காசா போரில் உயிரிழந்தவர்களை பத்திரிகையாளர்கள் என BBC English மற்றும் BBC Arabic வெளியிட்ட பல்வேறு செய்திகளில் குறிப்பிடப்பட்ட நிலையில், அவர்களில் 53 பேருக்கு ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் உள்ளிட்ட ஆயுத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக பிரிட்டனின் The Telegraph ஊடகம் நடத்திய ஆய்வில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது BBC நிறுவனத்தை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

BBC Arabic வெளியிட்ட பட்டியல்
“2024 முதல் காசா போரில் கொல்லப்பட்ட முக்கிய பத்திரிகையாளர்கள் யார்?” என்ற தலைப்பில் BBC News Arabic-ன் லைலா பஷார் அல்-க்லூப் எழுதிய கட்டுரை 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 26 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், காசா போர் தொடங்கிய பிறகு உயிரிழந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருவதாக BBC தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை 2023-லேயே எழுதத் தொடங்கியதாகவும் BBC குறிப்பிடுகிறது.
2024-ல் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டவர்களின் நீண்ட பட்டியலையும் BBC Arabic வெளியிட்டுள்ளது. அதில் Al-Quds Al-Youm, Al-Aqsa TV, Quds News Network, Palestine Now உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025-ல் உயிரிழந்ததாக Momen Aliwa, Mohammed Al-Khalidi, Ibrahim Daher, Mohammed Nofal, Ismail Abu Hatab, Hassan Abu Warda உள்ளிட்ட பலரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தில் தற்போது முக்கியத்துவம் பெற்றிருப்பது BBC Arabic கட்டுரையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய குறிப்பு.
“செப்டம்பர் 2026: அண்மையில் வெளியான தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சில நபர்களுக்கு பத்திரிகை அல்லாத வேறு பணிகள் இருந்தது தெரியவந்ததால், அவர்களது பெயர்கள் இந்தக் கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன” என்று BBC Arabic கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் என முன்பு பட்டியலிட்டவர்களில் சிலரை, புதிய தகவல்கள் கிடைத்த பிறகு BBC-யே தனது கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளது.
Telegraph ஆய்வு சொல்வது என்ன?
The Telegraph ஆய்வின்படி, BBC செய்திகளில் பத்திரிகையாளர்கள் என குறிப்பிடப்பட்ட 53 பேரில் சிலர் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், சிலர் ஆயுதங்களுடன் அல்லது போராளிகளுக்கான உடைகளுடன் காணப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இவர்களில் சிலரை ஹமாஸ் உள்ளிட்ட ஆயுத அமைப்புகளே தங்களது உறுப்பினர்கள் அல்லது உயிரிழந்த போராளிகள் என இரங்கல் பதிவுகளில் குறிப்பிட்டதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த விவகாரத்தில் குறிப்பிடப்படும் உதாரணங்களில் ஒருவர் Abdullah Darwish. BBC Arabic அவரை Al-Aqsa TV-யின் புகைப்படக் கலைஞராகக் குறிப்பிட்டிருந்ததாக The Telegraph ஆய்வை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் ஹமாஸின் Al-Qassam Brigades அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்றவர் என்றும் பின்னர் தகவல்கள் வெளியானதாகக் கூறப்பட்டுள்ளது.



1,200 பேர் பலியான அக்டோபர் 7 தாக்குதல்
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் பிணைக் கைதிகளாக காசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.
இந்தப் பின்னணியில்தான், பத்திரிகையாளர் என அடையாளப்படுத்தப்பட்டவர்களில் யாராவது அக்டோபர் 7 தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்றார்களா என்ற கேள்வியும் தற்போதைய சர்ச்சையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆயுதங்களுடன் வீடியோ?
53 பேர் தொடர்பான ஆய்வில் மேலும் சிலர் சமூக வலைதளங்களில் ஆயுதங்கள் அல்லது போர் உடைகளுடன் காணப்பட்டதாக The Telegraph குற்றம்சாட்டியுள்ளது.

உதாரணமாக Rizq Abu Shkian என்பவர் BBC Arabic பட்டியலில் Palestine Now ஊடகத்தைச் சேர்ந்தவராக இடம்பெற்றிருந்தார். அவர் ஹமாஸ் சீருடையில் துப்பாக்கியுடன் காணப்படும் வீடியோ இருப்பதாக The Telegraph ஆய்வை மேற்கோள்காட்டிய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று Yaqoub al-Barsh உள்ளிட்ட மேலும் சிலர் தொடர்பாக ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்ட பதிவுகள் ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
சமூக வலைதளப் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் இரங்கல் குறிப்புகள் உள்ளிட்டவை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.
CPJ-யும் மறுஆய்வு
இந்த விவகாரம் BBC-யுடன் மட்டும் நிற்கவில்லை. உலகம் முழுவதும் கொல்லப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் Committee to Protect Journalists (CPJ), காசா போர் தொடர்பான தனது பட்டியலையும் முழுமையாக மறுஆய்வு செய்துள்ளது.
CPJ பத்திரிகையாளர்கள் என ஏற்கெனவே பதிவு செய்திருந்த சிலரை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புகள் தங்களது போராளிகள் என இரங்கல் அறிவிப்புகளில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் மாதத்தில் வெளியிட்ட முதல்கட்ட மறுஆய்வில், பின்னர் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகள் என உறுதிப்படுத்தப்பட்ட எட்டு பேரின் பெயர்களை நீக்கியதாக CPJ தெரிவித்தது.

22 பேரை நீக்கிய CPJ
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 24 அன்று விரிவான மறுஆய்வின் முடிவை CPJ வெளியிட்டது. 2023 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் கொல்லப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த 229 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் விவரங்களை CPJ மறுஆய்வு செய்தது.
மறுஆய்வின் முடிவில், 22 பேரின் பெயர்களை CPJ தனது பட்டியலிலிருந்து நீக்கியது. மேலும் 12 பேரின் பதிவுகள் வேறு வகைக்கு மாற்றப்பட்டன. ஏற்கெனவே பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்த 6 பேர், புதிய ஆதாரங்களின் அடிப்படையில் மீண்டும் பத்திரிகையாளர் உயிரிழப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
ஒருவர் உண்மையில் பத்திரிகையாளர் அல்லது ஊடகப் பணியாளராக இல்லாதது தெரியவந்தாலோ, உயிரிழந்தபோது அந்தப் பணியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடியாக ஆயுத மோதலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தாலோ பட்டியலில் இருந்து நீக்குவது தனது நடைமுறை என்று CPJ விளக்கியுள்ளது.
ஆயுத அமைப்புடன் தொடர்பு இருந்தாலே போராளியா?
இந்த இடத்தில்தான் முக்கியமான வேறுபாடு உள்ளது. ஒருவர் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய ஊடகத்தில் பணியாற்றினார் என்பதற்காக மட்டுமே அவரை போராளியாக CPJ கருதுவதில்லை.
ஒருவரின் அரசியல் கருத்து அல்லது அமைப்புசார் தொடர்பு மட்டும் அவரை பத்திரிகையாளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான காரணம் அல்ல. ஆனால் அவர் நேரடியாக ஆயுத மோதலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால், அவரை பத்திரிகையாளர் உயிரிழப்புப் பட்டியலில் சேர்ப்பதில்லை என்று CPJ கூறுகிறது.

Anas Al-Sharif விவகாரம்
BBC Arabic கட்டுரையிலேயே இதற்கான மற்றொரு உதாரணம் இருக்கிறது. Al Jazeera செய்தியாளர் Anas Al-Sharif 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று நான்கு சக ஊடகவியலாளர்களுடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக BBC பதிவு செய்துள்ளது. இதற்கு ஆம்னஸ்டி இண்டர்நேஷன் போன்ற மனித உரிமை அமைப்புகள் கண்டனமும் தெரிவித்துள்ளன.
ஆனால் அதே கட்டுரையில், Anas Al-Sharif ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவராகச் செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியதையும் BBC பதிவு செய்துள்ளது. மேலும்அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்ய இஸ்ரேல் ராணுவம் சொற்பமான ஆதாரங்களையே வழங்கியதாகவும், Anas Al-Sharif அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததாகவும், Al Jazeera மற்றும் மனித உரிமை அமைப்புகளும் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்ததாகவும் BBC குறிப்பிட்டுள்ளது.
BBC என்ன சொல்கிறது?
The Telegraph ஆய்வைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தனது செய்திகளில் இடம்பெற்ற நபர்களின் விவரங்களை மறுஆய்வு செய்து வருவதாக BBC தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் BBC Arabic-ன் சொந்த கட்டுரையிலும், புதிய தகவல்களின் அடிப்படையில் “non-journalistic roles” இருந்த சிலரின் பெயர்கள் செப்டம்பர் 2026-ல் நீக்கப்பட்டுள்ளன என்ற குறிப்பு தற்போது இடம்பெற்றுள்ளது.
இதனால் தற்போதைய சர்ச்சையின் மையம், “காசாவில் கொல்லப்பட்ட 53 பத்திரிகையாளர்களும் தீவிரவாதிகள்” என்ற பொதுவான முடிவு அல்ல. BBC செய்திகளில் பத்திரிகையாளர்கள் என குறிப்பிடப்பட்டவர்களில் 53 பேரின் பின்னணி குறித்து The Telegraph எழுப்பிய குற்றச்சாட்டுகளும், புதிய ஆதாரங்களுக்குப் பிறகு BBC மற்றும் CPJ தங்களது பட்டியல்களில் செய்துள்ள மாற்றங்களுமே தற்போது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
