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கோவா லட்சுமி மீதான குற்றச்சாட்டுகள், அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்குப் போதுமான அளவில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்தது.

அந்தத் தீர்ப்பில்,
“We are, thus, of the view that merely because a returned candidate has not disclosed certain information related to the assets, courts should not rush to invalidate the election by adopting a highly pedantic and fastidious approach, unless it is shown that such concealment or non-disclosure was of such magnitude and substantial nature that it could have influenced the election result.”
அதாவது, தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் சில சொத்து விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்பதற்காக மட்டுமே, மிக நுணுக்கமாகக் குறைகளைத் தேடி அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய நீதிமன்றங்கள் அவசரப்படக் கூடாது.
மறைக்கப்பட்ட சொத்து விவரங்கள் மிகவும் முக்கியமானவையாகவும், தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குத் தீவிரமானவையாகவும் இருந்தன என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டு தீர்ப்பு
முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ரூ.600 கோடி சொத்துகளை அறிவித்த நிலையில், ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்து விவரங்கள் விடுபட்டதாகக் கூறப்படுவது மட்டும் தேர்தல் வெற்றியை ரத்து செய்யப் போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில், ரூ.30 கோடி சொத்து விவரம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் தன்மையையும், அது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு முக்கியமானதா என்பதையும் நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த நிலையில், விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனுவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரிய வழக்கில் அக்டோபர் 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
