சென்னையில் நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை முதலே கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மழைநீரை அகற்றுதல், சாலைகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
சென்னையில் மேகவெடிப்பைப் போல பல இடங்களில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளிலும், மணலி, ராயபுரம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மோட்டார்கள், டிராக்டர்கள், சூப்பர் சக்கர் வாகனங்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் கனமழை பெய்து கொண்டிருந்தபோதே மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சுரங்கப்பாதைகள், முக்கியச் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக நள்ளிரவிலும் மோட்டார்கள், டிராக்டர்கள், சூப்பர் சக்கர் வாகனங்கள் இயக்கப்பட்டன.
மழை பாதிப்புகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இரவு 9.30 மணி முதல் விடிய விடிய அடுத்தடுத்து தகவல்களை வெளியிட்டு வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் ஆலோசனை
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங் அலுவலகத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வருகை தந்தனர். அவர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலும் ஆணையாளர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் சாலை சந்திப்பில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணிகளையும் ராயபுரம் மண்டலத்தில் உள்ள பிரகாசம் சாலையில் நடைபெற்ற மழைநீர் அகற்றும் பணிகளையும் ஆணையாளர் சமீரன் பார்வையிட்டார். அவருடன் வடக்கு வட்டார துணை ஆணையாளர் சுவேதா சுமன், மண்டல உதவி ஆணையாளர், கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பெரம்பூர், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைகளில் மோட்டார்கள் இயக்கம்
பெரம்பூர் சுரங்கப்பாதையில் கனமழையால் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றுவதற்காக மோட்டார்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கௌஷிக் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். மழைநீரை விரைந்து அகற்றி போக்குவரத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்தது.
நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையிலும் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்றன.
மண்டலம் 5, வார்டு 52-ல் உள்ள எம்.சி. சாலை சுரங்கப்பாதை மற்றும் மண்டலம் 8, வார்டு 94-ல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

மணலி, திருவொற்றியூரில் மழைநீர் அகற்றும் பணிகள்
மணலி காமராஜர் சாலையில் தேங்கியிருந்த மழைநீரை டிராக்டர் மற்றும் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன. இணை ஆணையாளர் (பணிகள்) செ. சரவணன் இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள எல்லையம்மன் கோவில் பகுதியிலும் டிராக்டர் மற்றும் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.
மணலி நியூ டவுனில் உள்ள 60 அடி மற்றும் 80 அடி சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு, சாலைகள் மீண்டும் மழைநீர் தேக்கமின்றிக் காணப்படுகிறது.
திருவொற்றியூர் பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் பம்ப் ஹவுஸில் மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்காக 100 HP திறன் கொண்ட மோட்டார் இயக்கப்பட்டது.
போரூர் சந்திப்பில் மழைநீர் தேக்கம் இல்லை
போரூர் சந்திப்பில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் மூலம் தண்ணீர் சீராக வெளியேறி வருவதாகவும், போரூர் சந்திப்பில் மழைநீர் தேக்கம் இல்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மண்டலம் 13-ல் டிராக்டர் மற்றும் மோட்டார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் அகற்றும் பணிகளையும் அஃதாப் ரசூல் ஆய்வு செய்தார்.
மண்டலம் 11, வார்டு 155-ல் உள்ள பக்தி வேதாந்தா அவென்யூவில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு, சாலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கால்வாய்களில் நீரோட்டம் குறித்து ஆய்வு
ஓட்டேரி நல்லா கால்வாயை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கௌஷிக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாயில் நீரோட்டம் சீராக இருப்பதாகவும், தண்ணீர் வெளியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஹஜ் கமிட்டி சந்திப்பு அருகே உள்ள டிமெல்லோஸ் சாலையிலும் மழைநீர் தேக்கம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
மண்டலம் 4, வார்டு 37-ல் உள்ள முல்லை நகர் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய் பகுதிகளில் இணை ஆணையாளர் செ. சரவணன் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் சீராக வெளியேறுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் பார்வையிட்டார்.

சூப்பர் சக்கர் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றம்
மண்டலம் 11-ல் உள்ள ஆற்காடு சாலையில் சூப்பர் சக்கர் லாரி மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்றன. மண்டலம் 6, வார்டு 76-ல் உள்ள செல்லப்பா தெருவிலும் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.
மண்டலம் 6, வார்டு 78-ல் உள்ள தானா தெரு மற்றும் மண்டலம் 5, வார்டு 58-ல் உள்ள சிந்தாதிரிப்பேட்டை சாலையில் டிராக்டர் மற்றும் மோட்டார் பம்ப் இயந்திரங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்த மண்டல அலுவலர்கள், மழைநீரை விரைந்து அகற்றுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்
கனமழையின் காரணமாக மண்டலம் 8, வார்டு 96-ல் உள்ள புதிய தெருவில் பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. தகவல் கிடைத்ததும் மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மண்டலம் 4, வார்டு 37-ல் உள்ள சசிரேகம்மா நகரிலும் பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. காவல்துறையின் உதவியுடன் அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது.
மண்டலம் 12, வார்டு 162-ல் உள்ள இன்னர் ரிங் ரோட்டில் சாலையோர மரக்கிளைகளை வெட்டிச் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
