கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருள் விக்னேஷை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டியதுதானே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் பிரபாகரன் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று (நவம்பர் 26-ந் தேதி) நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை… ஐபிஎஸ் அதிகாரியை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறான். ஐஏஎஸ் அதிகாரிக்குக் காதல் கடிதம் அனுப்புகிறான். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
உதயநிதி விவகாரத்தில் யார் புகார் கொடுத்தது?
அந்த மாவட்ட ஆட்சியர் ஏன் புகார் கொடுக்கவில்லை? ஏன் புகார் அளிக்கவில்லை? என்கிறார்கள். உதயநிதி பேசியதற்காகக் கைது செய்தீர்களே.. யார் புகார் அளித்தது? எத்தனை ஆயிரம் காவலர்கள் அதிகாலையில் வந்தீர்கள்? கைது செய்து அழைத்துச் சென்றீர்களே.. எதற்காகக் கைது செய்தீர்கள்? யார் புகார் அளித்தது?
இவ்வளவு தூரம் தலைமைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து, புகார் அளித்து, எல்லோரிடமும் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப் பயப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் என்ன ஹீரோ? என்ன ஹீரோ? தேர்தலைச் சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள்?
தோல்வியைத் தாங்கும் துணிவு இருக்கிறதா?
ஒன்றைக் கவனித்துக்கொள்ளுங்கள். நாம் தோற்றுக் களத்தில் நிற்கிறோம். அவர் தோற்றிருந்தால் எங்கே இருந்திருப்பார் என்றே தெரியாது. மக்கள் திடீரென அவருக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டார்கள். அவர் ஏறி உட்கார்ந்துவிட்டார். தோல்வியைத் தாங்குகிற துணிவில்லாதவன் எப்படி வீரனாக இருக்க முடியும்?
எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்யுங்கள்
வா.. வந்து அவனை நீக்கு.. தகுதி நீக்கம் செய்து வெளியே போடு என்று சொல்லு. மறுபடியும் தேர்தலை சந்திக்கலாமே. ஒரு பெண்ணுக்கு, ஒரு மாவட்ட ஆட்சியருக்கு அவர் இப்படிச் செய்துவிட்டதால் தூக்கிவிட்டார் என்று மக்கள் உங்களுக்குத்தானே வாக்கு செலுத்துவார்கள்? ஏன் அந்த நம்பிக்கை உங்களுக்கு வரவில்லை?
இதை ஏன் பேசுகிறேன் என்று தெரியுமா? கேட்பார்.. பேச்சைப் போட்டுக் கேட்பார்.. என்ன பேசியிருக்கிறார் என்று பார்ப்பார்.

சிங்கப்பெண் எங்கே போனது?
சிங்கப்பெண் எங்கே போனது? சிங்கப்பெண்ணுக்குக் காதல் கடிதம் போட்டுக்கொண்டிருக்கிறான். ஐபிஎஸ் அதிகாரியான பெண்ணை இரவில் வீட்டுக்கு வா என்கிறான். எங்கே இருக்கிறது சிங்கப்பெண்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை.
இப்போது எல்லாமே வெற்று அறிவிப்புகள்தான். இதைத்தான் நாம் செய்தி அரசியல், விளம்பர அரசியல் என்கிறோம். செயல் அரசியல், சேவை அரசியல் கிடையாது. இங்கே கட்சி அரசியல், தேர்தல் அரசியல்தான் இருக்கிறது. மக்கள் அரசியல் கிடையாது.
இவர் எல்லாரையும் தாண்டி, திராவிடக் கட்சிகளைவிட மோசமான செய்தி அரசியலையும், விளம்பர அரசியலையும், தேர்தல் அரசியலையும் செய்கிறார். இவ்வாறு சீமான் பேசினார்.









