UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகித MDR கட்டணம் விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய அரசு செப்டம்பர் 14, 15 தேதிகளில் வெளியிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR வசூலிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் அஞ்சன் தத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தமது மனுவில், MDR வசூலிப்பதற்கான சட்ட அடிப்படை என்ன? பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டதா? MDR செலவை வணிகர்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வாய்ப்புள்ளதா? சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், புதிய MDR முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். (வழக்கு விவரம்: Anjan Datta v. Union of India — WP(C) Diary No. 57387/2026.)
இந்த வழக்கை இன்று (செப்டம்பர் 28) தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா அமர்வு விசாரித்தது.
உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கட்ராமன், “புதிய MDR முறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருகிறது. 96 சதவிகித வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR இருக்காது. அத்தியாவசிய சேவைகளுக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும்” என்றார்.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இந்த விவரங்களை எல்லாம் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுங்கள். இதில் தொழில்நுட்ப அம்சங்கள் அதிகமாக இருக்கின்றன” என்றார்.
நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, “இது வரியா? கட்டணமா? இரண்டுமே இல்லை என்றால், இந்தப் பணத்தை வசூலிப்பதற்கான சட்ட அடிப்படை என்ன? இதற்குப் பதிலாக என்ன சேவை வழங்கப்படுகிறது?” என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு, “இது வரியும் அல்ல; மத்திய அரசுக்குச் செல்லும் கட்டணமும் அல்ல. இதில் ஒரு ரூபாயைக்கூட மத்திய அரசு எடுத்துக்கொள்ளாது. இந்தத் தொகை வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படும். UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிகளுக்கு செலவு ஏற்படுகிறது. அதனால் UPI பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து செயல்படுத்த இந்த MDR அவசியமாகிறது” என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்ய பாக்சி மீண்டும், “UPI பரிவர்த்தனையில் MDR கட்டணத்தைப் பெறுவது யார்? இதை வசூலிப்பதற்கான சட்ட அதிகாரம் எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து மத்திய அரசு, RBI, UPI சேவையை நிர்வகிக்கும் NPCI அமைப்பு ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. MDR தொடர்பான விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
அதேநேரத்தில், புதிய MDR முறையை அக்டோபர் 15 முதல் அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
