வங்கிகள் ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்டம்பர் 27) திறக்கப்பட்ட நிலையில், பணிக்குச் சென்ற ராணிப்பேட்டை வங்கி கிளை மேலாளர் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பிய மும்பை பெண் வங்கி அதிகாரி என 2 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி ஊழியர்கள் நாளை செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்னதாக இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளைத் திறந்து வைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

ராணிப்பேட்டை கிளை மேலாளர் பலி
இதனைத் தொடர்ந்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலம், காஞ்சிபுரம் பிராந்தியத்தின் கீழ் உள்ள ராணிப்பேட்டை EAB கிளையின் மேலாளராகப் பணியாற்றி வந்த வெங்கட பிரசாத் இன்று காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி வெங்கட பிரசாத் உயிரிழந்தார்.

மும்பையில் பெண் அதிகாரி பலி
இதேபோன்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மும்பை வாஷி பிராந்திய அலுவலகத்தில் சீனியர் மேலாளராகப் பணியாற்றி வந்த நேஹா குப்தாவும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக Union Bank of India Officers’ Association, Mumbai வெளியிட்ட இரங்கல் பதிவில், நேஹா குப்தா அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு பணிக்கு அதிகாரிகள் எதிர்ப்பு
3 நாள் வேலைநிறுத்தத்துக்கு முன்னதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வங்கிகளைத் திறக்கும் முடிவுக்கு வங்கி அதிகாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வருமாறு அதிகாரிகளை நிர்பந்திக்கக் கூடாது என்றும் சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன.
இந்த நிலையில், இன்று வங்கிப் பணிக்குச் சென்ற ராணிப்பேட்டை கிளை மேலாளர் வெங்கட பிரசாத் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பிய மும்பை சீனியர் மேலாளர் நேஹா குப்தா ஆகிய இருவரும் வெவ்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தது வங்கி அதிகாரிகளையும் ஊழியர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
