கோவையில் திக்.. திக்.. சினிமா பாணி சேஸிங்.. ஓடும் கார் கூரையில் பாய்ந்து விரட்டிய போலீஸ்.. ராஜஸ்தான் கும்பல் கைதான பின்னணி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Coimbatore

கோவையில் சினிமா பாணியில் கர்நாடகாவிலிருந்து 300 கிலோ வரை குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் காரில் கடத்தி வந்த 3 பேரை, சுமார் 40 கி.மீ. தூரம் துரத்திச் சென்று போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பாளையம் பகுதியில் உதவி ஆய்வாளர் விக்னேஷ், தலைமை காவலர் வேல்முருகன் உள்ளிட்ட போலீஸார், அப்பகுதியில் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகக் கர்நாடகாவிலிருந்து வந்த சொகுசு கார் ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.

ADVERTISEMENT

அந்த காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாகப் பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றைச் சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாகக் கிளப்பிச் சென்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையைப் பாய்ந்து பிடித்துக்கொண்டார். ஆனால், போலீஸார் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரைத் தொடர்ந்து வேகமாக இயக்கிச் சென்றனர்.

ADVERTISEMENT

விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, சித்ரா வழியாகக் கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி கார் பறந்தது. அங்கு ‘ஃபாஸ்டேக்’ (FASTag) மூலம் சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு, தடுப்புகளைக் கடந்து கார் மீண்டும் வேகமாகச் சென்றதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கணியூர் போலீஸார், கணியூர் ஆம்புலன்ஸ், எல்.ஜி. மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் ‘சினேகம்’ ஆம்புலன்ஸ் நண்பர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து காரைத் துரத்திச் சென்றனர். தகவல் அறிந்த அவிநாசி போலீஸாரும் காரை மறிக்க விரைந்தனர்.

சுமார் 40 கி.மீ. தூரம் நீடித்த பதற்றமான பயணம், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே முடிவுக்கு வந்தது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் அந்தக் காரைச் சுற்றி வளைத்தன.

கார் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்த இருவர் தப்பியோடியதாகவும், ஒருவரைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்ததாகவும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூரிலிருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் காரில் கடத்தி வந்து கோவையில் கைமாற்ற முயன்றதும் தெரியவந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் 300 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிகளைப் பிடிக்கப் போராடிய காவலர் வேல்முருகன் மற்றும் அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share