நாம் தமிழர் கட்சியின் திரள் நிதி வசூல் தொடர்பாக விமர்சிக்கும் தவெகவினருக்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ள சீமான், விஜய்யின் திரைப்படச் சம்பளம், வரி பாக்கி தொடர்பாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நெல்லையில் பிரபாகரன் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று (நவம்பர் 26-ந் தேதி) நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: சீமான் திரள் நிதி வாங்கிவிட்டார், திருடிவிட்டார் என்கிறார்கள். என்னமோ இவன் வீட்டுக்குப் போய் உண்டியலை உடைத்து எடுத்துக்கொண்டு வந்த மாதிரி பேசுகிறான். பைத்தியக்கார நாயே.. பிளாக் டிக்கெட் வித்த பிக்காலிப் பயலே.. நீயும் கொடுத்தியா திரள் நிதி?
திரள் நிதி என்றால் என்ன? கிரவுட் ஃபண்ட் (Crowdfunding) என்று சொல்லியிருந்தால் பேசாமல் இருந்திருப்பான். நான் தூய தமிழில் திரள் நிதி என்று சொன்னால் திரள் நிதி திருடி, திரள் நிதி திருடி என்கிறான்.
விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் எப்படி வந்தது?
100 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருக்கிறான்டா உன் தலைவன். கார் வாங்கியதற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி கட்டவில்லை. 200 கோடி ரூபாய் அவருக்குச் சம்பளம் என்கிறாய். எங்கிருந்து வந்தது? எங்கிருந்து வந்தது?
உரிய டிக்கெட் விலையான 150, 200 ரூபாய்க்கு விற்றிருந்தால் 20 கோடி ரூபாய் கூட சம்பளம் கொடுத்திருக்க முடியாது. பிளாக்கில் டிக்கெட் விற்றதனால், 2,000, 3,000 ரூபாய்க்கு விற்றதனால்தான் அவருக்குச் சம்பளம் கூடுகிறது. நீ நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறாயா?
எனக்கே திமுக எதிர்ப்பைச் சொல்லிக் கொடுக்கிறான்
திமுக ஆட்சியில் இருக்கும்போது எதிர்த்துப் போராடியவன் நான். ஒரே நாளில் மட்டும் 100 வழக்குகள் போட்டது திமுக. எவ்வளவு அவதூறு, எவ்வளவு கேவலம்? எனக்கே திமுக எதிர்ப்பைச் சொல்லிக் கொடுக்கிறான். இனத்தைக் கொன்ற காங்கிரஸுடன் நின்றுகொண்டு நீ எனக்குக் கற்றுக் கொடுக்கிறாயா?
பிளாக் டிக்கெட் விற்கிற வேலையும் போச்சு
திரள் நிதி திருடி, திரள் நிதி திருடி என்கிறார்கள். அந்த வேலையும் போச்சு. பிளாக் டிக்கெட் விற்கிற வேலையும் போய்விட்டது. இணையவழியில் டிக்கெட் வாங்குகிறார்கள். இந்த சீமானைப் பார்த்தீர்களா என்கிறான். என்னைப் பேசாதே. இந்த நாட்டில் எவனுக்காவது அரசியல் இருக்கிறது என்று சொல். உன் தத்துவம் என்ன? உன் கொள்கை என்ன? நீ செய்கிற ஏதாவது ஒன்றைச் சொல். என்னை ஏன் திட்டுகிறாய்?
பூஜ்ஜியம் இல்லாமல் எண்ணுக்கு மதிப்பு இருக்கிறதா?
நான்தான் தோற்றுப் போய்விட்டேன். நான் ஒன்றும் இல்லை. டெபாசிட் வாங்கவில்லை. கட்டுத்தொகை பெறவில்லை. ஜீரோ, ஜீரோ என்கிறாய். என்னை எதற்குப் பேசுகிறாய்?
இப்போது தெரிகிறதா? எத்தனை எண் போட்டாலும் பக்கத்தில் ஜீரோ இருந்தால்தானே மதிப்பு?
இப்ப நான் வெரி பிஸி ஆர்ட்டிஸ்ட்
உனக்காகத்தான்டா நெஞ்சு வலிக்கக் கத்திக்கொண்டிருக்கிறேன். உனக்காக, உன் பிள்ளை குட்டிகளுக்காகத்தான். படித்துச் சொன்னாலும் கேட்பதில்லை. நடித்துச் சொன்னால்தான் கேட்பேன் என்கிறாய். சரி போ.. நான் நடிக்கப் போகிறேன். வேறு என்ன செய்வது? இப்போது வெரி பிஸி ஆர்ட்டிஸ்ட் நான்தான். இங்கிருந்து நேராக ஷூட்டிங்தான். இவ்வாறு சீமான் பேசினார்.









