‘இதற்குதானா ஆசைப்பட்டாய்.. வீரமணி’ பிரிட்ஜ் முதல் பீரங்கி வரை COD ஆர்டர்.. திணறும் இன்ஸ்டா பிரபலம்

Published On:

| By Pandeeswari Gurusamy

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு லைக்குகளையும், வியூஸ்களையும் பெறுவது பலருக்கும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால், ரசிகர்களிடம் இனிப்பு வாங்கி அனுப்புமாறு கேட்டது, ஒருவருக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் வீரமணி தொடர்பான இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சுற்றுலாவுக்காக உதவி கேட்ட வீரமணி

மதுரையைச் சேர்ந்த வீரமணியை இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். கடந்த மாதம் கேரளாவுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்ட அவர், தனது பயணத்துக்கு உதவுமாறு ஃபாலோவர்களிடம் கேட்டதுடன், கியூ ஆர் கோடு மற்றும் தொலைபேசி எண்ணை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனக்கு ரூ.6,000 கிடைத்ததாக அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, தீபாவளியை முன்னிட்டு தனக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி அனுப்புமாறு கேட்டுக்கொண்டதுடன், தனது வீட்டு முகவரியையும் பகிர்ந்துள்ளார். அதன்பிறகுதான் பிரச்சினை தொடங்கி உள்ளது.

கேஷ் ஆன் டெலிவரியில் குவிந்த பொருட்கள்!

வீரமணியின் முகவரிக்குப் பல்வேறு பொருட்கள் கேஷ் ஆன் டெலிவரி (COD) முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், பர்னிச்சர், ஆடைகள், மளிகைப் பொருட்கள் எனப் பல பொருட்கள் அவரது முகவரிக்கு வந்துள்ளது. ஐபோன் 17 போன்ற அதிநவீன விலை உயர்ந்த பொருட்களும் இதில் அடங்கும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதில், ரூ.1.69 லட்சம் மதிப்பிலான தொலைக்காட்சி மற்றும் ஜேசிபி இயந்திரம் போன்ற பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுமார் 20 கிலோ பிரியாணியும் வீரமணியின் முகவரிக்கு ஒருவர் கேஷ் ஆன் டெலிவரி முறையில் அனுப்பி உள்ளார்.

விளையாட்டாக ஆரம்பித்த ஒரு விஷயத்தால் தற்போது யார் பொருட்களை அனுப்புகிறார்கள் என்றே தெரியாமல் அவதிப்படுவதாக வீரமணி விழி பிதுங்கி நிற்கிறார்.

ADVERTISEMENT

“இனி யாரும் பொருட்களை அனுப்பாதீர்கள்!”

தொடர்ந்து பொருட்கள் வந்ததால், அவற்றைக் கொண்டு வரும் டெலிவரி ஊழியர்களிடம் விளக்கம் அளிப்பதும், சூழலைச் சமாளிப்பதும் வீரமணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிரமமானதாக மாறி உள்ளது.

இதையடுத்து வீடியோவால் தொடங்கிய பிரச்சனையை அதே வீடியோவால் முடிக்க நினைத்த வீரமணி இனி யாரும் தனக்கு எந்தப் பொருளையும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு மீண்டும் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

ஆனால் அதற்கெல்லாம் நெட்டிசன்கள் மசிந்ததாக தெரியவில்லை ஒருவர் ரூ.70 கோடி மதிப்புள்ள பீரங்கியை ஆர்டர் செய்ததாகக் கூறப்படும் ஸ்கிரீன்ஷாட்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. எனினும், அந்த ஆர்டர் உண்மையானதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதைற்கிடையில் குசும்புக்கார நெட்டிசன் ஒருவர் வீரமணி கிட்னி தானம் செய்ய உள்ளதாக கிட்னி சென்டருக்கு அவரது நம்பரை கொடுத்ததால் வீரமணி கடும் அதிர்ச்சி அடைந்து அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய வீரமணி

தொடர்ந்து வந்த டெலிவரிகளால் ஏற்பட்ட தொல்லையைச் சமாளிக்க முடியாமல், தனக்கு இனிப்பு அனுப்புமாறு கேட்டதற்காக இப்படியொரு நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று வீரமணி கெஞ்சும் சூழல் உருவாகி உள்ளது.

மேலும், பெரிய பைகளுடன் அவர் வீட்டை விட்டு வேறு இடத்திற்குச் செல்வது போன்ற காணொளியும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த பிரச்சனையால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, காலில் விழுந்து கேட்கிறேன் நண்பர்களே, தயவுசெய்து ஆர்டர் போடுவதை நிறுத்துங்கள், தெரியாமல் ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டுவிட்டேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் டெலிவரி ஊழியர்களின் உழைப்பு வீணாவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இந்தத் தொல்லைகள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, வீரமணி வேறு வழியின்றி தனது வீட்டைப் பூட்டிவிட்டுத் தற்காலிகமாக வேறு இடத்திற்கு சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும், “உங்களால் ரோடு ரோடாக அலைகிறேன். வீட்டிற்கே போகவிடாமல் செய்துவிட்டீர்கள். ஊரில் எங்க அம்மா, அப்பா எல்லாம் சண்டைக்கு வருகிறார்கள்” என்று வீடியோ ஒன்றில் புலம்பி உளளார்.

சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகத் தொடங்கும் சில செயல்கள், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒருவரின் முகவரியைப் பயன்படுத்திப் பொருட்களை அனுப்புவது போன்ற செயல்கள் வேடிக்கையாகத் தோன்றினாலும், இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அன்றாடப் பணிகளையும் எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதற்கு வீரமணி பிரச்சனை ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.‘

இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், வீரமணியின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கேரள காவல்துறை ஒரு விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், “சமூக ஊடகங்களில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் டிரெண்டுகளில் நாம் மூழ்கிவிடும்போது, ​​நமது சொந்தப் பாதுகாப்பைப் பற்றி மறந்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

നമ്പർഗളേ😍

സോഷ്യൽ മീഡിയയിലെ തമാശകൾക്കും ട്രെൻഡുകൾക്കും ഒപ്പം കൂടുമ്പോൾ നാം പലപ്പോഴും മറന്നുപോകുന്നത് സ്വന്തം സുരക്ഷയാണ്.

#keralapolice https://t.co/h7Uyt1M4bf— Kerala Police (@TheKeralaPolice) October 13, 2026

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share