திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (நவம்பர் 27-ந் தேதி) தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்க உள்ளது.
திருச்சி கிழக்கு
தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இத்தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
பெருந்துறை
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் பெருந்துறை தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
அம்பாசமுத்திரம்
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து காந்திமதிநாதன் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.
விராலிமலை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் விராலிமலை தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
கரூர்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் கரூர் தொகுதி காலியானது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் மதியழகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர் வெங்கடாசலபதி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இடைத்தேர்தல் நடைபெற்ற பின்னர், ஏற்கெனவே தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் மற்றொரு வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டால், ஒரே தொகுதிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உருவாகும் சட்டச் சிக்கல் ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்தே 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க ஜூலை 10-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் இந்த வழக்கில் ஆகஸ்ட் 24-ந் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தடையை நீக்கக் கோரி விஜய் மனு
இதனையடுத்து 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை மனு தாக்கல் செய்யப்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை மே 10-ந் தேதியே விஜய் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந் தேதிதான் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்தார். விஜய்யின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றபோது எந்தத் தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என்பதால் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என விஜய் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பெருந்துறை தேர்தல் வழக்கு தள்ளுபடி
இதனிடையே பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருந்துறை தொகுதிக்காவது இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என ஜெயக்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செப்டம்பர் 8-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை செப்டம்பர் 28-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
விஜய் தரப்பு வாதம்
செப்டம்பர் 28-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மக்கள் பிரதிநிதி இல்லாமல் ஒரு தொகுதியை நீண்டகாலம் காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது என விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நாளை தீர்ப்பு
இந்த நிலையில்தான் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
கொளத்தூர் இடைத்தேர்தல்?
இதனிடையே கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு நவம்பர் 19-ந் தேதி காலமானதால் அத்தொகுதியும் காலியாக உள்ளது. நாளைய தீர்ப்பில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை நீக்கப்பட்டால், கொளத்தூர் தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்.









