மும்மொழிக் கொள்கை: 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தந்த விலக்கு என்ன?

Published On:

| By Mathi

CBSE-Supreme Court

சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை தொடர்பாக 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய சலுகையை உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 28) வழங்கியுள்ளது.

சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா அமர்வு விசாரித்தது.

ADVERTISEMENT

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நடந்த விசாரணையின்போது, தற்போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து அமல்படுத்த முடியுமா என்று சிபிஎஸ்இ பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது என்ன?

இன்றைய விசாரணையில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை இந்த ஆண்டே அமல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1.2 சதவிகித பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தத் தயாராக உள்ளன. தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களும் கிடைக்கின்றன. மாணவர்களும் மொழிகளைத் தேர்வு செய்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, தற்போது 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை விளக்கினார். அதாவது, 3-வது மொழியைப் படிக்கும் இந்த மாணவர்கள் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போது, அந்த 3-வது மொழிக்கு சிபிஎஸ்இ போர்டு தேர்வு எழுத வேண்டியதில்லை. பள்ளி அளவில் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். அந்த மதிப்பீட்டில் பாஸ் அல்லது ஃபெயில் கிடையாது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்த கருத்தும் உத்தரவும்

இதைக் கேட்ட நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே சலுகையை வழங்கலாம் என்றார்.

இதையடுத்து தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது.

மேலும், 3-வது மொழிக்கான பள்ளி அளவிலான மதிப்பீட்டில் பாஸ் அல்லது ஃபெயில் இருக்காது; தேர்வில் பங்கேற்றதற்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி, தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழியைப் படிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போது 3-வது மொழிக்கு சிபிஎஸ்இ போர்டு தேர்வு எழுதுவதில் மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share