வங்கி ஊழியர்கள் நாளை (செப்டம்பர் 28) முதல் 30 வரை நடத்தப் போவதாக அறிவித்திருந்த 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) – வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) இடையே இன்று இரவு (செப்டம்பர் 27) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று UFBU அறிவித்திருந்தது. முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்படாததால் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 27) இரவு 9.30 மணிக்கு இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் UFBU நிர்வாகிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு UFBU வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- இன்று இரவு 9.30 மணிக்கு இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் UFBU பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட புரிந்துணர்வு எட்டப்பட்டது.
- மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் தவிர எஞ்சிய சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிப்பது தொடர்பாக விவாதிக்க, IBA மற்றும் UFBU பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும்.
- இந்தக் குழு இதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தும். குறிப்பாக வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- Scale IV மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடர்பாக சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகளுக்குத் தீர்வு காணும் வகையில், அந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைப்பது குறித்து IBA உடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
- மேலும், 2024 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் குறிப்புகளில் இடம்பெற்று, இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த புரிந்துணர்வின் அடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத் திட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒத்திவைக்க UFBU முடிவு செய்துள்ளது. இவ்வாறு UFBU வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு தொடர்பாக UFBU வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) சி.எச். வெங்கடாசலம்
- அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) ரூபம் ராய்
- தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (NCBE) எல். சந்திரசேகர்
- அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (AIBOA) சஞ்சய் கான்
- இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (BEFI) தேபாசிஷ் பாசு சவுத்ரி
- இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸின் (INBOC) பிரேம் மக்கர்
- இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (INBEF) ஓ.பி. சர்மா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
இதனால் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
