சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவர்களது ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
தென் மண்டல சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நிலவரம் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று (செப்டம்பர் 26) மதுரையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஐஜி, காவல் ஆணையர்கள், டிஐஜி, எஸ்பி, டிசிபி, மற்றும் ஏஎஸ்பி உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து அறிவுறுத்தினார்.
குறிப்பாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, அவர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், தேவையான சந்தர்ப்பங்களில் ஜாமீன் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தவும், போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, காவல்துறையினரின் குறை தீர்ப்பு கூட்டமும் நடைபெற்றது.
அப்போது, தென் மண்டலம் மற்றும் மதுரை மாநகரைச் சேர்ந்த 65 காவல் ஆளினர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து மதுரை மீனாட்சியமமன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தியின் போது சிறப்பாக பணியாற்றிய 62 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு டிஜிபி பாராட்டுகளை தெரிவித்தார்.
