கையில் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை… கடையில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்தால் போதும். டீ குடிப்பது முதல் செல்போன் வாங்குவது வரை இப்போது எல்லாவற்றுக்கும் UPI மூலம் பணம் செலுத்துகிறோம்.
ஆனால் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சில கடைகளில் இந்த வசதி இருக்காது. UPI கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வணிகர் அமைப்புகள் அன்றைய தினம் ‘No UPI Day’ போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
அதனால் அக்டோபர் 2ஆம் தேதி எந்தெந்த கடைகளில் UPI மூலம் பணம் செலுத்த முடியாது? ஏன் வணிகர்கள் திடீரென இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்?
என்ன நடக்கப் போகிறது?
அக்டோபர் 2ஆம் தேதி UPI சேவையே நிறுத்தப்படப் போவதில்லை. Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகளும் வழக்கம்போல செயல்படும்.
ஆனால் போராட்டத்தில் பங்கேற்கும் வணிகர்கள் அன்று தங்கள் கடைகளில் UPI மூலம் பணம் வாங்க மாட்டார்கள்.
சில கடைகளில் QR Code-களை கருப்புத் துணியால் மூடி வைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
அதனால் அன்றைய தினம் இதுபோன்ற கடைகளுக்குச் செல்லும் மக்கள் ரொக்கமாகவோ அல்லது வேறு வழியிலோ பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
எந்தெந்த கடைகளில் UPI இருக்காது?
இந்தப் போராட்டத்தில் மொபைல் போன் விற்பனையாளர்கள் முக்கியமாக பங்கேற்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நகை விற்பனையாளர்கள், சமையல் எண்ணெய் வணிகர்கள், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் சில சில்லறை வணிகர் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே போராட்டத்தில் பங்கேற்கும் மொபைல் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட சில வணிக நிறுவனங்களில் அன்று UPI மூலம் பில் கட்ட முடியாமல் போகலாம்.
எதற்காக இந்தப் போராட்டம்?
இதற்குப் பின்னால் இருப்பது UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான பிரச்சினை.
UPI மூலம் வாடிக்கையாளர் பணம் செலுத்தும்போது வணிகர்களிடம் வசூலிக்கப்படும் MDR கட்டணம் தொடர்பாக வணிகர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
UPI வளர்ந்ததற்கு முக்கிய காரணமே எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் எளிதாக பணம் செலுத்த முடிந்ததுதான். இப்போது வணிகர்களுக்கு கூடுதல் கட்டணம் வந்தால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களது வாதம்.
குறிப்பாக மொபைல் போன் விற்பனையில் ஏற்கெனவே லாபம் குறைவாக இருப்பதாகவும், இதில் UPI கட்டணமும் சேர்ந்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும் மொபைல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ஏன் அக்டோபர் 2?
தங்களது எதிர்ப்பை நாடு முழுவதும் தெரிவிக்க காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதியை வணிகர் அமைப்புகள் தேர்வு செய்துள்ளன.
அன்றைய தினம் UPI மூலம் பணம் வாங்காமல் இருப்பதன் மூலம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே போராட்டத்தின் நோக்கம்.
கையில் பணம் வைத்துக்கொள்ள வேண்டுமா?
அக்டோபர் 2ஆம் தேதி UPI முழுவதுமாக முடங்கப்போவதில்லை. ஒருவருக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட வழக்கமான UPI சேவைகள் தொடரும்.
ஆனால் போராட்டத்தில் பங்கேற்கும் சில கடைகளில் QR Code மூலம் பணம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அக்டோபர் 2ஆம் தேதி மொபைல் போன், நகை உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்பவர்கள், அந்தக் கடை போராட்டத்தில் பங்கேற்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வதும நல்லது. கையில் பணத்துடன் கடைகளுக்கு ‘படையெடுப்பதும்’ நல்லது.
