முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட அமலாக்க துறையின் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு செம்மண் வெட்டி எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதில் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதற்கிடையே செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறி பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டவருக்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் மூல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால் அமலாக்கத்துறை வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது. எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அமலாக்கத்துறை வழக்கை தொடர அனுமதிக்க முடியாது என்றும் வழக்கை ரத்து செய்கிறோம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
