சென்னையில் வடகிழக்குப் பருவமழை ‘சம்பவம்’ – 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!

Published On:

| By Mathi

Chennai-30CM Rain

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர் தமிழகத்திலேயே முதல் முறையாக 30 செ.மீ. மழை சென்னையில் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை கத்திவாக்கத்தில் ஒரே மணி நேரத்தில் மட்டும் 14.8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடசென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை கத்திவாக்கத்தில் 260 மி.மீ. அதாவது 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் ஒரே மணி நேரத்தில் மட்டும் 148 மி.மீ. அதாவது 14.8 செ.மீ. மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் இதுபோன்ற மழைப்பொழிவை இதுவரை நான் பார்த்ததில்லை. வாழ்நாளில் அரிதாகப் பார்க்கக்கூடிய அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. குறிப்பாகக் கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மிகக் கடுமையான மழை பெய்துள்ளது.

மேலும் நடப்பு வடகிழக்குப் பருவமழையில் தமிழகத்திலேயே முதல் முறையாக 300 மி.மீ. அதாவது 30 செ.மீ. மழை சென்னையில் பதிவாகியுள்ளது. இன்றைய மழைப்பொழிவு நம்ப முடியாத அளவுக்கு உள்ளது.

ADVERTISEMENT

வடசென்னையில் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறையும். அதே நேரத்தில் தென்சென்னை முதல் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதிகள் வரை மழை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சென்னை பாரிமுனையில் 17.5 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அக்டோபர் 18-ந் தேதி அதிகாலை 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share