முதல்வர் விஜய்யை கேள்வி கேட்கும் தங்களது இயக்கத்தின் பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளதாவது: அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
https://instagram.com/reel/DgNMOOjBxsW/?fqnt=MXQ2cjBxYnJlajhiOA==
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை. இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது. அறப்போர் தொடரும்! இவ்வாறு அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.









