தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) பிரதிநிதி உட்பட 4 உறுப்பினர்களை இடம்பெறச் செய்ய வலியுறுத்தி முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு நேற்று (நவம்பர் 25-ந் தேதி) ஆளுநர் அர்லேகர் எழுதிய கடிதத்தை இன்று (நவம்பர் 26-ந் தேதி) மக்கள் மாளிகை வெளியிட்டுள்ளது. அக்கடிதத்தில் ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள பல அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாக உள்ளன. இதனால் பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நீங்கள் நேரடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழக அரசு குழுவால் பயன் இல்லை
தற்போது பல்கலைக்கழகங்கள் தொடர்பான நிர்வாக முடிவுகள், தமிழக அரசு அமைத்துள்ள ஒருங்கிணைப்பாளர் குழு மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்தந்தப் பல்கலைக்கழக அளவிலேயே முடிவுகளை எடுக்க வேண்டிய அன்றாட நிர்வாக மற்றும் கல்விசார் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே, திறம்பட்ட நிர்வாகத்தையும் கல்விசார் செயல்பாடுகளின் தொடர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில், அந்தந்தப் பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் யூஜிசி விதிமுறைகளின்படி முழுநேரத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்வது அவசியம்.
அதேநேரத்தில், மாணவர்கள் மேலும் பாதிக்கப்படாத வகையில், சட்டப்படி அனுமதிக்கப்படும் இடங்களில் நிலுவையில் உள்ள அனைத்துப் பட்டமளிப்பு விழாக்களையும் விரைவில் நடத்துவதற்குப் பல்கலைக்கழக வாரியாக அட்டவணை தயாரிக்கலாம்.
யூஜிசி பிரதிநிதி விவகாரம்
2018-ஆம் ஆண்டு யூஜிசி விதிமுறைகளின் 7.3(ii) பிரிவின்படி, துணைவேந்தர் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுக்களில் யூஜிசி தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதியை இடம்பெறச் செய்வதுதான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுக்கும் பல்கலைக்கழக வேந்தருக்கும் இடையே நிலவும் மாறுபட்ட நிலைப்பாடுகளால் நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், டாக்டர் எஸ்.மோகன் எதிர் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தரின் செயலாளர் (2026 INSC 100) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் 2026 ஜனவரி 30-ந் தேதி வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அப்போதைய ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமானவர், பிப்ரவரி 2-ந் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், துணைவேந்தர் தேடுதல் குழுக்களில் யூஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யுமாறும், தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளின் முடிவு வெளியாகும் வரை நடைபெற்று வரும் தேர்வு நடவடிக்கைகளை நிறுத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
4 உறுப்பினர்கள் கொண்ட தேடுதல் குழு
பரஸ்பர ஆலோசனையின் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவும், வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான தேர்வு முறையை உருவாக்கவும் பின்வரும் நடவடிக்கைகளை முன்மொழிகிறேன்.
துணைவேந்தர் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவில்,
- பல்கலைக்கழக வேந்தரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர்.
- பல்கலைக்கழக சிண்டிகேட்டால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர்.
- யூஜிசி தலைவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர்.
- மாநில அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர்.
ஆகிய 4 பேர் இடம்பெறலாம். பொருந்தக்கூடிய சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு இக்குழு அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவின் உறுப்பினர்கள் நிரூபிக்கப்பட்ட நேர்மையும் தொழில்சார் நன்மதிப்பும் கொண்ட சிறந்த கல்வியாளர்களாகவும் நிபுணர்களாகவும் இருக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு முன்பே தேர்வுப் பணிகள்
துணைவேந்தர் பணியிடம் காலியாகும் என எதிர்பார்க்கப்படும் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பே, இயன்றவரை தேர்வு நடவடிக்கைகளைக் குழு தொடங்க வேண்டும்.
தேடுதல் குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் துணைவேந்தர் பணியிடத்துக்கான விளம்பரம் வெளியிடப்பட வேண்டும். விளம்பரம் வெளியிடப்பட்ட 2 மாதங்களுக்குள் விண்ணப்பப் பரிசீலனை மற்றும் நேர்முகத் தேர்வுகளை முடிக்க வேண்டும்.
மிக முக்கியமாக, குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவெடுத்து, தகுதியான 3 பேரைத் தேர்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் அவர்களை வரிசைப்படுத்த வேண்டும்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருப்பு
பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் விரைவான, சட்டரீதியாக நிலைத்துநிற்கும் தீர்வை எட்ட முடியும் என நம்புகிறேன்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தங்களது பட்டங்களைப் பெறக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலன் கருதி, நான் முன்மொழிந்துள்ள நடைமுறையைச் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்தவும் நீங்கள் நேரடியாகத் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









