கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில், பெண் மாவட்ட ஆட்சியர் இன்று ( நவம்பர் 26) கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்து நீதிபதியின் முன் நேரடியாக வாக்குமூலம் அளித்தார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் ஆட்சியர் முறைப்படி எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், அவர் கடந்த ஜூலை 31-ஆம் தேதி தலைமைச் செயலாளருக்கு இது குறித்துப் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் வைத்து திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷிற்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில், நேரடியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.









