சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்: கொந்தளித்த உச்ச நீதிமன்றம் – என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Minor Rape Cases SC

டெல்லியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சிறுமிகள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்குகள் அடுத்தடுத்து பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT
  • செப்டம்பர் 10ஆம் தேதி 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது உடல் மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
  • செப்டம்பர் 14ஆம் தேதி 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 17ஆம் தேதி 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 21ஆம் தேதி டெல்லியின் கல்காஜி கோயில் அருகே உள்ள பூங்காவுக்குச் சென்ற 17 வயது சிறுமியை, காவல்துறையினர் என்று கூறிக்கொண்ட மூன்று பேர் தனியாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  • கிரேட்டர் நொய்டாவில் இருந்து டெல்லி சென்ற பேருந்தில் 16 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த சம்பவங்களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் அமர்வு இந்த விவகாரத்தை இன்று செப்டம்பர் 28-ஆம் தேதி விசாரித்தது. இந்த விவகாரத்தை தனி வழக்காகவே பதிவு செய்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்:

  • டெல்லியில் அடுத்தடுத்து நடக்கும் பாலியல் குற்றங்கள், பொதுமக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன.
  • பெண்களும் குழந்தைகளும் வன்முறை குறித்து அச்சமின்றி, கண்ணியத்துடன் வாழ்வது அவர்களின் அடிப்படை உரிமை.
  • 2012ஆம் ஆண்டு நடந்த நிர்பயா சம்பவத்துடன் தற்போதைய சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் உண்மையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
  • அச்சமின்றி, கண்ணியத்துடன் வாழும் உரிமை அரசியலமைப்பின் 21-வது பிரிவு வழங்கும் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும்.
  • சாலைகள், பூங்காக்கள், பேருந்துகள், மெட்ரோ நிலையங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் போன்ற பொது இடங்கள் மக்களுக்கு ஆபத்தான இடங்களாக மாற அனுமதிக்க முடியாது.
  • போதிய விளக்கு வசதி, கண்காணிப்பு மற்றும் காவல்துறை ரோந்து இல்லாதது போன்ற குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
  • பாலியல் குற்றம் நடந்த பிறகு மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கவலைப்படுவதும் ஆதரவு தெரிவிப்பதும் மட்டும் போதுமானது அல்ல. அது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வும் அல்ல. அனைவருக்கும் கண்கூடாகத் தெரியும்படியான நடவடிக்கைகள்தான் தேவை.
  • குற்றங்களைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பது யாருடைய பொறுப்போ, அவர்களிடம் அதற்கான பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share