AI உதவியுடன் தமிழில் அறிவியல் கட்டுரைகள்: மத்திய அரசின் புதிய இதழ்!

Published On:

| By Mathi

CSIR-AI-Tamil-Science-Magazine

தமிழ் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் புதிய அறிவியல் இதழ்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) 85-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, CSIR-தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NIScPR) தயாரித்த இந்த இதழ்கள் செப்டம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

தமிழில் ‘அறிவியல் அறிக்கையாளர்’

தமிழில் ‘அறிவியல் அறிக்கையாளர்’ (Ariviyal Arikkaiyalar) என்ற பெயரில் புதிய அறிவியல் இதழ் வெளியிடப்படுகிறது. இதேபோல் அசாமியில் ‘பிக்யான் லஹர்’, பெங்காலியில் ‘பிக்யான் பிரித்தாந்தோ’, மராத்தியில் ‘வித்ன்யான் க்ஷிதிஜ்’, தெலுங்கில் ‘விக்ஞான் வெலுகு’ ஆகிய இதழ்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

CSIR-NIScPR ஏற்கெனவே ஆங்கிலத்தில் Science Reporter, இந்தியில் Vigyan Pragati, உருதுவில் Science Ki Duniya ஆகிய அறிவியல் இதழ்களை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் 5 இந்திய மொழிகளுக்கு அறிவியல் இதழ்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

AI மூலம் மொழிபெயர்ப்பு

இந்த புதிய இதழ்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளது.

ஏற்கெனவே வெளியாகும் Science Reporter, Vigyan Pragati, Science Ki Duniya ஆகிய இதழ்களில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகளை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

ஆனால் AI மூலம் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கம் அப்படியே வெளியிடப்படாது. அறிவியல் வல்லுநர்களால் அவை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, பிழை திருத்தம், தகவல் சரிபார்ப்பு மற்றும் மொழிநடை ஆகியவை சரி செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளுடன், தமிழ் உள்ளிட்ட அந்தந்த மொழிகளில் நேரடியாக எழுதப்படும் அறிவியல் கட்டுரைகளும் இந்த இதழ்களில் இடம்பெறும்.

அறிவியல் தகவல்களை மக்கள் தங்களது மொழியிலேயே எளிதாகப் பெறுவதுடன், அந்தந்த பகுதிகளின் அறிவியல் சாதனைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களையும் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று CSIR-NIScPR தெரிவித்துள்ளது.

தமிழ் ‘அறிவியல் அறிக்கையாளர்’ இதழின் ஆசிரியராக டாக்டர் எஸ். புவனேஷ், இணை ஆசிரியராக டாக்டர் எல். சந்தியா செயல்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் CSIR தலைமை இயக்குநரும் DSIR செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி, CSIR-NIScPR இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share