அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வென்றே தீர வேண்டும் என நாம் தமிழர் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தம்மை சட்டசபைக்குள் வரவிடாமல் தடுக்க முதல்வர் விஜய் முயற்சிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பிரபாகரன் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று (நவம்பர் 26-ந் தேதி) நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: நம்முடைய மொத்த வலிமையையும் அம்பாசமுத்திரத்தில் செலவிடுவோம். அவரிடம் இருப்பது மணி அண்ட் பவர் (பணமும் அதிகாரமும்). மொத்த அதிகாரமும் அவருக்கு வேலை செய்யும்.
நாம் எப்படியாவது சட்டமன்றத்துக்குள் போக வேண்டும் என்று நினைக்கிற மாதிரி, அவர் எப்படியாவது என்னை உள்ளே வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பார்.
வீட்டுக்கு ஒரு ஓட்டு
நம்முடைய மொத்த வலிமையையும் பயன்படுத்துவோம். வீட்டுக்கு ஒரு ஓட்டு. நீ காலில் விழுவாயோ, கையைப் பிடிப்பாயோ, அங்கேயே படுத்துக் கிடப்பாயோ எனக்குத் தெரியாது. தெருத்தெருவாக நடக்கிறோம். மக்கள் மனதை வெல்கிறோம். தொகுதியை வெல்கிறோம்.
நான் வெளியூர்க்காரனா?
வெளியூர்க்காரன் என்று சொல்வான். என் நாட்டில்தானே நிற்கிறேன். தாமிரபரணிக்காக நானும் எங்கள் அப்பன் நல்லகண்ணுவும்தானே போராடினோம்? நீ என்ன செய்துகொண்டிருந்தாய்? ஸ்டெர்லைட்டுக்கும் அணு உலைக்கும் எதிராக நாங்கள்தானே போராடினோம்? நான்தானே வந்தேன்? நீங்கள் வந்தீர்களா? இது என் நாடு. என் மக்கள். நமக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஒரு தொகுதியை வென்றுவிட்டால் தமிழ்நாட்டிலேயே சிறந்த தொகுதி அம்பாசமுத்திரம். மாநிலத்தை வென்றுவிட்டால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு. எவ்வளவு பெரிய கோட்டையாக இருந்தாலும் ஒரு சின்ன சாவித் துவாரத்தில்தான் திறக்க வேண்டும். அதனால் நம்முடைய கோட்டையை அம்பாசமுத்திரத்தில் திறக்கிறோம்.
நீ என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. வந்துவிடு. சாப்பிடக் கிடைக்கிறதோ இல்லையோ வந்துவிடு. புளியோதரை, தயிர் சோறு சாப்பிட்டாவது நடப்போம். வென்றே தீர வேண்டும். அடித்து உள்ளே போய்விட்டேன் என்று வைத்துக்கொள். கதை முடிந்துவிட்டது. முதல்வர் எழுந்திருப்பார். எதிர்க்கட்சித் தலைவர் எழுந்திருப்பார். அண்ணனும் எழுந்திருப்பேன். அப்போது தெரிந்துவிடும் எது சரியானது என்று. அதற்குத் தயாராக வேண்டும்.

எல்லோருமே பொது வேட்பாளர்கள்தான்
ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடவில்லை. தவெக போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. இந்த வாக்குகள் எல்லாம் யாருக்குப் போனது? யாருக்குப் போட்டார்கள்?
சும்மா பொது வேட்பாளர், பொது வேட்பாளர் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் சீமான் மட்டும் பொது வேட்பாளர் இல்லை. ஒவ்வொரு பிள்ளையும் பொது வேட்பாளர்தான். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பேரம் பேசினார்கள். 2024-ஆம் ஆண்டு தேர்தலில் 36 லட்சம் வாக்குகள் வாங்குவேன் என்றே தெரியாது. 30 லட்சம் வாக்குகள் இருக்கும் நிலையிலேயே அவ்வளவு பேரம் பேசினார்கள். கூட்டணி வை என்று பேசியவர்கள்தான் இப்போது என்னைத் திட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
என்னை சரிசெய்ய முடியாது என்று என் மனைவி கயலிடம் போய் பேசினார்கள். நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள். அவர் என்னைவிடப் பிடிவாதக்காரர். நாம் தோற்றாலும் சரி, எத்தனை முறை தோற்றாலும் சரி, கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை என்பவர். என்னுடைய வெற்றியை நீ தள்ளிப்போடலாம். ஆனால் தடுத்துவிட முடியாது.
அம்பாசமுத்திரத்தையே சுற்றிச் சுற்றி வருவார் விஜய்
நம்முடைய உணர்வை இரு மடங்காக ஏற்றிக்கொண்டு அம்பாசமுத்திரத்தை வெல்கிறோம். ஓட்டுக்குக் காசு கொடுப்பார்கள். இல்லையென்றால் சோறு போடுவார்கள். அவ்வளவுதான் செய்வார்கள். வேறு என்ன, ஆட்சியின் சிறப்பைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறார்களா? நீ வேண்டுமானால் பார். அவர் எங்கேயும் போகமாட்டார். இங்கேயே சுற்றுவார். ரோடு ஷோ போடுவார். இறங்கி நடப்பார். ஏன் என்று கேள். என்னை சட்டமன்றத்துக்குள் விட்டுவிடக் கூடாது என்று நினைப்பார். நீ எந்தக் காரணத்துக்காக நான் வெல்லக்கூடாது என்று நினைக்கிறாயோ, நான் அதே காரணத்துக்காக வென்றே தீர வேண்டும் என்று போராடுவேன். இவ்வாறு சீமான் பேசினார்.









