சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நவம்பர் 27ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்து உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த மே மாதம் 10 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
வழக்கின் தீவிரத்தன்மை கருதி மிக விரைவாக நடத்தப்பட்ட விசாரணையில், அரசுத் தரப்பில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
மேலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் 221 முக்கிய ஆவணங்கள் மற்றும் தடயவியல் அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இருதரப்பு வாதங்களும், சாட்சிகள் விசாரணையும் முழுமையாக நிறைவு அடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் வரும் நவம்பர் 27ம்தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.









