வங்கிகள் இன்று திறப்பு: கருப்பு பேட்ஜுடன் ஊழியர்கள் பணி… 3 நாள் ஸ்டிரைக் – பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் ஆதரவு!

Published On:

| By Mathi

Bank Strike

நாடு முழுவதும் நாளை முதல் 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இன்று (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமையும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இன்று வங்கிகள் திறப்பு

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான United Forum of Bank Unions (UFBU), செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

இதற்காக வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்புக் கிளைகள் இன்று முழுமையாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

பணிக்கு வரமாட்டோம்

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வருமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறி, அதற்கு அகில இந்திய யூனியன் வங்கி அதிகாரிகள் ஊழியர் சங்கம் (AIUBOSA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை தனது உறுப்பினர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று AIUBOSA அறிவுறுத்தியுள்ளது.

கருப்பு பேட்ஜுடன் பணிக்கு வரும் ஊழியர்கள்

அதேநேரத்தில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள United Forum of Bank Unions (UFBU) நேற்று வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 27 வேலைநிறுத்த நாள் அல்ல என்பதால், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்று பணிக்கு வருமாறு தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

எனினும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வங்கிகளைத் திறப்பதன் உண்மையான நோக்கம் 3 நாள் வேலைநிறுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதுதான் என்று UFBU குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கருப்பு உடை, கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு ரிப்பன் அணிந்து உறுப்பினர்கள் இன்று பணிக்கு வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக IBA மற்றும் வங்கி சங்கங்களுக்கு இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், IBA தலைவர் தலைமையில் ஆன்லைன் கூட்டமும் நடைபெற்றதாகவும் UFBU தெரிவித்துள்ளது. ஆனால் கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

எல்லை மீற வேண்டாம்: AIBEA எச்சரிக்கை

இதற்கிடையே வங்கி நிர்வாகங்கள் எல்லை மீறி செயல்பட வேண்டாம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

செப்டம்பர் 26ஆம் தேதி சி.எச். வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரத்தில் ஐந்து நாள் வங்கி வேலை முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்தே UFBU வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து வழிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில்தான் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் என்பது தொழிற்சங்க நடவடிக்கை. இது தொழிற்சங்கங்களுக்கும் வங்கி நிர்வாகங்களுக்கும் இடையிலான போர் அல்ல. ஆனால் சில வங்கி நிர்வாகங்கள் இதனை போராக மாற்றுகின்றன. தேவையற்ற, நியாயமற்ற, சட்டவிரோதமான உத்தரவுகள் ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்படுகின்றன. ஊழியர்களை குற்றவாளிகள் போலவும், தொழிற்சங்கங்களை வில்லன்கள் போலவும் நடத்தும் அளவுக்கு சில நிர்வாகங்கள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. அவர்கள் எல்லை மீறுகின்றனர்.

நாங்கள் போரில் ஈடுபடவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம். வன்முறைக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. எனவே வங்கி நிர்வாகங்கள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நாளை முதல் 3 நாள் ஸ்டிரைக்

இதற்கிடையே செப்டம்பர் 28 முதல் 30 வரை திட்டமிட்டபடி மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

வங்கி சங்கங்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் 5 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் தீர்வு ஏற்படாததால் வேலைநிறுத்தம் தொடர்கிறது.

வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி கிளை சார்ந்த சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால், SBI உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களை ஏடிஎம், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் மற்றும் UPI உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளன.

காப்பீட்டு ஊழியர்கள் ஆதரவு

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கம் (All India Insurance Employees’ Association – AIIEA) ஆதரவு தெரிவித்துள்ளது.

NABARD ஊழியர்கள் ஆதரவு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு NABARD ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அகில இந்திய NABARD ஊழியர்கள் சங்கத்தின் (All India NABARD Employees’ Association – AINBEA) செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 29ஆம் தேதி நாடு முழுவதும் NABARD ஊழியர்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய துறை ஊழியர்களும் ஆதரவு

வங்கி ஊழியர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தத்துக்கு இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொழிலாளர் கூட்டமைப்பு (Petroleum & Gas Workers’ Federation of India – PGWFI) ஆதரவு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 26ஆம் தேதி கூட்டமைப்பின் தலைவர் பிரதீப் மயேகர், பொதுச் செயலாளர் நோகன் சந்திர சுடியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தித் துறை ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

தனியார்மயமாக்கல், அவுட்சோர்சிங், அதிகரிக்கும் பணிச்சுமை, காலிப் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த கூட்டமைப்பு, வாரத்தில் 5 நாள் வங்கி வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

“வங்கி ஊழியர்களுடன் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை ஊழியர்கள் தோளோடு தோள் நின்று ஆதரவு அளிக்கிறோம்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share