கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் கணவரிடம் விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஐஜி காமினி கண்காணிப்பார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து நேற்று (நவம்பர் 25-ந் தேதி) கள்ளக்குறிச்சிக்கு சென்ற சிருஷ்டி சிங், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கினார். மாவட்ட ஆட்சியரிடமும் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 26-ந் தேதி) நீதிபதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியரின் கணவரிடம் சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார்.









