கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் விஜய் மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, நமது மின்னம்பலத்துக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சந்துரு, தவெக எம்.எல்.ஏ. விவகாரத்தில் விஜய் அரசின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீதிபதி கே.சந்துருவின் பேட்டி:
கேள்வி: ஒரு எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இதில் யார் பொறுப்பேற்பது?
நீதிபதி சந்துரு: நீங்கள் சொல்லக்கூடிய குறிப்பிட்ட பிரச்சனையில் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான தகவல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதன் முழு விவரமும் நமக்குத் தெரியாது.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் அல்லது தொல்லைகளைத் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டு POSH சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது. அந்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு தொழிலாளர் சட்டம். ஒரு பணியிடத்தில் பெண் தொழிலாளிக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்கான சட்டம். வேலை கொடுக்கக்கூடிய முதலாளியோ, நிர்வாகமோ, அங்கு பணியாற்றக்கூடிய ஒருவர் மீது நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தலாம்.
ஆனால் அப்படி நடத்தக்கூடிய விசாரணை நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்; அதில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் உள்ளக விசாரணைக் குழு தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது. அந்த உள்ளக விசாரணைக் குழு அளிக்கக்கூடிய பரிந்துரையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்க முடியும். பணியிடத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனை என்று வரும்போது பணிநீக்கம், பதவியிறக்கம், ஊதிய வெட்டு எனப் பணி தொடர்பான தண்டனைகளை வழங்க முடியுமே தவிர வேறு தண்டனை வழங்க முடியாது.
எம்.எல்.ஏ.வுக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர். அவர் மீது என்ன தண்டனை வழங்க முடியும்? தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் அந்த நிர்வாகத்துக்கோ அரசாங்கத்துக்கோ கிடையாது.
இதில் ஒரே ஒரு வழி என்னவென்றால், பாலியல் தொல்லை கொடுப்பது தற்போது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 75-வது பிரிவு முதல் 80 வரை இதுபோன்ற குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கின்றன.
அதனால் யாருமே தங்களுடைய நிர்வாகத்திடம் சென்று புகார் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காவல்துறைக்கு இப்படிப்பட்ட தகவல் வந்தால் நேரடியாக வழக்குப் பதிவு செய்ய முடியும். அதற்கு எழுத்துப்பூர்வமான புகாரே தேவையில்லை. அப்படி வழக்குப் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு ஏற்ப வெவ்வேறு கால அளவிலான சிறைத் தண்டனைகள் இருக்கின்றன. அதை நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யும்.
இப்போது இதில் இரண்டு விதமான சூழ்நிலைகள் இருக்கின்றன. சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதுவரை நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று நீதிபதி கேட்கிறார். அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாக எந்தப் புகாரும் வரவில்லை என்று சொல்கிறது. ஆனால் பின்னர் கேள்விப்படும்போது புகார் அனுப்பப்பட்டிருப்பது தெரியவருகிறது. இந்த வழக்குக்குப் பிறகு காவல்துறையிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இனிமேல் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ்தான் விசாரணை நடைபெறும். அந்த விசாரணையில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைத்தால் அவர் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்துவிடுவார். அதற்குக் குறைவான சிறைத் தண்டனை என்றால் அவர் பதவியில் தொடரலாம்.
முதல்வர் விஜய்க்கு இரட்டைப் பொறுப்பு
இப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சூழ்நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை சொல்கிறார்கள். இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம் என்று சொல்கிறார்கள்.
முக்கியமான பிரச்சனை என்னவென்றால், முதலமைச்சர் அந்தக் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு இரண்டு விதமான பொறுப்புகள் இருக்கின்றன. ஒன்று, முதலமைச்சர் என்ற முறையில் நிர்வாகத்துக்கான அதிகாரம். இன்னொன்று, தனது கட்சி என்பதால் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம். தன்னுடைய கட்சியைச் சேர்ந்த ஒருவர் மீது இப்படிப்பட்ட புகார் வருகிறது; மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்றால், நேரடியாக அழைத்து என்ன நடந்தது என்று கேட்டு அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்க முடியும்.
அப்படிச் செய்யவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். ஏனென்றால் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்தாலும் அது அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர்தான். அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்போது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் என்ன காரணத்தினாலோ இந்த விஷயத்தை நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டு, குறிப்பாக சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று, கடைசியாக நீதிமன்றத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது ஒரு நல்ல அரசாங்கத்துக்கு அழகு கிடையாது.
கேள்வி: தேசிய மகளிர் ஆணையமும் நீதிமன்றமும் தலையிட்ட பிறகுதான் நிறைய விஷயங்கள் வெளியே வருகின்றன. ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது. ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. பின்னர் இந்தத் தகவல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. தலைமைச் செயலாளருக்கும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும் வருகிறது. ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேட்கும்போது, அது வெளியே கசிந்துவிடும் என்பதால் பதிவு செய்யவில்லை என்கிறார்கள். அப்படியானால் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?
நீதிபதி சந்துரு: இந்த மொத்த விஷயத்தையும் பார்க்கும்போது இப்படிப்பட்ட சமயத்தில் யாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஒரு பக்கம் கட்சியின் பொறுப்பு, இன்னொரு பக்கம் நிர்வாகப் பொறுப்பு இருக்கிறது. நிர்வாகத் துறையின் தலைமைச் செயலாளருக்குத் தகவல் வந்திருக்கிறது என்றால் அது எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்த அதிகாரியின் கணவர் அனுப்பியதாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு யாருக்குமே முழு உண்மை தெரியாது.
ஆனால் நீதிபதி கேட்ட கேள்வி என்னவென்றால், இப்படிப்பட்ட குற்றச்சாட்டு இருக்கும்போது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி இது ஒரு Cognizable Offence. காவல்துறை நேரடியாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்யக்கூடிய குற்றம். அதனால்தான் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்று கேட்கிறார். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கிறார்கள். இது ஒரு வழி. இதில் அவர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. குற்றவியல் சட்டத்தின் கீழ் நேரடியாக நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும். குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும்.
தலைமைச் செயலாளருக்கு என்ன அதிகாரம்?
ஆனால் அதையும் தாண்டி இது வெறும் குற்றவியல் பிரச்சனை மட்டுமல்ல. ஒருவருடைய தனிப்பட்ட செயல்பாடு, தனிப்பட்ட நடத்தை என்று வரும்போது எல்லோருக்கும் முன்பாகக் கட்சி நிர்வாகம் ஒரு பெரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும். தலைமைச் செயலாளர் விசாரித்தார்; தலைமைச் செயலாளர் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள். அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நான் சொன்னதைப் போல POSH சட்டத்தின் கீழ் அவரால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? யார் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறதோ அவர் அரசு ஊழியர் கிடையாது. அரசு ஊழியராக இருந்திருந்தால் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைத்திருக்க முடியும். யாருக்குமே இப்படிப்பட்ட சமயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்ற ஞானம் இருந்திருக்க வேண்டும். அது இல்லை.
நான் வழக்கறிஞராக இருந்தபோது இப்படிப்பட்ட இரண்டு, மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அப்போது எம்ஜிஆர்தான் முதலமைச்சராக இருந்தார். அவரால் உடனடியாக யோசித்து நடவடிக்கை எடுக்க முடிந்தது. அதனால் அது ஒரு பெரிய விஷயமாக மாறாமல் போனது. அதுபோல கட்சி ரீதியாகத் திரைமறைவில் ஒரு நடவடிக்கை எடுத்து இதற்குத் தீர்வு கண்டிருக்க முடியும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
எம்ஜிஆருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்
கேள்வி: அந்தச் சம்பவங்களைச் சொல்லுங்கள் சார்.
நீதிபதி சந்துரு: எனக்குத் தெரிந்து 1984-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் இந்திய தண்டனைச் சட்டத்தைத் திருத்துகிறார்கள். இந்திய தண்டனைச் சட்டத்தின் 292-வது பிரிவின்படி ஆபாசப் புத்தகங்களை வெளியிடுவது குற்றமாகும். ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டால் அந்தப் புத்தகங்களைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்த பிறகு நீதிமன்றம் நோட்டீஸ் கொடுக்கும். நேரடியாகக் கைது செய்ய முடியாது.
ஆனால் எம்ஜிஆர் என்ன திருத்தம் கொண்டுவருகிறார் என்றால், 292-ஏ என்ற பிரிவு. அதில் தரக்குறைவாக எழுதுவது, அசிங்கமாக எழுதுவது, ஆபாசமாக எழுதுவது ஆகியவற்றைக் காவல்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றமாக மாற்றுகிறார். புகார் இல்லாமலேயே காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், பல்வேறு பத்திரிகைகளைச் சேர்ந்தவர்களையும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களையும் மிரட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. காலையில் திடீரென போலீஸ் வந்து கைது செய்தால் என்ன செய்வது? எது அசிங்கமானது, எது அவதூறானது என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறைதான் முடிவு செய்யும்.
ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் இருப்பதாகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. பத்திரிகையாளர் சங்கங்களும் பத்திரிகை ஆசிரியர்களும் கண்டித்தார்கள். அப்போது ஒரு வழக்கறிஞர் என்னிடம் வந்தார். ஒரு வழக்கு தொடர வேண்டும் என்றார்.
எம்ஜிஆரின் வலது கையாக இருந்த ஜேப்பியார் ஒரு பத்திரிகை நடத்துகிறார். அந்தப் பத்திரிகையில் கேவலமாக எழுதுகிறார்கள், ஆபாசமாக எழுதுகிறார்கள். அந்தப் பத்திரிகை தொடர்ந்து நடைபெறும்; எதிர்க்கட்சிப் பத்திரிகைகளுக்கு ஆபத்து வரும் என்றால் அது பாரபட்சமான போக்கு என்று கூறி ஒரு வழக்கு தொடர்ந்தோம்.
அந்த வழக்கில் எம்ஜிஆரையும் ஒரு தரப்பினராகச் சேர்த்துவிட்டோம். முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் எனக் குறிப்பிட்டு அவரை 5-வது எதிர்மனுதாரராகச் சேர்த்தோம். என்ன ஆபாசமாக எழுதியிருக்கிறார்கள் என்று நீதிபதி கேட்டார். ஜேப்பியார் நடத்திய பத்திரிகைகளைக் காட்டினோம். அவற்றைப் பார்த்தவுடன் அரசாங்கத்துக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார். எம்ஜிஆருக்கும் நோட்டீஸ் சென்றது.
ஜேப்பியார் பத்திரிகையை நிறுத்திய எம்ஜிஆர்
அடுத்த நாள் பத்திரிகைகளில் முதலமைச்சருக்கு நோட்டீஸ், ஜேப்பியார் நடத்தும் ஆபாசப் பத்திரிகைக்கு அவரும் உடந்தை என்ற வகையில் செய்திகள் வருகின்றன. அதன்பிறகு அந்த வழக்கில் எம்ஜிஆர் பதில் மனு தாக்கல் செய்கிறார். அந்த நீண்ட பதில் மனுவில், தான் பாரபட்சமாகச் செயல்படவில்லை என்றும், தாய்க்குலத்தின் மீது தனக்கு எப்போதுமே மரியாதை உண்டு என்றும், இப்படிப்பட்ட தரக்குறைவான செயல்களை ஆதரிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், சம்பந்தப்பட்ட பத்திரிகையை அச்சிடுவதை நிறுத்திவிட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். எங்களுக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால், அந்தப் பத்திரிகையை நடத்தியவர்களை எம்ஜிஆர் அழைத்து பத்திரிகையை நிறுத்தச் சொல்லிவிட்டார்.
அடுத்த மாதத்திலிருந்து அந்தப் பத்திரிகை வரவில்லை. பிரச்சனை முடிந்துபோனது. ஆனால் பிரச்சனையை எப்படித் தீர்த்தார்கள்? தன்னையும் சம்பந்தப்படுத்தி ஒரு விவகாரம் நீதிமன்றம் வரை செல்கிறது என்றால் அதற்குத் தீர்வு காண வேண்டும். நீதிமன்றம் முடிவு செய்வதற்கு முன்னதாகவே தன்னால் ஒரு முடிவு எடுக்க முடியும் என்று செயல்பட்டார்.
கேள்வி: ஒரு கட்சித் தலைவராக என்ன முடிவெடுக்க வேண்டுமோ அதை அவர் செய்திருக்கிறார்?
நீதிபதி சந்துரு: அதை அவரால் செய்ய முடிந்தது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்த எம்ஜிஆர்
அதேபோல அரசாங்கத்தில் பணியாற்றுபவர்கள் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான இப்போதைய சட்டங்கள் அப்போது கிடையாது. அப்போது பெல்லியப்பா என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது ஒரு புகார் வருகிறது. புகார் கொடுத்தவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தனது மனைவியுடன் அந்த ஐஏஎஸ் அதிகாரி முறையற்ற உறவு வைத்திருப்பதாக எம்ஜிஆரிடம் புகார் அளிக்கிறார்.
அந்தப் புகாரைப் பார்த்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் யோசிக்கிறார். இது தீவிரமான குற்றச்சாட்டு, இதை விட்டுவிடக் கூடாது என்று சொல்லி அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்கிறார். ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை மாநில அரசாங்கம் உடனடியாக இடைநீக்கம் செய்வது என்பது அதற்கு முன்பு நடந்ததில்லை. பொதுவாக அப்படிச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது அவருடைய பணி தொடர்பான பிரச்சனை இல்லை. ஒரு தனிப்பட்ட பிரச்சனை. இடைநீக்கம் செய்யப்பட்ட உடனேயே பெல்லியப்பா நீதிமன்றத்துக்குச் செல்கிறார். இடைநீக்க உத்தரவுக்குத் தடை பெறுகிறார். அந்தத் தடை உத்தரவை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்கிறது.
மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், ஒரு அரசு ஊழியர் 24 மணி நேரமும் விசுவாசமாகவும் கட்டுப்பாட்டுடனும் அரசாங்கத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்று கூறி பெல்லியப்பாவின் வழக்கைத் தள்ளுபடி செய்து அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்போது எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். ஏனென்றால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குச் சங்கம் இருக்கிறது. அவர்களுக்கென்று தொழில் ரீதியான உறவுகள் இருக்கின்றன. அரசாங்கம் அதிகாரிகளை நம்பித்தான் இருக்கிறது என்பதால் நேரடியாகப் பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டை அனுமதிக்க முடியாது; இப்படிச் செயல்படக்கூடியவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது இருந்தது. ஒரு பக்கம் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிந்தது. இன்னொரு பக்கம் நிர்வாக ரீதியாகவும் உடனடியாக முடிவெடுக்க முடிந்தது.
கேள்வி: இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று அந்த ஐஏஎஸ் அதிகாரி சொன்னாலும்கூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது?
நீதிபதி சந்துரு: நான் நிறைய அரசுப் பணி தொடர்பான வழக்குகளை நடத்தியிருக்கிறேன். அதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு வழக்கு வந்தது கிடையாது. அதாவது பணிக்கு அப்பாற்பட்டு நடைபெறக்கூடிய சம்பவங்களில்கூட அரசு ஊழியர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது; அரசு ஊழியர் எப்போதுமே விசுவாசமான ஊழியராக இருக்க வேண்டும் என்பதை எம்ஜிஆர் நடைமுறையில் நிறைவேற்றுகிறார். அதற்கு முன்பு அப்படி யாரும் நடந்துகொண்டது கிடையாது. அதை ஒரு தைரியமான நடவடிக்கை என்று சொல்லலாம்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைப் போல உட்கார்ந்திருக்கக் கூடாது
இந்த இரண்டு உதாரணங்களையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால், நிர்வாக ரீதியாகவும் அவர்தான் தலைவர்; கட்சிக்கும் அவர்தான் தலைவர். இப்போது இந்தப் பிரச்சனையைக் கட்சி ரீதியாக அணுக வேண்டும் என்றால் கட்சி ரீதியாக அணுகலாம். நிர்வாக ரீதியாக அணுக வேண்டும் என்றால் காவல்துறையை அழைத்து வழக்குப் பதிவு செய்யச் சொல்லலாம்.
இவர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்; நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமா என்று காவல்துறையினர் பயப்படலாம். முதலமைச்சர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும்கூட, காவல்துறை அதிகாரிகளை அழைத்து, நீங்கள் நடவடிக்கை எடுங்கள்; நாங்கள் தலையிடவில்லை; அவர் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று சொல்ல முடியும்.
ஆனால் எதுவுமே செய்யாமல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைப் போல அப்படியே உட்கார்ந்திருக்கக் கூடாது. எதிர்வினையாற்ற வேண்டும். இன்றைக்கு எல்லாமே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. அடுத்தடுத்த நிமிடங்களில் என்ன நடந்தது என்று கேட்கும்போது நீங்கள் பதுங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. நீதிமன்றமும் இதைக் கவனிக்கும். உங்களுக்குத்தான் கெட்ட பெயர்.
ஒரு முக்கியமான மாநிலத்தில் இப்படிப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டு வரும்போது மாநில அரசு சும்மா இருப்பது விசித்திரமாக இருக்கிறது என்று நீதிபதி சொல்கிறார். அப்படிப்பட்ட வார்த்தைகளை நீதிமன்றம் சொல்லக்கூடிய நிலைக்கு நீங்கள் இடமளித்திருக்க வேண்டாம். நீங்களே நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
அதுவும் புகார் கொடுத்தவர் ஒரு மாவட்ட ஆட்சியர்.
ராஜேஷ் தாஸ் விவகாரத்தில் நடந்தது என்ன?
இதற்கு முந்தைய அரசாங்கத்தில்கூட ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஜிபி மீதே புகார் கொடுத்தார். அவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகப் புகார் அளித்தார்.இன்னும் கேட்டால், அந்தப் பெண் அதிகாரியைத் தலைமைச் செயலகத்துக்கே வரவிடாமல் பரனூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்துகிறார்கள். அவரைத் தடுத்து நிறுத்திய அதிகாரியும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அப்போது அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புகார் கொடுத்தவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவருமே அரசு அதிகாரிகள் என்பதால் 2013-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழு அமைத்தது மட்டுமல்லாமல், அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இப்போது உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறார். ஆனாலும் ராஜேஷ் தாஸ் என்ற அந்த டிஜிபிக்குக் கட்டாய ஓய்வு அளித்துவிட்டார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் தூங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் செயல்படக்கூடிய அரசாங்கம் என்றால் அதன் முடிவுகளும் உடனடியாகத் தெரிய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புதானே? அந்தக் காரணத்தினால்தான் இதைச் சொல்கிறேன்.
கேள்வி: அடுத்ததாக இந்த வழக்கு எப்படிப் போகும்? எப்படி விசாரணையைக் கொண்டுசெல்வார்கள்?
நீதிபதி சந்துரு: இப்போது புகார் வந்துவிட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த கட்டம் அவரை கைது செய்யலாமா, வேண்டாமா என்பதுதான். கைது செய்யலாம். அல்லது அவர் முன்ஜாமீன் பெற முயற்சிக்கலாம். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இது கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பதால் அங்குள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும். எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தண்டனை அமையும். ஆபாசச் செய்திகள் அனுப்புவதற்கும் சட்டத்தில் பிரிவுகள் (77-வது) இருக்கின்றன. அதில் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கொடுக்கலாம். அதை நீதிமன்றம்தான் விசாரித்து முடிவு செய்ய முடியும்.
வாட்ஸ்அப் ஆதாரங்கள்
இரண்டாவது, இதில் வாட்ஸ் அப் வழியாகச் செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதால் குற்றம் செய்ததற்கான தடயங்கள் இருக்கின்றன. இது வாய்மொழியாக நடைபெற்ற சம்பவம் இல்லை. இதற்கு முன்னர் ராஜேஷ் தாஸ் விவகாரத்தில் வாய்மொழியாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் இருந்தன. நேரடியாகப் பார்த்தவர்கள் யாரும் சாட்சிக்கு வரவில்லை. அந்தப் பெண் அதிகாரி சொன்னதுதான் இருந்தது. இதில் அப்படிக் கிடையாது. அறிவியல் ரீதியான சோதனைகளின் மூலம் நிரூபிப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது.
ஆனால் இந்தப் பிரச்சனையில் ஏன் நீதிமன்றத்துக்குத்தான் சென்று ஒரு அரசு ஊழியர் நீதி பெற வேண்டுமா? அரசாங்கமே அவருக்கு நீதி வழங்க முடியாதா என்ற கேள்வி இருக்கிறது. அந்தக் கேள்விதான் முக்கியமான கேள்வி. ”எனக்கென்று சட்டப்படி உரிமை இருக்கிறது. நான் எங்கு வேண்டுமானாலும் சென்று நீதி பெறலாம். உங்கள் உதவியே எனக்குத் தேவையில்லை. ஆனால் நீங்கள் ஒரு நியாயமான அரசாங்கம்; அதனால் நீங்களே நடவடிக்கை எடுப்பீர்கள்” என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதனால்தான் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரியான கவிதா ராமு சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பெண் அதிகாரி புகார் கொடுத்ததாகப் பதிவிட்டிருக்கிறார். பின்னர் அதை நீக்கிவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஆனால் இங்கு முக்கியமான விஷயம், புகார் இல்லாமலேயே நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றச்சாட்டு இது என்பதுதான்.
காவல்துறை அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன
குற்றவியல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவர்கள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று எங்கேயுமே கிடையாது. தகவல் என்றுதான் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தகவல் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஒரு அலைபேசியில் வரக்கூடிய செய்திகூடத் தகவல்தான். ஒரு சாதாரண காகிதத்தில் வரக்கூடியதும் தகவல்தான். வாய்மொழியாக வருவதும் தகவல்தான். தகவல் கொடுப்பவர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
தலைமைச் செயலாளர் மீதான குற்றச்சாட்டுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அந்தப் பெண் அதிகாரியும் அமைதியாக இருக்கிறார். சிலர் மிகவும் அதிபுத்திசாலித்தனமாக சமூக வலைதளங்களில் அந்தப் பெண் அதிகாரி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குற்றவியல் வழக்கு தொடரலாம். என்னுடைய வீட்டில் ஒரு பொருள் திருட்டுப் போய்விட்டால் நான் எப்போது வேண்டுமானாலும் காவல்துறையிடம் செல்லலாம். ஆனால் இப்படிப்பட்ட திருட்டு நடந்திருக்கிறது என்றால் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் தனியாக ஒரு வழக்கு நடத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரசாங்கம் காவல்துறையை வைத்திருப்பதற்கான காரணமே குற்றங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான்.குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு எனக்குத் தெரிந்த தகவலை நான் சொல்லலாம்.
முடிவெடுக்க வேண்டியவர் முதலமைச்சர் விஜய்தான்..
இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் முதலமைச்சரிடம்தான் இருக்கிறது. ஏனென்றால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கான அதிகாரமும் அவருடைய கையில்தான் இருக்கிறது. காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் என எல்லாமே அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவ்வளவு நாட்களாக இப்படிப்பட்ட பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
கேள்வி: பொதுவாக இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உளவுத்துறை அறிக்கைகள் முதல்வருக்குச் செல்லும் அல்லவா? மே மாதம் பதவியேற்கிறார்கள். ஜூலை மாதமே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அப்படியானால் இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்குச் சென்றிருக்குமா? அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?
நீதிபதி சந்துரு: இப்போது இருக்கக்கூடிய நடைமுறை விதிகளின்படி தினசரி உளவுத்துறை அறிக்கை முதலமைச்சருக்கு வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் வழங்கப்படும். அதை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று தெரியாது.
ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்கு முன்னர் கல்வித்துறையில் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடிய இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் (SFI, CJP) பெயர்களைச் சேகரிக்கச் சொன்னபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எங்களையே உளவு பார்க்கிறீர்களே என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
உடனடியாக நாங்கள் சொல்லி அப்படிச் செய்யவில்லை; எங்களுக்குத் தெரியாது என்று தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டார். நான் சொல்லவில்லை; உதவி இயக்குநர்தான் செய்திருக்கிறார்; அவரை இடைநீக்கம் செய்கிறோம்; அந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுகிறோம் என்று கல்வித்துறைச் செயலாளர் சொன்னார். எல்லாமே மிகக் குறுகிய நேரத்தில் நடந்தன. தலைமைச் செயலாளருக்கு மேலே பொறுப்பில் இருப்பவர் முதலமைச்சர். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்க முடியாது. பின்னர் அந்தத் தலைவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக இரண்டு அமைச்சர்களை அனுப்பி, கட்சித் தலைவர்களின் அலுவலகங்களுக்கே சென்று, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; இது எப்படியோ நடந்துவிட்டது; தவறுக்கு வருந்துகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடவடிக்கை இருந்தது.
சத்தம் போட்டால்தான் நடவடிக்கையா?
அப்படியானால் சத்தம் போட்டால்தான், ஒரு பிரச்சனையைக் கிளப்பினால்தான், பிரச்சனையைக் கிளப்புகிறவர்களால் பின்னர் நமக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை Fire Fighting என்று சொல்வார்கள். தீயை அணைக்கிற வேலை. அதே வேலையை இங்கே செய்யவில்லை. ஏன் ஒரு முக்கியமான அமைச்சரை அனுப்பி அந்தப் பெண் அதிகாரியிடம் பேசி, பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறோம் என்று சொல்லியிருக்கக் கூடாது?
எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஏன் தவிர்த்தார்கள் என்பது இன்றுவரை தெரியவில்லை. இந்தப் பல்வேறு விவாதங்களையும் எப்போதோ முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். முன்புபோல இப்போது ஊடகங்கள் மட்டுமல்ல. சமூக ஊடகங்களும் பெரிய ஊடகங்களாக இருக்கின்றன. விதவிதமான கருத்துகள் வருகின்றன. சில கருத்துகள் நியாயமானவையாகவும் இருக்கலாம்.
ஆனால் அரசாங்கத்துக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ‘The proof of the pudding is in the eating’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். புட்டிங்கைச் சாப்பிட்டுப் பார்த்தால்தான் அது சரியாக வந்திருக்கிறதா, இல்லையா என்பது தெரியும். அதுபோல செயல்பாட்டின் மூலம்தான் அரசாங்கத்தின் திறன் தெரியவரும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி இன்றைக்கும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
கேள்வி: எப்போதோ முடித்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள். அந்தக் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட விவகாரங்கள் சமரசத்தில்தான் முடிக்கப்படுமா? மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசுவதோடு முடிந்துவிடுமா? அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா? சமரசத்துக்கு சட்டத்தில் இடமிருக்கிறதா?
நீதிபதி சந்துரு: குற்றவியல் சட்டத்தில் Compounding என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. குற்றங்களுக்கான தண்டனை 3 ஆண்டுகளுக்கு கீழே இருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சமரசமாகச் செல்லலாம். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். Compounding என்று சொல்வது சமரசம். POSH சட்டத்துக்கு முன்னர் இருந்த விசாகா தீர்ப்பில் அப்படிக் கிடையாது. ஆனால் POSH சட்டத்தில் சமரசம் செய்வதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் பிரிவுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இருவரும் சமாதானமாகச் சென்று ஒரு சமரசத்தை ஏற்படுத்திக்கொண்டால் விசாரணைக் குழுவின் விசாரணையைத் தொடர வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் சமாதானம் என்பதும் ஒரு தீர்வு. அதைத் தவறான தீர்வு என்று சொல்ல முடியாது.
ஒரு பிரச்சனையைப் பெரிய அளவில் வழக்காக எடுத்துச் செல்லாமல், சம்பந்தப்பட்டவர்களே சமரசமாகச் செல்வதை ஊக்குவிக்கக்கூடிய சட்ட நடைமுறைகளும் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர் சமரசத்தை விரும்புகிறாரா என்பதும் முக்கியமானது.
2013-ஆம் ஆண்டு POSH சட்டத்தில் சமாதானம் செய்வதற்கும், சமரசமாகச் செல்வதற்கும், அந்தச் சமரசத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமாதானமாகச் செல்வதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. எல்லா வழக்குகளிலும் கடைசியில் தண்டனை வழங்க வேண்டும், அபராதம் விதிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
பாதிக்கப்பட்டவர்கள் வேண்டாம் என்று சொன்னபோதும் அரசாங்கமே அதை மீறி வழக்கை நடத்தக்கூடிய குற்றங்களும் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு கொலை வழக்கில் யாரும் சமாதானமாகச் செல்ல முடியாது. நீதிமன்றம்தான் அதற்குத் தீர்ப்பு வழங்க முடியும். ஆனான் சின்ன சின்ன வழக்குகள், சமாதானமாக போவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளன. இதில் தண்டனை 3 வருஷத்துக்கு மேல இல்லை. POSH சட்டத்தின் கீழான விசாரணையிலும் சமாதானமாகச் செல்வதற்கான வழி இருக்கிறது. இந்தப் பிரச்சனையை இவ்வளவு பெரிதாக வளர விட்டுவிட்டு இப்போது சமாதான ஏற்பாடுகள் குறித்து யோசிப்பதுதான் தவறான முடிவு. இதை முதலிலேயே செய்திருக்க முடியும். இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார்.









