ஆடிட்டரின் தவறுக்காக முதல்வர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் தனது தேர்தல் வேட்பு மனுவில் சில சொத்து விபரங்களை மறைத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

தமிழ்நாடு முதல்வர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ADVERTISEMENT

அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தொடர்ந்தனர். 

“தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல அசையா சொத்துக்கள் தொடர்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு தகவல்களை மறைத்தது, தவறாக சித்தரித்தது மற்றும் பொய்யாக பதிவு செய்தது ஆகியவற்றின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என தினேஷ் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  முதலில் முதல்வர் விஜய் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார். முதல்வர் விஜய் எந்த சொத்து விபரத்தையும் மறைக்கவில்லை என்று தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து வாக்காளர் தினேஷ் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி ஆர் சண்முகநாதன், “முதல்வர் விஜய் 1997ஆம் ஆண்டு கொடைக்கானலில் வில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை 30,000 ரூபாய்க்கு வாங்கியதாகவும் அந்த சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றும் விஜய் கூறியிருக்கிறார். இருப்பினும் கிராமத்து ’ஏ’ பதிவேட்டை ஆய்வு செய்ததில், அந்த சொத்து உண்மையில் அரசு புறம்போக்கு நிலம் என்பதும் தெரியவந்தது.

இதே போல சென்னை போரூரில் உள்ள 33,955 சதுரடி நன்செய் அல்லாத நிலத்தை 2010 ஆம் ஆண்டு 9.13 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதாக அறிவித்திருக்கிறார். இருப்பினும் பதிவு துறை ஆவணங்களை ஆய்வு செய்வதில் அவர் 7.5 கோடிக்கு 20,773 சதுர அடி நிலத்தை மட்டுமே வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. நிலத்தின் அளவு மற்றும் விற்பனைத் தொகையை அதிகமாக அறிவித்ததற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சென்னை பாடியில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 11,854 சதுர அடி வணிக கட்டிடம் தனக்கு சொந்தமானது என்று கூறியிருக்கிறார். 2009 ஆம் ஆண்டில்  1.95 கோடிக்கு வாங்கி, அதற்கு 3.9 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் 2026 பிப்ரவரி 12 அன்று 23,460 சதுர அடி பரப்பளவு கொண்ட அதே வணிக கட்டிடத்தை அவர் 35 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். ஆனால் தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டது போல அவர் 2019 இல் அந்த வணிக சொத்தை வாங்கவில்லை. 

மாறாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து தமது கொரட்டூர் சொத்திற்கு பதிலாக பரிமாற்றம் பெற்றிருக்கிறார். அந்த சொத்து பரிமாற்ற பத்திரத்தின் மூலம் பெறப்பட்டது. தேர்தல் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பே அந்த சொத்து 35 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. 

அதேபோல சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது பங்களா பரம்பரை சொத்து அல்ல. விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் 2003 ஆம் ஆண்டு சுமதி ரகுநாத் கைடோண்டே என்பவரிடம் வாங்கி, 2005 ஆம் ஆண்டு தனது மகனுக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். அந்த பத்திரத்தில் தந்தை எவ்வித கிரைய தொகையையும் பெறாமல் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாக மகனுக்கு சொத்தை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

17,100 சதுர அடி நிலப்பரப்பிலும் 5,500 அடி கட்டட அமைப்பிலும் அமைந்துள்ள அந்த சொத்தின் மதிப்பு 2.75 கோடியென 2005 ஆம் ஆண்டின் செட்டில்மெண்ட் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் அந்த நிலத்தில் கட்டிடம் அமைப்பதற்காக 18.73. கோடி செலவிட்டதாகவும், தற்போது அந்த சொத்தின் சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்” என்று வாதங்களை முன்வைத்தார். 

இதற்கு முதல்வர் விஜய் சார்பில், “இந்த கற்பனையான குற்றச்சாட்டுகள் எல்லாம் தேர்தலில் முடிவை எவ்வாறு பாதிக்கும் என்பதை காட்ட மனுதாரர் எந்த முயற்சியும் செய்யவில்லை. 

பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களுக்கு நன்கு அறிந்த பிரபல சினிமா நடிகருக்கும் ஒரு நல்ல மனிதருக்கும், நேர்மையான மற்றும் நம்பிக்கை அளிக்கும் புதிய அரசியல் மாற்றத்தை நோக்கியே வாக்களித்துள்ளனர். 

மாநிலம் முழுவதும் எனக்கு சொத்துக்கள் இருப்பது மக்களுக்கு நிச்சயமாக தெரியும். இதில் ஏதேனும் ஒரு சொத்தின் மதிப்பு சிறிதளவு கூடியோ அல்லது குறைத்தோ குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்காக எந்த ஒரு வாக்காளரும் தங்களின் வாக்களிக்கும் முடிவை மாற்றி இருக்கப்போவதில்லை. 

படிவம் 26 தவறானது என்று அர்த்தம் அல்ல. அதில் எந்த குறைபாடும் இல்லை. எனது வேட்பு மனுவும் முறையாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

பெரம்பூர் தொகுதியில் 1,20,365 வாக்குகள் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். சுலபமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு எனது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியாது. 

எனது தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் 600 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்றோ எனது வருமான ஆதாரத்திற்கு மீறிய சொத்துக்களை வைத்திருக்கிறேன் என்றோ மனுதாரர் குற்றம் சாட்டவில்லை. 

தொழில்நுட்ப ரீதியான சிறிய முரண்பாடுகளை மட்டுமே அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். நிலத்தின் அளவு, விற்பனைத் தொகை, கட்டப்பட்ட பரப்பளவு, சந்தை மதிப்பு அல்லது சொத்தை பெற்ற விதம் ஆகியவற்றில் உள்ள இத்தகைய சிறிய வித்தியாசங்கள் ஏற்கனவே வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக இருக்கும்போது அவற்றை ஒரு பெரிய தவறாக கருத முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

அதன்படி மீண்டும் இன்று (அக்டோபர் 7) வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. 

அப்போது, பண்ருட்டியில் உள்ள 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அந்த சொத்தின் சர்வே எண், விற்பனை பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தேர்தல் வழக்கில் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன” என்றார். 

விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி, சொத்துக்களை குறைத்து காட்டியதற்காக தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா? 

உச்ச நட்சத்திரமான விஜய் 600 கோடி ரூபாய் சொத்து கணக்கை காட்டியுள்ளார்.. 30 கோடி ரூபாய் சொத்தை தெரிவிக்கவில்லை என்றால் அது எப்படி அவருடைய தேர்தல் வெற்றியை பாதிக்கும். 

கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது என்று கேட்டால் அவருக்கு எப்படி தெரியும். ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜயின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா? 

நான் நீதிபதியான பிறகு எனது சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டியிருந்தபோது எனது ஆடிட்டரையே நம்பி இருந்தேன். அதுபோல விஜய்யும் சொத்து பட்டியலை அவராக தயாரித்து அளித்திருக்க மாட்டார். அவரது ஆடிட்டர் தான் அதை செய்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு விஜயின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியுமா? 

பொதுவாக கோடீஸ்வரர்களுக்கு தங்களுக்கு எத்தனை சொத்துக்கள் உள்ளன. அவை எங்கே இருக்கின்றன, எவையெல்லாம் தங்களது சொத்துக்கள் என்பதே கூட தெரியாது. ஏன் உங்களுக்கு கூட உங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் எத்தனை என்று தெரியாமல் இருக்கலாம். 

எனவே முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் ஒரு நபர் ஒரு சில சொத்துக்களை குறிப்பிட தவறிவிட்டார் என்பதற்காக ஒரு தேர்தலையே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. 

விஜய் தனது 600 கோடி சொத்து மதிப்பில் ஒன்று அல்லது இரண்டு பங்களாக்களின் விவரங்களை காட்ட தவறினாலும் அல்லது தவறாக குறிப்பிட்டிருந்தாலும், அது வாக்காளரின் முடிவை எந்த விதத்திலும் மாற்றி இருக்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெற உள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share