அக்.1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை ”ஷாக்” உயர்வு!

Published On:

| By Mathi

AC TV-Price Hike

வீட்டு உபயோகப் பொருட்களான ஏசி, டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை அக்டோபர் 1 முதல் உயருகிறது. பண்டிகை காலத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வு ஏன்?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால்

ADVERTISEMENT
  • வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தாமிரம், அலுமினியம், எஃகு, பிளாஸ்டிக் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
  • சரக்குப் போக்குவரத்துக்கான செலவும் அதிகரித்துள்ளது.
  • ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கான செலவும் உயர்ந்துள்ளது.

இதனால் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இந்தக் கூடுதல் செலவில் ஒரு பகுதியை விலை உயர்வு மூலம் ஈடுகட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தாமிரம் விலை கடும் உயர்வு

இதில் குறிப்பாக ஏசி தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாமிரத்தின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
  • ஒரு ஏசி தயாரிப்பதற்கு சுமார் 3 முதல் 4 கிலோ தாமிரம் தேவைப்படுகிறது.
  • கடந்த ஆண்டு ஒரு மெட்ரிக் டன் தாமிரத்தின் விலை 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் டாலர் வரை இருந்தது.
  • தற்போது ஒரு மெட்ரிக் டன் தாமிர விலை சுமார் 14,500 டாலராக அதிகரித்துள்ளது என்கிறார் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் ஹையர் (Haier) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் என்.எஸ்.சதீஷ்.

எவ்வளவு விலை உயரும்?

இதையடுத்து ஏசி விலையை 5 முதல் 8 சதவிகிதம் வரை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் மற்றும் எல்.இ.டி டிவி உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் உயர உள்ளது. ஆனால் அனைத்து நிறுவனங்களும் ஒரே அளவில் விலையை உயர்த்தவில்லை. நிறுவனம் மற்றும் பொருளைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடுகிறது.

ப்ளூ ஸ்டார் விலை உயர்வு

ஏசி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ப்ளூ ஸ்டார் (Blue Star), ஏசி மற்றும் டீப் ஃப்ரீசர் விலையை 5 முதல் 8 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.

ADVERTISEMENT

மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ப்ளூ ஸ்டார் (Blue Star) நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் ப்ளூ ஸ்டார் (Blue Star) நிறுவனம் மேற்கொள்ளும் 3-வது விலை உயர்வு இது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹையர் விலை எவ்வளவு?

ஹையர் (Haier) நிறுவனம் அக்டோபர் 1 முதல் தனது ஏசி விலையை சுமார் 5 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதேபோன்று எல்.இ.டி டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மற்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 2 முதல் 3 சதவிகிதம் வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால் தீபாவளிக்குப் பிறகு அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஏசி விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஹையர் (Haier) நிறுவனம் தெரிவித்துள்ளது.

டைக்கின் விலையும் உயர்ந்தது

டைக்கின் (Daikin) நிறுவனம் தனது ஏசி விலையை செப்டம்பர் 16 முதலே உயர்த்தியுள்ளது. அந்நிறுவனம் ஏசி விலையை 8 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளதாக டைக்கின் இந்தியா (Daikin India) தலைவர் கன்வல்ஜீத் ஜாவா தெரிவித்துள்ளார்.

ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலையும் உயரும்

ஏசி மட்டுமின்றி ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மற்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலையையும் நிறுவனங்கள் உயர்த்தத் தயாராகி வருகின்றன. கோத்ரெஜ் (Godrej) நிறுவனம் தனது பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் அந்நிறுவனத்தின் கமல் நந்தி.

அதேநேரம் அனைத்து நிறுவனங்களும் அக்டோபர் 1 அன்றே விலையை உயர்த்தப்போவதில்லை. சில நிறுவனங்கள் அக்டோபரிலும், மேலும் சில நிறுவனங்கள் நவம்பரிலும் விலை உயர்வை அமல்படுத்தலாம்.

டிவி விலையும் உயருகிறது

மேலும் எல்.இ.டி டிவிகளின் விலையும் அதிகரிக்க உள்ளது. ஹையர் (Haier) நிறுவனம் தனது எல்.இ.டி டிவிகளின் விலையை 2 முதல் 3 சதவிகிதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

தாம்சன் (Thomson), கோடாக் (Kodak), பிளாபங்க்ட் (Blaupunkt) உள்ளிட்ட டிவி பிராண்டுகளை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் (Super Plastronics) நிறுவனமும் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு டிவி விலையை சுமார் 7 சதவிகிதம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பழைய விலையில் கிடைக்குமா?

விலை உயர்வு அறிவிக்கப்பட்டாலும் கடைகளில் உள்ள அனைத்துப் பொருட்களின் விலையும் அக்டோபர் 1 அன்றே உயர்ந்துவிடாது. பல விற்பனையாளர்கள் ஏற்கெனவே பழைய விலையில் வாங்கிய ஏசி, டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைத்துள்ளனர். அந்த பழைய இருப்பு இருக்கும் வரை தற்போதைய விலையில் கிடைக்க வாய்ப்பு; புதிய stock வந்த பிறகுதான் முழு விலை உயர்வு தெரியும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share