ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கான MDR கட்டணம்: மத்திய அரசின் வரி இல்லை – நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On:

| By Mathi

Nirmala Sitharaman-UPI

ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் MDR (Merchant Discount Rate) கட்டணம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், “இது மத்திய அரசு விதித்த வரியோ, செஸ் அல்லது சர்சார்ஜோ அல்ல; இந்தக் கட்டணத்தால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இப்போது ஒரு சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இதன் மீது (UPI) வரி விதித்துவிட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த வரியையும் விதிக்கவில்லை. செஸ் அல்லது சர்சார்ஜும் விதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்தக் கட்டணத்தின் மூலம் வசூலிக்கப்படும் பணம் மத்திய அரசுக்கும் வராது. அரசின் Consolidated Fund-க்கும் செல்லாது. எனவே இதை மத்திய அரசு விதித்த வரியாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

MDR கட்டணம் எதற்காக?

QR Code மூலம் பணம் செலுத்துவதற்கான சேவையை வழங்குபவர்கள், POS இயந்திரங்களை வழங்குபவர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல தரப்பினர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பில் செயல்படுகின்றனர்.
வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வியாபாரியின் வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. அந்தச் சேவைக்காகத்தான் MDR எனப்படும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தத் தொகை மத்திய அரசுக்குச் செல்வதில்லை. பணப் பரிவர்த்தனைக்கான சேவையை வழங்கும் அமைப்புகள், வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்களுக்கிடையே அது பகிரப்படுகிறது.

ரூ.2,000 வரை கட்டணம் இல்லை

ரூ.2,000 வரையிலான UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு இந்த MDR கட்டணம் கிடையாது. ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்குத்தான் MDR பொருந்தும். ஆனால் அந்தக் கட்டணத்தையும் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியதில்லை. அது வணிகர்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை சேவை அமைப்புகளுக்கு இடையேயானது.

ADVERTISEMENT

ரூ.5,000 பொருள் வாங்கினால் பில் ரூ.5,000 தான்

ஒருவர் ரூ.2,000 மதிப்புள்ள பொருளை வாங்கினால் அவரது பில் ரூ.2,000 தான். அதேபோல ரூ.5,000 மதிப்புள்ள பொருளை வாங்கினால் அவரது பில் ரூ.5,000 தான். MDR கட்டணத்தைத் தனியாக வாடிக்கையாளரின் பில்லில் சேர்க்க முடியாது.

எனவே ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு MDR இருப்பதால், அந்தக் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது.

கிரெடிட், டெபிட் கார்டுகளைப் போல..

இப்போதும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது MDR இருக்கிறது. ஆனால் அந்த MDR தொகை வாடிக்கையாளரின் பில்லில் தனியாக வருவதில்லை. அதேபோலத்தான் UPI பரிவர்த்தனைகளிலும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது வாடிக்கையாளர் மீது விதிக்கப்படும் கட்டணம் அல்ல.

எனவே இது மத்திய அரசு விதித்த வரி என்ற கருத்து தவறானது. வரியோ, செஸ்ஸோ, சர்சார்ஜோ மத்திய அரசு விதிக்கவில்லை. இதன் மூலம் வசூலிக்கப்படும் பணமும் மத்திய அரசுக்கு வராது. சேவையை வழங்குபவர்களுக்கிடையேயான கட்டணமாகவே இது இருக்கும். இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share