இன்று TNPSC Group 1: தேர்வு 46 காலிப் பணியிடங்கள்… 2.23 லட்சம் பேர் போட்டி!

Published On:

| By Mathi

tnpsc exam

தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில் உள்ள 46 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC Group 1 முதல்நிலைத் தேர்வு இன்று (செப்டம்பர் 27) நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (Group-I Services) பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 23ஆம் தேதி வெளியிட்டது.

ADVERTISEMENT

முதலில் துணை ஆட்சியர் 12, வணிகவரித்துறை உதவி ஆணையர் 2, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 3, மாவட்டப் பதிவாளர் 8, தொழிலாளர் உதவி ஆணையர் 1 என மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி TNPSC வெளியிட்ட கூடுதல் அறிவிப்பில் மேலும் 20 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது.

ADVERTISEMENT

செப்டம்பர் 6-ல் இருந்து தேதி மாற்றம்

Group 1 முதல்நிலைத் தேர்வு முதலில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நிர்வாகக் காரணங்களால் தேர்வு தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என்று TNPSC அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று Group 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது.

2,23,440 பேர் தேர்வு எழுத அனுமதி

இந்த Group 1 தேர்வுக்கு மொத்தம் 2,23,444 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,23,440 பேர் முதல்நிலைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 46 காலிப் பணியிடங்களுக்கு 2.23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

தேர்வு நேரம் என்ன?

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குப் பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதி கிடையாது.

முதல்நிலைத் தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துவர வேண்டும். அனுமதிச் சீட்டுடன் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தையும் கொண்டு வர வேண்டும்.

செல்போனுக்கு அனுமதி இல்லை

தேர்வு மையத்துக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் TNPSC அறிவுறுத்தியுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் Group 1 முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share