ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணத்தை எதிர்த்து, அக்டோபர் 2-ல் ‘No UPI Day’ கடைப்பிடிக்க சில வணிக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அன்று UPI பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகர்களுக்கான UPI பரிவர்த்தனைகளுக்கு (Person-to-Merchant – P2M) அக்டோபர் 15 முதல் 0.4 சதவிகித Merchant Discount Rate (MDR) கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படாமல், வணிகர் தரப்பில் செலுத்தப்பட வேண்டும். MDR கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறிய லாபத்தில் வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு இந்தக் கட்டணம் கூடுதல் சுமையாக இருக்கும் என்கின்றன வணிக அமைப்புகள். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்த பிறகு, அதற்கான செலவை வணிகர்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் அவை வலியுறுத்துகின்றன.
அக்டோபர் 2-ல் போராட்டம்
இந்த MDR கட்டண முறைக்கு எதிராக, மகாராஷ்டிரா வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை சபை (MACCIA), அக்டோபர் 2ஆம் தேதியை ‘No UPI Day’ ஆக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் UPI ஸ்கேனர்கள், QR Code, Sound Box உள்ளிட்டவற்றை கறுப்புத் துணியால் மூடி எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சில்லறை வணிகர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு (FRTWA), அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (AICPDF), அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (AIMRA), அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு (AIJGF), அகில இந்திய சமையல் எண்ணெய் வணிகர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் என்று MACCIA தலைவர் ரவீந்திர மங்காவே தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வணிகர்கள் ஏற்கெனவே MDR கட்டணத்திற்கு எதிராக ‘No UPI Day’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் சுமார் 20 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் கூட்டமைப்பு என்ன சொல்கிறது?
இதற்கிடையே, அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் ‘No UPI Day’ கடைப்பிடிக்க இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders – CAIT) அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் பரவின. இதனை CAIT திட்டவட்டமாக மறுத்துள்ளது.
“அக்டோபர் 2ஆம் தேதி ‘No UPI Day’ கடைப்பிடிக்க CAIT எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. அதனை அறிவிக்கவோ, ஆதரிக்கவோ, அதில் பங்கேற்க முடிவு செய்யவோ இல்லை. CAIT பெயரில் பரவும் இதுபோன்ற தகவல்கள் தவறானவை” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், MDR விவகாரத்தில் சில வணிக அமைப்புகள் மற்றும் பிராந்திய அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை அறிவித்திருக்கலாம் என்றும், அவை அந்தந்த அமைப்புகளின் முடிவுகள் என்றும் CAIT தெளிவுபடுத்தியுள்ளது.
UPI மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் CAIT தெரிவித்துள்ளது.
அக்.2-ல் UPI -ல் பணம் செலுத்தலாமா?
அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் UPI சேவை நிறுத்தப்படவில்லை.
‘No UPI Day’ என்பது UPI சேவையையே முடக்கும் போராட்டம் அல்ல. MDR கட்டணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சில வணிக அமைப்புகள், அன்றைய தினம் UPI பணப் பரிவர்த்தனைகளை ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட விடுத்துள்ள அழைப்பாகும்.
எனவே, ‘No UPI Day’ போராட்டத்தில் பங்கேற்கும் சில கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மட்டும் அக்டோபர் 2ஆம் தேதி UPI மூலம் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். மற்ற இடங்களில் வழக்கம்போல் UPI பயன்படுத்த முடியும்.
