திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுப்பதாகக் குற்றம்சாட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் நீண்டகாலம் முதல்வராக நீடிக்கமாட்டார் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் அரசியலமைப்பு தின விழா சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் இன்று (நவம்பர் 26-ந் தேதி) நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இன்று அரசியல் சட்டம் இயற்றப்பட்ட நாள். இந்தியாவுடைய உச்சபட்ச அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்கின்ற அந்த உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அதை ஏற்க மறுக்கிறார். ரிவ்யூ பெட்டிஷன் போடுகிறார். அதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. ஒரு வார காலத்துக்குள் பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
கிறிஸ்தவரா? இந்து எதிரியா?
ஆனால் அதை ஏற்க மறுத்து, பெரும்பான்மை சமுதாய இந்து மக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்துள்ளனர். இதற்கு காரணம் நம்முடைய முதலமைச்சர் ஒரு கிறிஸ்தவரா? அல்லது இந்து மக்களுடைய எதிரியா? இந்து மக்களுடைய விரோத அரசா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு எல்லாருடைய மனமும் இன்று புண்பட்டு கொண்டிருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். அரசியல் சாசனத்தின் சரத்து 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சரத்து 25-ன் படி ஒரு தனி மனிதனின் வழிபாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; சரத்து 26-ன் படி ஒரு மதம் எப்படியெல்லாம் வழிபாடு இருக்க வேண்டும் என்பதை அந்த நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்யலாம்.
உச்சநீதிமன்றம் பதிலடி தர வேண்டும்
ஆக, அரசியல் சாசனத்தின் சரத்து 15-ஐ இந்த அரசாங்கம் மதிக்கவில்லை; அரசியல் சாசன சரத்து 25-ஐ இந்த அரசாங்கம் மதிக்கவில்லை. அரசியல் சாசன சரத்து 26-ஐ இந்த அரசாங்கம் மதிக்கவில்லை. என்ன திமிர்? என்ன அகங்காரம்? என்பதுதான் என்னுடைய கேள்வி. ஆகவே உச்சநீதிமன்றம் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
சட்டம் கடமையை செய்யும்.. முதல்வராக நீடிக்கமாட்டார்
சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும். முதலமைச்சர் அவர்களே, இந்த சட்டம் இயற்றப்பட்ட நாளில், நீங்கள் சட்டமன்றத்தில் அதிகமாக நீடிக்க மாட்டீர்கள் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவிக்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பி.எல். சந்தோஷ் எச்சரிக்கை
முன்னதாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை விஜய் அரசு மீறிவிட்டதாக பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் கடந்த நவம்பர் 24-ந் தேதி குற்றம்சாட்டியிருந்தார்.
கூட்டணிக் கட்சிகள் சிலவற்றைத் திருப்திப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், விஜய் தலைமையிலான தவெக அரசு சட்ட ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பெரிய விவகாரத்தில் விஜய் அரசு கைவைத்திருப்பதாகவும் பி.எல். சந்தோஷ் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









