நவ. 30 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்.. மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா? மத்திய அரசு அதிரடி!

By Mathi

|

Published on 26 Nov 2026, 8:20 PM

Parliament Spl Session

நாடாளுமன்ற மக்களவையை நவம்பர் 30-ந் தேதியும், மாநிலங்களவையை டிசம்பர் 2-ந் தேதியும் மீண்டும் கூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற்றது. ஆகஸ்ட் 13-ந் தேதி இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. எனினும், மழைக்கால கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (நவம்பர் 26) வெளியிட்ட அறிவிப்பில், முக்கியமான அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக இரு அவைகளையும் மீண்டும் கூட்டுமாறு மக்களவை சபாநாயகரிடமும் மாநிலங்களவைத் தலைவரிடமும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு கூட்டம் டிசம்பர் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்டியிருப்பதால் எந்த மசோதாவை நிறைவேற்றப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா போன்ற எதை சாதிக்க மத்திய அரசு இந்த சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி இருக்கிறது என்பது கேள்வி.

ADVERTISEMENT

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?

2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆனால், மக்களவையில் அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் அம்மசோதா தோல்வியடைந்தது. இதனையடுத்து மற்ற மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய சிறப்பு கூட்டத் தொடரில் மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு?

தற்போது மக்களவையில் 543 தொகுதிகள் உள்ளன. தொகுதி மறுவரையறை மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 வரை உயர்த்துவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதம் குறையும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகிதத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவருமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?

கடந்த ஏப்ரல் மாதம் அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்த நிலையில், மீண்டும் அதே மசோதாவைக் கொண்டுவந்தால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது.

தற்போதுள்ள மக்களவை தொகுதிகளின் அடிப்படையிலேயே மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் பல எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவில் மத்திய அரசு என்ன மாற்றங்களைச் செய்யப் போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா?

மத்திய பாஜக அரசின் மற்றொரு முக்கிய திட்டம் மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது. இது தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாகவும் தற்போதைய சிறப்பு அமர்வுகளில் மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் என்ன ஆனது?

வழக்கமாக நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால் இம்முறை குளிர்கால கூட்டத்தொடருக்கான அறிவிப்பை வெளியிடாமல், ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரின் அமர்வுகளை மீண்டும் கூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸ் நாளை ஆலோசனை

இதனிடையே நாடாளுமன்ற சிறப்பு அமர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நாளை (நவம்பர் 27-ந் தேதி) நடைபெற உள்ளது. டெல்லியில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், நவம்பர் 30-ந் தேதி முதல் நடைபெற உள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel