நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை (செப்டம்பர் 28) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமையிலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், மூன்று நாள் தொடர் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இன்று வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

வழக்கமான வங்கி சேவைகள்
பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் இன்று திறக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான வங்கி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மூன்று நாள் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக ஓய்வூதியத் தொகையை எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காகவும், அவசர பணப் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளவும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு வந்தனர்.


கறுப்பு உடையில் பணிக்கு வந்த ஊழியர்கள்
ஞாயிற்றுக்கிழமை வங்கிகளைத் திறக்கும் முடிவுக்கு வங்கி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இன்று பணிக்கு வந்த ஊழியர்கள் கறுப்பு உடை, கறுப்பு பேட்ஜ், கறுப்பு ரிப்பன் அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறப்பது முதல்முறையா?
ஞாயிற்றுக்கிழமையில் வங்கிகள் செயல்படுவது இது முதல்முறை அல்ல.
நவம்பர் 13, 2016: பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையிலும் வங்கிகள் செயல்பட்டன.
மார்ச் 26, 2017: அரசின் வரி வருவாய் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் நிதியாண்டு இறுதிப் பணிகளை மேற்கொள்வதற்காக Agency Banks மற்றும் குறிப்பிட்ட வங்கிக் கிளைகள் ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்பட்டன.
மார்ச் 31, 2019: நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்த நிலையில், நிதியாண்டு இறுதிப் பணிகளுக்காக வங்கிகள் செயல்பட்டன.
மார்ச் 31, 2024: நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததால், அரசு தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட வங்கிக் கிளைகள் செயல்பட்டன.
இந்த வரிசையில், தற்போது மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முந்தைய நாளான இன்று, பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்பட்டு வருகின்றன.
