ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வீரமணி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த உலகைப் பற்றியே முழுதும் அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறி வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.
வீரமணியை பாதுகாக்க முயன்ற- அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமிகளுக்குத் தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அடையாளமும் கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
இனி வருங்காலங்களில் பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிக்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவதே இது போன்ற குற்றச்செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க வழி வகை செய்யும்.
வீரமணியின் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.
மேலும் மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே எங்களுடைய குரல் எப்போதும் ஒலிக்கும்” என்று கூறியுள்ளனர்.
