TAPS ரத்து செய்க- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக- அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை தீர்மானம்

Published On:

| By Mathi

TN Govt- TAPS- OPS

TAPS உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

திண்டுக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நேற்று செப்டம்பர் 26-ந் தேதி நடைபெற்றது. இந்த பேரவைக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னதாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து எம்.எஸ்.பி. ஆடிட்டோரியம் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார், திண்டுக்கல் எம்.பி. ஆர். சச்சிதானந்தம், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ. சோமசுந்தரம், மாநில பொருளாளர் சா. டானியல் ஜெயசிங், மாநில தணிக்கையாளர் ச. முபாரக் அலி, ‘மூட்டா’ பேராசிரியர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் முன்னாள் மாநில நிர்வாகிகள் சு.பார்த்திபன், சி.எஸ். கிறிஸ்டோபர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் நிறைவுரையாற்ற, இந்த சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ம.சுகந்தி நன்றி கூறினார்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில்,

  • தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்
  • சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியமும், சட்டப்பூர்வ ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
  • நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
  • கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்
  • அலுவலக நேரத்துக்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்
  • முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்
  • அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதுடன், கட்டாயமில்லா சிகிச்சையை உறுதிசெய்ய வேண்டும்
  • பெண் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்
  • மதுரை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, வருவாய், நில அளவை உள்ளிட்ட துறைகளில் தினக்கூலி பணியாளர்களை முறைப்படுத்துவதுடன் அவுட்சோர்சிங் பணி நியமனங்களை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share