பெரம்பூர் சட்டசபை தொகுதியில் தாம் வெற்றி பெற்றதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய், தமது வேட்புமனுவில் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்ததாகக் குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
விஜய் தனது வேட்புமனுவில் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் விடுபட்டிருந்தால் அது தேர்தல் முறைகேடாகுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், விஜய்க்கு வாக்களிக்க முடிவு செய்த ஒரு வாக்காளர், அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் வாக்களிப்பாரா என்றும் நீதிபதி கேட்டிருந்தார்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்களைத் தயாரிக்கும் ஆடிட்டரால் சில சொத்துகள் தவறுதலாக விடுபட்டிருந்தால் அதற்காகத் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தமது தேர்தல் வெற்றிக்கு எதிரான மனுவை நிராகரிக்க கோரி விஜய் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
