- ஸ்ரீராம் திருவரங்கம்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையவர்கள் தனது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உரைத்த வரிகள்:
மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா!
மகாகவி பாரதியார் தனது தமிழ்நாடு குறித்து குயில் பாட்டு எனும் நெடுங்கவிதையின் இடையே இறுமாந்து மொழிந்த வரிகள்:
“அற்புதத்தின் தேசமடா!
பெண்மைதான் தெய்வீகமாம் காட்சியடா!”
தான் பிறந்த தமிழகத்தை தாங்கிப் பிடிக்கத் தவித்த அந்த மேதைகள் இன்று உயிரோடு இருந்தால் எப்படியெல்லாம் துடித்திருப்பார்களோ?
குழந்தைகளுக்கு எதிரான அந்தப் பாலியல் வன்கொடுமையை எப்படி எல்லாம் சாடி சபித்திருப்பார்களோ?

எத்தனையோ சமூகக் கொடுமைகளை சாடி எழுதிய எனது எழுத்து மனம் – ஜெம் நிறுவனத்தின் அதிபர் வீரமணி செய்து விட்ட அந்தக் கேவலச் செயலை – ஆதரவற்ற குழந்தைகளின் மேலான அவரது பாலியல் வன்கொடுமைகளை எண்ணி எழுதக் கூசி நிற்கிறதய்யே!
இன்றவர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டாலும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் நாளுக்கு நாள் வலுத்தபடியே இருந்தாலும், அவர் குற்றவாளிதானா என்பதை நீதிமன்றம்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆயினும், அதற்கான முகாந்திரம் உள்ளது என்ற வகையிலேயே அவர் இந்தக் கட்டுரையின் எதிர்நாயகனாகி நின்றுவிட்டாரே!
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்.
என்கிறது வள்ளுவநீதி!
கோடி கோடியாக சம்பாதிக்கும் வாய்ப்பினை பெற்ற அவர் தன் தகாத செயலால் தனது குலப்பெருமையின் மீது காறி உமிழ்ந்துவிட்டாரே!
பேரனுக்கும் பேத்திக்கும் தன் அனுபவ நீதிகளை சொல்லிக் கொடுக்க வேண்டிய தனது 84 ஆம் வயதில் உலகார்ந்த தமிழர்களின் வசவுகளை கருத்த பச்சரிசியாக்கி அதனை தனக்கான வாய்க்கரிசியாக போட்டுக் கொண்டு விட்டாரே!

உங்களது மீசை பெரிதென்றால் அதை உங்கள் மூக்குக்கு அருகிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா? அதை எளியோரின் கண் விழிக்குள் செலுத்தப் பார்ப்பது அசிங்கமல்லமா? அநாகரீகமல்லவா? ஆணவமல்லவா? அதிகார மமதையல்லவா? எனும் செருப்படிக் கேள்விகளுக்கெல்லாம் தகுதியானவராக – மானுடன் எனும் தகுதியே இல்லாதவராக சமூகத்தின் கண்களில் சிதிலமாகி நிற்கிறாரே!
அந்திம வயதில் காராக்கிரகம் கண்டு விட்ட அவர் இனி இழப்பதற்கு ஏதுமில்லை. பெறுவதற்கு ஒன்று உண்டு. அது, அவர் செய்யப் போகும் பிராயச்சித்தம்.
எனது கல்லூரிக் காலத்தில் மனப்பாடம் செய்த சாகித்திய அகாதெமி விருது பெற்ற மலையாளப் பெருங்கவி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதிய பனிரெண்டு வரிகள் அடங்கிய நவ கவிதை ஒன்று என் நினைவிலாடுகிறது.
அவரது அந்தக் குறத்திக் கவிதையின் இறுதி வரி இப்படிக் கேட்கிறது…
“நிங்களோர்குஹ நிங்களெங்கனே நிங்களாயின்னு?”
அதன் பொருள்: “இப்படி ஒரு உயரத்தை நீ எந்த விதத்தால் அடைந்தாய் என்பதை எண்ணிப் பார்த்தாயா முதலாளியே?”
வீரமணியைப் பெற்ற தாயும் – தகப்பனும் – சுற்றமும் – சமூகமும் அவரது குழந்தைமையை நல்லபடியாக அரவணைத்ததால்தானே இந்த உயரத்துக்கு அவரால் வர முடிந்தது.
அதனால், தான் அடைந்த அந்த கணக்கிலங்காத அந்த செல்வத்தைக் கொண்டு அன்று தன் குழந்தைமையில் அவர் கண்ட அரவணைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தக் கடமைப்பட்டவரான அவர் இப்படி ஒரு கொடுஞ்செயலை செய்திருக்கவே கூடாது அல்லவா?
அவர் எண்ணியிருந்தால், தமிழகத்தில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கான அரசாங்க விடுதிகளில் அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கித் தவிக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு அப்பனாக நின்று நல்வழி காட்டி ஆளாக்கியிருக்கலாம் அல்லவா?
அழியாப் புகழோடு தனது கல்லறைக்கு கௌரவம் சேர்த்திருக்கலாம் அல்லவா? பூமியை தோண்டி புதையல் எடுத்தவர் சாமியாய் நின்று சாகாவரம் பெற்றிருக்கலாம் அல்லவா? தவறிவிட்டார்.
இந்தப் பிறவியில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டார். அவரைப் போன்ற செல்வந்தருக்கெல்லாம் ஓர் பாடமாகி விட்டார்.
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார் ஔவை மூதாட்டி!
மானுடர் காணும் பருவங்களில் மிக உன்னதமானது குழந்தைக் காலம்!
தாயின் உதரம் அகன்று – தாய்ப்பாலின் சுவை அறிந்தபின் மெல்ல எழுந்து நடந்து – இதுதான் உலகமோ எனும்படியான மனச்சித்திரக் கோலங்கள் எழ – உலகை அடையத் துடிக்கும் கிளர்ச்சியானதோர் வசந்த காலம் அது!
குழந்தைப் பருவத்தில் தான் கொண்ட மதிப்பீடு நல்லதாக இருந்தால் அந்தக் குழந்தை வளர்ந்து எழும் காலமெல்லாம் இந்த சமூகத்தை மதித்து அதை மேலும் அழகாக்கி விடும்.
அதன் குழந்தை பருவம் அச்சுறுத்தலாக இருந்தால் அந்தக் குழந்தை இந்த சமூகத்தைக் கண்டு அஞ்சும், வெறுக்கும். கோபம் கொள்ளும்.
CHILDHOOD எனப்படும் “குழந்தைமை” அதனை இழப்பது என்பது மிக மிகக் கொடுமையானதோர் வாழ்நாள் துயரமாகும்.
அன்பின்மை, பெற்றோரின் அரவணைப்பின்மை, நட்பின்மை, உணவின்மை, கல்வியின்மை, கவனிப்பின்மை எனப் பலவிதங்களிலும் குழந்தைமை பாதிக்கப்படக் கூடும்.
மேற்கண்ட அனைத்திலும் கொடுமையானது பாலியல் வன்புணர்வால் குழந்தைமையை இழப்பது ஆகும்.
ஆம், பஞ்சமாபாதகங்கள் என்பார்களே – அதை எல்லாம் விடக் குரூரமானது குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை.
தயவுசெய்து கவனியுங்கள்…
ஒரு குழந்தையின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை என்பது அதன் உடலின் மீதான தாக்குதல் மட்டுமல்ல.
அந்தக் குழந்தை இந்த உலகைப் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் அதன் முதல் நம்பிக்கையின் மீதான தாக்குதல் ஆகும்.
இந்த உலகம் என்னைத் தாங்கும் என்ற நம்பிக்கையோடு எழுந்து நடக்கத் தொடங்கிய காலத்தில், அந்த உலகமே இடறித் தள்ளிவிட்டுக் கொக்கரித்தால் அந்தக் குழந்தைமை எரிந்து போகாதா?
என்னிலும் முன்னோர்கள் என்னைக் காப்பார்கள் என நம்பித் துவங்கிய அந்த அறியாப் பருவத்தில், முதிர்ந்த மனிதர்களால் காயப்பட நேர்ந்தால் அந்தக் குழந்தைமை கருகிப் போகாதா?
நான் அழுதால், என்னைத் தேற்ற யாராவது ஓடி வருவார்கள் எனும் குழந்தையின் கேவலுக்கு பதிலாக தனக்கருகே கேட்கும் முற்றிய மனிதன் ஒருவனின் குறட்டைச் சத்தமே கெக்கலித்து நிற்கும் என்றால் அந்தக் குழந்தைமை நசிந்து போகாதா?
அதன் ஓலம் பெரிதல்லவா? அந்த ஓலத்தை செவிமடுக்காமல் போனால் அது பிணத்தின் காதுகளுக்கும் கீழானது அல்லவா?
அங்கே துடிப்பது ஒரு குழந்தையின் உடல் மட்டும் அல்ல.
அந்தக் குழந்தையின் நம்பிக்கை துடிக்கிறது. அதன் பாதுகாப்பு உணர்வு துடிக்கிறது. இந்த உலகைப் பற்றிய அதன் முதல் நம்பிக்கை துடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைப் பற்றிய மதிப்பு துடிதுடிக்கிறது.
ஒரு குழந்தையின் மீது காட்டப்படும் அன்பு, அதற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது: “இந்த உலகம் உனக்கானது.”
ஒரு குழந்தையின் மேல் செலுத்தப்படும் பாலியல் வன்முறையோ வேறு ஒரு கொடூரமானதொரு செய்தியை சொல்கிறது. “இந்த உலகம் உனக்கானது அல்ல.”
ஓநாயையின் அறுந்த குரலாய் அறையும் அந்த அவலச் செய்தியானது குழந்தைகளின் ஆழ்மனதில் இந்த உலகத்தின் வரைபடத்தை மிக விகாரமாக வரைந்து வைத்து விடுகின்றது. அந்தப் பிஞ்சுமனம் தனக்குள் பற்பல கேள்விகளை கேட்டுக் கொள்கிறது
இவர்களுக்கு நான் செய்த தீங்குதான் என்ன?
இந்தப் பொல்லாத மனிதர்களை விட என்னிடம் இருக்கும் சாயம் போன பொம்மையே அழகானதாக தெரிகிறதே. ஆறுதலாக இருக்கிறதே. எஞ்சிய வாழ்வு அந்தப் பொம்மையோடு மட்டும் இருந்துவிட்டால் போதும் போல் இருக்கிறதே!
இப்படியான எண்ணங்கள் குழந்தைமைக்குள் புகுத்தப்படுவதால்தான் PTSD, DEPRESSION, ANXIETY, SLEEP DISORDERS உள்ளிட்ட மனநல விளைவுகளில் இருந்து குழந்தைகளின் உலகை மீட்டெடுப்பதை பெரும் ஆயத்தமாக உலகளவில் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இன்றைய சூழலில், ஜெம் நிறுவன அதிபர் வீரமணி செய்தது பெருங்குற்றம் என்றால் அதற்கும் மேற்பட்ட கொடுங்குற்றம் ஒன்று உண்டு.
அது, குற்றத்தை தட்டிக் கேட்கும் அதிகாரத்தில் அமர்ந்தபடி, ஆதரவற்ற குழந்தைகளை முன் வைத்து விலை பேசி விளையாடியவர்களின் விகாரமான நடவடிக்கைகளாகிறது.
“ச்சீச்சீ, இப்படியும் செய்வார்களா இவர்கள்” என மனம் சலிக்கிறது.
“பச்சிளங் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தைக் கண்டு உதிரம் கொதிக்காத யூனிஃபார்ம் அதிகாரிகளுக்கு மிடுக்கான பகட்டு உடையும் – மினுக்கும் பேட்ஜும் – சல்யூட்டும் ஒரு கேடா?” எனத் தடித்த வார்த்தைகளைக் கொண்டு ஏசித் துளைக்கின்றன சோஷியல் மீடியாக்கள்.
அவர்கள் மட்டும்தானா? அவர்களை செலுத்திய அரசியல் ஆளுமைகளின் பங்கும் உள்ளதா? என்பதும் கேள்வியாகிறது,
குழந்தைகளை பணயம் வைத்த கொடியவர்களுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது இன்னுமின்னும் அடித்து எழுது என எனது எழுத்துள்ளம் வெறியேற்றினாலும்…
நாகரீகமான எனது எழுத்தை நம்பித் தொடரும் மின்னம்பலத்து வாசகர்களை முன்னிட்டும், ஜனநாயகத்தின் ஆட்சியில் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அனைவரும் மரியாதையோடு அழைக்கப்பட வேண்டியவர்கள் என்பதாலும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
வீரமணி அவர்களுக்கு ஒரு வார்த்தை:
அந்திமத்தின் அருகில் இருக்கும் நீங்கள் இனி யார் மீதும் கோபப்படுவதில் அர்த்தமில்லை. எந்தப் பலனும் இல்லை.
சட்டத்தின் சந்து பொந்துகளுக்குள் எத்தனை கோடிகள் வாரி இறைத்தாலும் இழந்த புகழைப் பெறப் போவதும் இல்லை.
சட்டம் அனுமதிக்குமேயானால் உங்களது சொத்துக்களில் உங்கள் வாரிசுகளுக்கான பங்கு போக உங்களுக்கான பொருள் யாவும் வறுமையில் வாடும் குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்காகவும் அனாதை விடுதிகளுக்காகவும் ஆகும் என எழுதி வைத்துவிட்டால்…
ஊழ்வினையால்தான் செல்வம் கொண்டேன். அதனால்தான் பழியும் கொண்டேன் என மெய்மைமையை உணர்ந்து தாமதிக்காமல் திருச்செங்கோட்டு வேலவனிடம் சரணடைந்து விட்டால்…
கெட்டவன் செத்தான் என்பதைவிட, உணர்ந்தவன் வாழ்ந்தான் என உங்களை வரலாறு பேசக்கூடும். கல்லறையில் காற்று வீசக் கூடும்.
பிறகு உங்கள் விருப்பம்!

முடிவாக:
இந்த மாபாதகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து குழந்தைகளின் உலகை பாதுகாக்கச் சொல்லி உத்தரவிட்ட மாண்பமை நீதிபதி திருமதி எஸ். பத்மா அம்மையார் அவர்களுக்கு இந்த உலகம் சுழலுந்தோறும் நன்றிக் கடன்பட்டுவிட்டது! அம்மையாரை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து பணிகிறது இந்தக் கட்டுரை!
இன்றைய முதலமைச்சர், மிகத் தீவிரமான இந்த குற்றவழக்கை தனது நேரடிப் பார்வையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது உறுதிப்பாடு நிலைத்திருக்க வேண்டுமென மொத்த சமூகமும் விழைந்து வேண்டுகிறது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ் அவர்களின் தலைமையில் மூன்று பெண் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அது போதுமா? மாநிலத்தை அன்று கைக்குள் வைத்திருந்த உயர்மட்ட அதிகாரிகளும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் நிலையில் அவர்களுக்கு மேலான மத்திய சிபிஐ விசாரணைதான் முறையானதாக இருக்கும் என்போர் உண்டு.
தேவையில்லை. இது கொடுங்குற்றமான போக்ஸோ சம்பந்தப்பட்டது. இதில் தவறிழைத்தால் அது உலக அளவில் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதால் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசஃப் விஜய் இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என நானும் நம்புகிறேன்.
தன்னை நம்பிய குழந்தைகளுக்கு உரிய நியாயத்தை செய்வாரா இந்த முதலமைச்சர்? செய்தால்தான் அவர் முதலமைச்சர்!
அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு போதுமான ஆளுமையை அதிகாரத்தை உறுதியாக அளித்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி –
குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான உச்சபட்ச தண்டனையை இந்த ஆட்சியால் விரைந்து பெற்றுத் தந்துவிட முடிந்து விடுமேயானால் –
இந்திய தேசம் முழுமைக்கும் அது காலமெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியாக எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
குழந்தைகளின் உலகம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திய தமிழக அரசாங்கத்தின் அரசியலாண்மையை உலகமே வாழ்த்தும்.
ஆகட்டும்! அன்றந்த புறநானூற்றுப் பிசிராந்தையார்…
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே !
என செம்மாந்து மொழிந்த தமிழகம் இது.
ஒரு துளி விஷத்தால் பாற்கடல் ஒன்றும் பாழாகிவிடாது.
மகாகவி பாரதியாரின் அமர வரிகளோடு முடிக்கிறேன்.
பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
