முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர்.
மதுரையில் இன்று முதல்வர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிர’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் மருத்துவமனையைச் சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனிடையே முதல்வர் விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்திலிருந்து ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏராளமான அவரது ரசிகர்களும் பொதுமக்களும் காத்திருந்தனர்.
ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பும் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
இந்த நிலையில் ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என பத்துக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமலர் என்ற நர்சிங் மாணவி காலை 8 மணிக்கு வந்து காத்திருந்ததால், வெயில் காரணமாக மயக்கமடைந்தார்.
தமிழகத்தில் தற்போது கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் குறிப்பாக குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றவர்கள் மயக்கமடைந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதல்வர் விஜய் கரூருக்கு பிரச்சாரத்துக்கு சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்தனர். இந்த பெருந்துயரத்தின் முதலாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
