ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் முதல் முறையாக இன்று (அக்டோபர் 13) ஆந்திரா சென்றுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:30 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா கிளம்பினார். பிற்பகல் 3:45 மணியளவில் விஜயவாடா சென்றடைந்த விஜய்க்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திர அரசு சார்பில் அம்மாநில அமைச்சர்கள் நேரில் வரவேற்றனர். அங்கு முதல்வர் விஜய்யை நேரில் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த முதல்வருக்குச் செண்டை மேளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு பூஜையில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.
அங்கு முதல்வர் விஜய்யைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் திரண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் நிலவியது.
இதன்பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் முதல்வர் விஜய், பின்னர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணைச் சந்தித்துப் பேசுகிறார்.
